வலிமேற்கு பிரதேசசபை செயலாளர் பாலரூபனால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றதாக அங்கு கடமை புரியும் ஊழியர் ஒருவர் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மரியதாசன் யோசெவ் இதயராஜ் ஆகிய நான் வலிமேற்கு பிரதேச சபையில் சிரேஸ்ர வருமானப்பரிசோதகராக கடமைபுரிகின்றேன். சங்கானை உப அலுவலகத்தில் ஒன்றறைவருடமும் சுழிபுரம் உப அலுவலகத்தில் ஆறு மாதமும் கடமை புரிந்து வருகிறேன். நான் சங்கானை உப அலுவலகத்தில் பணிபுரியும் போது பொறுப்பதிகாரி, சக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என எல்லோர் மட்டிலும் நன்மதிப்புப் பெற்றவன்.
பிரதேச சபை உறுப்பினர்
மேலும் நான் வலிவடக்கு பிரதேசசபையின் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னால் கௌரவ உறுப்பினரும் ஆவேன். உள்ளுராட்சி சபை காலம் முடிவுற்றதும் எனக்கு எதிராக பழிவாங்கும் படலம் செயலாளரால் ஆரம்பிக்கப்பட்டது. செயலாளர் பாலரூபன் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான ஒருவர் அதன் காரணமாகவே நான் தொடர்ந்து பழிவாங்கப்படுகின்றேன்.
பொதுவெளியில் உத்தியோகத்தர் முன் அவமானப்படுத்தப்பட்டமை.
அண்மையில் நடந்த உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடலில் நான் ஒரு சிரேஸ்ட வருமானப்பரிசோதகர் என்றும் பாராமல் மிக மோசமானதும் மிக கீழ்த்தரமானதுமான சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை பாவித்து அச்சுறுத்தும் விதமாக பேசியுள்ளார்.
கண்ணாடி அறையை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டமை.
சுழிபுரம் உப அலுவலகத்தில் காலம் காலமாக குறித்த கண்ணாடி அறையில் இருந்தே வருமானபரிசோதகர்கள் கடமையாற்றி வருகின்றோம். தற்போது சுழிபுரம் பிரதேசத்தில் உள்ள பின்தங்கிய சிறார்களின் கணினி அறிவை மேம்படுத்துவதற்காக பாவிக்கப்பட இருப்பதாக கூறி குறித்த அறையை விட்டு வெளியேற பணிக்கப்படுகிறேன்.
சுழிபுரம் உபஅலுவலகமானது அதிக மக்கள் தொகையை கொண்டதும் காலை முதல் மாலை வரை அதிகளவான மக்கள் வந்து செல்லும் உபஅலுவலகமாகும் ஆகவே இது எந்த வகையிலும் மாணவரின் கல்வி தேவைக்கு பயன்படுத்தக் கூடிய சூழல் இல்லாமலே காணப்படுகிறது. செயலாளர் அவர்களின் நோக்கம் என்னை கண்ணாடி அறையில் இருந்து வெளியேற்றுவதே தவிர மாணவரின் கணினி கல்வி வளர்ச்சிக்கு பொருத்தமான ஒரு இடத்தை அமைத்து கொடுத் கொடுக்கும் நோக்கம் இல்லை என்பதே புலப்படுகிறது.
நான் தனிப்பட்ட கண்ணாடி அறையில் இருந்து பணியாற்றும் போதுதான் என்னால் சிறப்பாக கடமைகளை ஆற்றமுடிகிறது. என்னை கண்ணாடி அறையில் இருந்து வெளியேற்றி மக்களுக்கான சேவையில் பின்னடைவை ஏற்படுத்துவதே செயலாளர் பாலரூபனின் நோக்கமாக காணப்படுகிறது.
உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மட்டில் எனது நன்மதிப்பை குறைத்தல்
என்மீது சுமத்தப்படும் பொய் குற்றச்சாட்டுகள் எனக்கு எதிரான பழிவாங்கும் செயற்பாடுகள் கடிதம் ஊடாக எனக்கு வழங்கப்படும் பொழுது உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கும் பிரதிகள் அனுப்பப்படுகின்றன. இச் செயற்பாடானது அவர்களுக்கு என்மட்டில் உள்ள நன்மதிப்பை குறைக்கும் ஒரு செயற்பாடாக அமைவதோடு எனக்கு மன உளச்சலை ஏற்படுத்தும் ஒரு நிலைமையை தோற்றுவிக்கிறது. இது பொது மக்களுக்கான எனது சேவையில் பாரிய பின்னடைவான ஏற்படுத்துகிறது.
இந்த இடத்தில் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி என்னை சேவை செய்ய விடாமல் குளப்பி பொதுமக்களுக்கான சேவைகளில் தடையை உண்டாக்குவதில் செயலாளர் பாலரூபன் மிக கீழ்த்தரமான வெற்றியை பதிவு செய்கின்றார். உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர்களுக்கு பிரதிகள் அனுப்புவதன் மூலம் தன்னால் சுய பலத்துடன் சேவை ஆற்றமுடியாத மிக மோசமான ஆளுமை திறன் குறைந்த ஒரு செயலாளராக தன்னை வெளிப்படுத்துகிறார்.
திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் இடமாற்றம்.
நான் சங்கானை உப அலுவலகத்தில் கடமை ஆற்றும் போது ஐக்கிய தேசிய கட்சியின் கௌரவ உறுப்பினராக செயற்பட்டேன். உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்ததும் அவசர அவசரமாக நான் சுழிபுரம் உப அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன்.
நான் சங்கானை உப அலுவலகத்தில் சிறந்த வருமானப்பரிசோதகராக சிறப்பாக கடமை ஆற்றி வந்தேன். சுழிபுரம் அலுவலகத்திலும் சேவையாற்றிய வருமானப்பரிசோதகரும் சிறப்பாக கடமையாற்றிவந்தார். ஐக்கிய தேசியக்கட்சியில் உள்ள வெறுப்பின் காரணமாக நான் வேண்டுமென்றே சுழிபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். அந்த சந்தர்ப்பத்தில் நான் செயலாளரிடம் சென்று எமக்கு முதுகு வலி இருப்பதால் அதிக தூரம் மோட்டார் சைக்கிள் செலுத்த முடியாததால் இடமாற்றத்தை நிறுத்தும் படியாக கேட்டேன். ஐக்கிய தேசியகட்சியில் இருந்த வெறுப்பால் எனது கோரிக்கையை நிராகரித்தார், எந்தக் காரணமும் இன்றி பழிவாங்கும் நோக்கத்தாலேயே இரண்டு வருமானப்பரிசோதகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டோம்.
விடய உத்தியோகத்தரை இடமாற்றியமை.
நான் சுழிபுரம் உப அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்ற போது என்னுடைய விடைய உத்தியோகத்தராக வட்டார உத்தியோகத்தர் திருமதி.உசாலினி கடமை புரிந்தார். ஆனால் அவருடைய செயற்பாடு வருமானப்பரிசோதகரான எனக்கு திருப்திகரமாக காணப்படவில்லை நான் கடைகளுக்கு கடிதங்களை அனுப்பும் படி கூறிய போதும் அதை செய்து முடிக்க முடியாதவராக காணப்பட்டார். அதற்கான காரணத்தை நான் வினவிய போது தான் வீடு வீடாக சென்று சோலைவரி அறவீட்டில் ஈடுபடுவதால் சோர்வாக உள்ளதால் என்னால் உங்களுடைய பணியை செய்ய முடியாதுள்ளது. என கூறினார்.
நான் இது சம்மந்தமாக பொறுப்பதிகாரியிடம் வருமான அறவீடு என்பது சபையின் முதுகெலும்பாக காணப்படும் விடையம் இதற்கு முழுமையாக விடைய உத்தியோகத்தர் ஈடுபடும் போதுதான் வருமான அறவீட்டை செய்ய எனக்கு உதவியாக இருக்கும் என கூறினேன். அதற்கு பொறுப்பதிகாரி சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் சிரேஸ்ர வருமானப்பரிசோதகர் ஆன என்னுடன் எந்த விதமான ஆலோசனையோ கலந்துரையாடலோ மேற்கொள்ளாமல் செயலாளர் பாலரூபன் அவர்கள் குறித்த விடய உத்தியோகத்தரை தலைமை அலுவலகத்துக்கு உள்ளக கணக்காய்வாளராக நியமித்தார்.
