இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று (மார்ச் 9) அதிகாலை, அவர் காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். அசாம் மாநிலம் சென்றடைந்த அவர், இன்று (மார்ச் 9) காலை 5.30 மணிக்கு அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவிற்கு சென்றார். அங்கு சென்ற பிரதமர் மோடி பூங்காவை சுற்றிப் பார்த்தார்.
பின்னர் யானை சவாரி செய்தார். பயணத்தின் போது, பிரதமர் மோடி சில இயற்கை காட்சிகளை கேமராவில் படம் பிடித்தார். மேலும், பூங்காவில் இருக்கும் யானைகளை புகைப்படம் எடுத்தார். அதோடு, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரூ. 55,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
காசிரங்கா பூங்காவுக்கு சென்ற புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி “இன்று காலை நான் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்தேன். பசுமை போர்வைக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமானது கம்பீரமான ஒரு கொம்பு காண்டாமிருகம் உட்பட பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன .காசிரங்கா தேசியப் பூங்காவிற்குச் சென்று, அதன் இயற்கைக் காட்சிகளின் இணையற்ற அழகையும், அசாம் மக்களின் அரவணைப்பையும் அனுபவிக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். காசிரங்கா பூங்கா உங்களை அசாமின் இதயத்துடன் ஆழமாக இணைக்கும் இடமாகும்” என்று தெரிவித்துள்ளார்.