இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கு வருகை தந்திருந்த முனைவர் Dr. சரண்யா ஜெயக்குமார் அவர்களின் கருத்தரங்கு பாடசாலை அதிபர் தலைமையில் யா/ வட்டு இந்துக் கல்லூரியில் 14.03.2024 அன்று சோமசுந்தரப்புலவர் அரங்கில் இடம்பெற்றது.
‘ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கை நடாத்தினார். “தீதும் நன்றும் பிறர் தர வாரா”. அதாவது ஒருவர் நல்லாய் வருவதும் கெட்டுப்போவதும் அவர் அவரைச் சார்ந்தது. ஒரு மனிதனின் பண்பு நேர்மையும் பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பதும் ஆகும். மாணவர்கள் தமது கடைமைகளை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களது எதிர்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டுமெனில் அதற்கு கல்வி மிகவும் அவசியம் ஆகும். யாரையும் முன்மாதிரியாகக் கொள்ளாமல் மாணவர்கள் தமது இயல்பிற்கு ஏற்ப முன்னேற வேண்டும். வறுமை என்பது கல்விற்கு தடையல்ல. மாணவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாடசாலைக் கல்வியை சரியான முறையில் கற்றால் அவர்களது எதிர்காலம் நல்ல நிலையை அடையும் எனவும் தமது கருத்துக்களை முன்வைத்தார்.
தொலைபேசிப் பாவனையினாலும் போதைப்பொருள் பாவனையினாலும் மாணவர்களது ஒழுக்கமும் கல்வியும் பாதிக்கப்படுகின்றது. அதற்கு மாணவர்கள் அடிமையாகக் கூடாது. இது மாணவர்களது மூளையைப் பாதிக்கின்றது. தொலைபேசி விளையாட்டுக்களால் மாணவர்களது வன்முறை தூண்டப்பட்டு சமூக சீர்கேடுகள் ஏற்படுகின்றது. மாணவர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும் என தமது கருத்துக்களை முன்வைத்து மாணவர்கள் எல்லோரது மனங்களிலும் பெரியதொரு மாற்றத்தினை ஏற்படுத்தினார். மாணவர்களது உள ஆரோக்கியத்திற்கு இவரது கருத்தரங்கு மிகவும் பிரயோசனமாக அமைந்தது.
இந்த உன்னதமான கருத்தரங்கை ஏற்படுத்தித் தந்த ரட்ணம் பவுண்டேசன் அமைப்பினருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.