2024 ஆண்டு தை, மாசி, பங்குனி போன்ற கால பகுதிகளே வருமான அறவீட்டு பணிக்கான முக்கிய காலப்பகுதி இந்த காலப்பகுதியில் சிரேஸ்ர வருமானப்பரிசோதகராகிய என்னை கருத்தில் கொள்ளாது குறித்த உத்தியோகத்தரை இடமாற்றம் செய்து எனது சேவையை மழுங்கடிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டார். ஒரு சபையின் செயலாளராக இருந்து கொண்டு பொறுப்பற்ற விதமாக தன்னிச்சையாக செயற்பட்டு விட்டு கடமையில் அக்கறை இன்மை என கடிதம் வழங்கியுள்ளார். 2024″ ஆண்டுக்கான வியாபார உரிம அறவீட்டில் மிக மோசமான பின்தங்கிய நிலை காணப்பட முழுகாரணம் செயலாளர் பாலரூபன் என அறியத்தருகின்றேன்.
ஆதன பெயர்மாற்றத்திற்கு பொருத்தமில்லாத வட்டார உத்தியோத்தரை நியமித்தமை.
ஆதன பெயர்மாற்றம் சம்பந்தமாக பொதுமக்கள் அலுவலகத்திற்கு வரும்பொழுது, அவர்களுடைய ஆதன பெயர்மாற்றம் சம்பந்தமான ஆவணங்களை பரிசீலிப்பதும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக வட்டார உத்தியோகத்தரான திருமதி.நாராஜினி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் வீடு வீடாக சென்று சோலைவரி அறவிடும் செயற்பாட்டில் ஈடுபடுவதால் அவரால் அவருக்கு வழங்கப்பட்ட வேலையினை சிறப்பாக வழங்க முடியாத நிலை காணப்பட்டது.
அதன் காரணமாக, பொதுமக்களின் ஆதனபெயர்மாற்றம் சம்பந்தமான ஆவணங்களை பரிசீலிப்பதும், அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்குமான முழுப்பொறுப்பு என்மேலேயே சுமத்தப்பட்டது. விடய உத்தியோகத்தர் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை நானே மேற்கொண்டதால் பெயர் மாற்றப்படிவங்களில் அறிக்கையிடுவதில் தாமதங்கள் ஏற்பட்டது. எனினும் என்னால் முடிந்தளவு சிறப்பாகவே கடமையாற்றினேன். இவ்வாறான திட்டமிடல் இல்லாத பொறுப்புக்கையளிப்புக்கள் பொதுமக்கள் சேவையில் பாரிய பின்னடைவையே ஏற்படுத்துகிறது.
நோய் மற்றும் மரணவீடு
2024 ஆண்டு ஆரம்பத்திலிருந்து எமது குடும்ப உறுப்பினர்கள் மூவரும் அம்மை நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தோம். அத்தோடு எனது மனைவியின் தாயாரும் எதிர்பாராமல் மரணமடைந்த சம்பவமும் எமது வீட்டில் இடம்பெற்றது. அத்தோடு எனது காலில் ஏற்பட்ட கிருமித்தொற்றுக் காரணமாக 3 நாட்கள் நடக்கமுடியாமல் காய்ச்சலுடன் மிகவும் அவதிக்கு உள்ளாகியிருந்தேன்.
கடந்த 2 மாதங்களில் பெரும்பாலான நாட்கள் கடமைக்கு சமூகமளிக்கமுடியவில்லை. இவ்விடயம் சம்பந்தமாக நான் செயலாளருக்கு நேரடியாக எடுத்துரைத்திருந்தேன். எனினும் மனச்சாட்சி அற்ற விதமாக நான் எதிர்கொண்ட துன்ப நிலைகளை கருத்திலெடுக்காமல், கடமையில் அக்கறையின்மை என்ற தலைப்பின் கீழ் எனக்கு கடிகம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த பொருட்கள் வழங்கப்படாமல் உரிமைகள் மறுக்கப்பட்டமை.
