– அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
வடக்கின் கடல் பாதுகாப்பை கண்காணிப்பதற்காக “கடல் சாரணர்கள்:” என்ற தொண்டர் அமைப்பை உருவாக்க அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ்விடயத் தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில் – வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினர் முடியுமானவரை தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் எமது கடல் வளங்களும் எமது கடற்றொழிலாளர்களது கடற்றொழில் உபகரணங்களும் சட்டவிரோதமாக எமது கடற்பரப்புகளுக்குள் உள் நுழையும் இந்திய மீன்படியாளர்களால் அழிக்கப்பட்டுவரும் நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் கடற்பரப்பின் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றுமொரு முயற்சியாக குறித்த யோசனையை நான் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளேன்.
அதாவது கடல் பகுதிகளை கண்காணிப்பு செய்வதற்காக கடல் சாரணர் அமைப்பு என்ற ஒரு தன்னார்வ அமைப்பை உருவாக்கி அவர்களையும் குறித்த இந்திய மீன்பிடியாளர்களின் செயற்பாடுகளை கண்காணித்து கடற்படையினரது உதவியுடன் கட்டுப்படுத்த முடியும் என கருதுகின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.