நடராசா லோகதயாளன்
இந்த ஆண்டு மகாசிவராத்திரி அன்று வெடுக்குநாறி மலை மீதுள்ள ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தில் வழிபாடுகளுக்குச் சென்ற சிவ பக்தர்களை இலங்கை பாதுகாப்பு படைகளும், பொலிசாரும் கடுமையாக தாக்கியும், பூசை பொருட்களை சப்பாத்துக் கால்களால் உதைத்தும் அவமரியாதை செய்தனர். பக்தர்கள் குடிநீர் எடுத்துச் செல்வதற்கும், பூசைப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் கூட பொலிசார் கட்டுப்பாடுகளை விதித்தனர். அந்த மலையுச்சிப் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வாகனங்களை எடுத்துச்செல்ல அனுமதிக்க முடியாது என்று பொலிசார் தடுத்துவிட்டனர்.
அதுமட்டுமின்றி, சிவராத்திரி அன்று இரவில் பூசைவேளையில், ஜெனரேட்டர்கள் மூலம் மின் விளக்குகளை ஏற்றவும் தடை விதித்தனர். அதனால் இரவு நேரத்தில் எண்ணெய் விளக்குகள் மூலமே வழிபாடுகளை மேற்கொள்ளும் நிலை ஏற்படது. அதுமட்டுமின்றி பக்தர்களுடன் மலையுச்சிக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பொலிசாரால் பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பாதுகாப்பு படையினரும், பொலிசாரும் இழுத்துச் செல்லும் காட்களில் கானொளியில் பதிவாகி பரவின.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டாலும், ஆலயத்தின் நிர்வாகிகள் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்து இப்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்கு இம்மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படுகிறது.
நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான 8பேரையும் விடுவிக்கக்கோரி நாளை நெடுங்கேணியில்
பாரிய எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆலய பரிபாலன சபை தலைவர் செல்லத்துரை சசிகுமார் இதற்கான அழைப்பு விடுத்துள்ளார்.
”வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 08.03.2024 அன்று எமது ஆலய வளாகத்தில் , சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த எமது ஆலயத்தின் பரிபாலன சபையின் நிர்வாகிகள் மீதும், சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடாத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள சிவபக்தர்களை விடுவிக்கக்கோரியும் பாரியளவிலான வெகுஜனப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம்.
இந்தப் போராட்டம் 15.03.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நெடுங்கேணி சந்தியில் ஆரம்பித்து வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரைக்கும் பேரணியாகச் சென்று, பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிப்பு இடம்பெறும்.
அரச அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், அனைத்துத் தமிழ் மக்களையும், சமய அமைப்புக்கள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள், சிவில் சமூகத்தினரையும், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகங்களையும், கலந்துகொள்ளுமாறு ஆலய நிர்வாகம் சார்பில் அழைத்து நிற்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.