மேற்படி விடயமாக நான் சங்கானை உப அலுவலகத்தில் பணிபுரியும் போது ஒரு மின்விசிறி ஒன்றை வழங்கி உதவுமாறு கடிதம் வழங்கியிருந்தேன். 6 மாதங்கள் கடந்த நிலையில் நான் இடமாற்றம் பெற்று சுழிபுரம் உப அலுவலகம் வரும் வரை எனக்கு மின் விசிறி பெற்றுத் தரப்படவில்லை. நான் சுழிபுரம் உப அலுவலகத்திற்கு வந்த பின்பு எனக்கு வழங்கப்பட்ட மேசை மிகவும் பழுதடைந்த கிட்டத்தட்ட 50 வருடங்கள் பழமைவாய்ந்ந மேசையாகும்.
மேசை இலாச்சியில் காணப்பட்ட துவாரத்தின் வழியே உட்செல்லும் எலிகள், எனது கோவைகளின் மேல் எச்சமிட்டு, சிறுநீர்கழிக்கும் நிலை காணப்பட்டது. நான் எனக்கு புதிய மேசை கதிரை தந்துதவுமாறு விண்ணப்பித்திருந்தேன். குறித்த விண்ணப்பத்திற்கு செயலாளர் பாலரூபன் அவர்கள் குறித்த மேசையும் கதிரையும் வழங்கமுடியாது என அறிக்கையிட்டார்.
2 தொழிலாளர்களை என்னிடம் அனுப்பி எனது மேசையில் காணப்படும் எலி உட்செல்லும் துவாரங்களை அடைக்கப் போவதாகவும், எனது மேசையை தேங்காய் தும்பினால் தேய்த்து கழுவித் தருவதாகவும் கூறி இரு தொழிலாளர்களை அனுப்பிவைத்தார் நான் அதற்கு சம்பதம் தெரிவிக்காமல், மீண்டும் எனக்கு மேசையும் கதிரையும் வழங்கவேண்டும் என இருமுறை கடிதம் அனுப்பினேன்.
எனினும் 4 மாதங்கள் கடந்த நிலையில் வசதிகள் குறைவான சிறிய மேசை ஒன்று தரப்பட்டது. ஆனால் இதுவரை கதிரை பெற்றுத் தரப்படவில்லை. இவ்வாறாக ஒரு உத்தியோகத்தரின் அடிப்படை உரிமைகளைக் கூட நிறைவேற்றாத செயலாளராக திரு.பாலரூபன் காணப்படுகின்றார்.
பிரதேச சபைக்கான வருமானங்களை பெற்றுக்கொடுப்பதில் முக்கிய பங்காற்றுபவர்கள் வருமானப்பரிசோதகர்களே ஆனால் எமக்குரிய தேவைகளை கோரும் போது கௌரவமாக பெறமுடியாத நிலையே காணப்படுகிறது. இவ்விடயங்கள் எமது கடமையில் வெளிப்படுத்தப்படும் சிறந்த செயலாற்றுகையில் பின்னடைவையே ஏற்படுத்துகிறது. இது அடிப்படை மனித உரிமை மீறல் செயற்பாடாகவே காணப்படுகிறது.
அரச ஊழியர்கள் அரசியலில் ஈடுபடமுடியாத சூழல்
மேற்படி விடையமாக நான் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பிரதேச சபை உறுப்பினராக இருந்த படியினால் எனது கடமையில் மேற்குறிப்பிட்ட பழிவாங்கும் செயற்பாடுகள் மூலம் மனித உரிமை மீறல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு சூழல் உருவாவதால், எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஒரு அச்சம் நிறைந்த சூழலே வலிமேற்கு பிரதேச சபையில் செயலாளர் பாலரூபன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் சம்பதமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் முறையிட உள்ளேன் என்பதையும் அறியத் தருகிறேன்.
