(கனடா உதயனின் பிரத்தியேகச் செய்தி)
நடராசா லோகதயாளன்.
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1994 மற்றும் 1996 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடையவை எனத் தெரியவந்துள்ளது.
அந்த மனித புதைகுழியில் இருந்து இரண்டு கட்டங்களில் அகழ்ந்து எடுக்கப்பட்ட சடலங்களை ஆய்வு செய்த போது அவை 1994 மற்றும்1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையவை என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் கையளித்த குறித்த இடைக்கால அறிக்கை மொத்தமாக 35 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதில் விரிவான படங்கள், விளக்கச் சித்திரங்கள், அடையாளங்களின் விளக்கங்கள் போன்றவை அளிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் முன்னர் துப்பாக்கிச் சண்டையை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் குறித்த இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவம் 1994ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெறவில்லை என்பதோடு 1996ற்குப் பின்னர் இடம்பெறவும் இல்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அங்கு இந்த சடலங்களை புத்தைப்பதற்கு வெட்டப்பட்ட பங்கர் போன்ற அகழிகள் கள்ளத்தனமான வெட்டப்பட்டுள்ளன என்றும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோண்டி எடுக்கப்பட்ட உடல் பகுதிகள், எலும்புக்கூடுகள், கிடைக்கப்பெற்ற இதர தடயங்கள் ஆகியவை அவரது குழுவால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அவ்வகையில் சில எலும்புக்கூடுகளில் ஆடைகள் ஒட்டிக்கொண்டிருந்தன என்றும், ஓரிரு உடலங்களில் பெண்களில் உள்ளாடைகள் தெளிவாகத் தெரிந்தன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அங்கு கண்டுபிடிக்கப்பட்ட இலக்கத்தகடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பினரை அடையாளப்படுத்தும் இலக்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் 40 எலும்புக்கூடுகள் அல்லது உடற்பாங்கள் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெறுள்ளன.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து சடலங்கள் 1994 மற்றும் 1996ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என தீர்மானிக்கப்பட்டதெனவும், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்தக் காலப்பகுதியில் கொக்குத்தொடுவாய் பிரதேசம் முற்றாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு தொகுதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2023 நவம்பர் 29ஆம் திகதி ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு நிறுத்தப்பட்ட போது புதைகுழியில் இருந்து குறைந்தது 40 பேரின் எச்சங்கள் மீட்கப்பட்டிருந்த குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் அடுத்த கட்டகழ்விற்காக ஏப்பிரல் 4ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளபோதும் அதற்கான எந்தவொரு நிதியும் அரசு இதுவரை விடுவிக்காத நிலையில் ஏப்பிரல் 4 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதில் சந்தேகம் நிலவுகின்றது.