திறமை மிக்க கணக்கு பகுதி தலைமை உத்தியோகத்தர் மன உளைச்சல் காரணமாக இடமாற்றம் பெற்றமை.
எனது அலுவலகத்தில் ஒரு திறமை மிக்க கணக்கு பகுதி பெண் தலைமை உத்தியோகத்தர் கடமைபுரிந்து வந்தார். செயலாளர் பாலரூபனும் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.அபிராமியும் சேர்ந்து அவருக்கு கொடுத்த மன உளைச்சல் காரணமாக அவர் இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளார்.
ஆளுமை மிக்க உத்தியோகத்தர்களின் இடமாற்றமானது பிரதேச சபையின் வளர்ச்சியில் பாரிய பின்னடைவினையே உண்டாக்கும். இதில் திருமதி.அபிராமி என்கின்ற பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சுழிபுரம் தொல்புரத்தினை சேர்ந்தவராக இருந்தும் தனது பிரதேசம் மட்டில் பொறுப்பு இல்லாதவராக செயற்படுவது வருந்தத்தக்க விடையமே. மேலும் குறித்த பெண் கணக்கு பகுதி தலைமை உத்தியோகத்தரின் முறைப்பாட்டிற்கு அமைய உள்ளுராட்சி ஆணையாளர் நேரடியாக வந்து விசாரணை நடத்திய போது தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த பத்து உத்தியோகத்தர்கள் தங்களால் செயலாளர் பாலரூபனோடு கடமை புரிய விருப்பம் இல்லை என எழுத்து மூலம் கடிதம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
வார தொடக்கத்தில் நடைபெறும் மன உளைச்சலுடனான கலந்துரையாடல்.
ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை காலையில் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் காலை 9.00 மணிக்கு நடைபெறுவது வழக்கம். அதில் செயலாளர் பாலரூபன் உத்தியோகத்தர்களோடு மரியாதையான வார்த்தைகளை பாவிப்பது இல்லை, அனைத்து உத்தியோகத்தர்களையும் தரக்குறைவாகவே நடத்துகின்றார்.
இதனால் அனைத்து உத்தியோகத்தர்களும், பெண் உத்தியோகத்தர்களும் பாரிய மன உளைச்சலை எதிர்நோக்குகின்றனர். ஒரு பேயின் முகத்தில் முளிப்பது போன்ற உணர்வே ஏற்படுகின்றது இதனால் அந்த கிழமை முழுவதும் சிறப்பான சேவையினை வளங்கமுடியாத மனநிலைக்கு உத்தியோகத்தர்கள் உள்ளாகின்றனர். இது மக்களுக்கான சேவை வளங்குவதில் பாரிய பின்னடைவையே உண்டாக்குகிறது. இது ஒட்டுமொத்த சேவை வளங்கலையே ஸ்தம்பிக்க செய்யும் நிலையையே ஏற்படுத்துகின்றது.
தற்கொலை எண்ணம்.
செயலாளர் பாலரூபன் என்மேல் ஏற்படுத்தும் அளவுக்கு அதிகமான மன உளைச்சல் காரணமாக தற்போது எனது மன நிலை பாதிப்படைந்து மிக மோசமாக சோர்வடைந்துள்ளேன். என்னால் எனது கடமைகளை சரிவர செய்ய முடியவில்லை தொடர்ந்து மன உளைச்சல் அதிகரிக்க அதிகரிக்க அதீகமான தற்கொலை எண்ணம் தலை தூக்குகின்றது. என்பதையும் மன வருத்தத்துடன் பதிவு செய்கின்றேன்.
எனவே மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக எந்த விதத்திலும் செயலாளர் பதவிக்கு பொருத்தம் இல்லாத பாலரூபனை பதவியில் இருந்து நீக்கி ஒரு மகிழ்ச்சியான சூழலை வலிமேற்கு பிரதேச சபையில் உருவாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். யாராவது ஒருவர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்வார்களாக இருந்தால் செயலாளர் பாலரூபனும், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அபிராமியும் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழலே உருவாகும் என்பதை அறியத்தருகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.