யாழ்-வசாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில் 1963-1969 காலப்பகுதியில் குறிப்பாக எட்டாம் வகுப்பில் படிக்கும் போது அமரர் கவிநாயகர் கந்தவனம் எனக்கு புவியியலும் ஆங்கிலமும் படிப்பித்ததோடு எனது வகுப்பாசிரியராகவும் விளங்கியவர். குறிப்பாக அமரர் கவிநாயகர் ஒரு பிரபல நல்லாசிரியராகவும் நல்ல பல்லாளுமை மிக்கவராகவும் (Multi-Skills) அக்காலத்திலும் இக்காலத்திலும் வாழ்ந்தவர். குறிப்பாக அக்காலப்பகுதியில் அவர் ஏற்படுத்திய ஒழுக்கத்தாக்கங்கள் எனது மனத்தில் இன்றும் பசுமையாக இருக்கின்றன. சுருங்கக்கூறின் தாரமும் குருவும் அவரவரது தலையெழுத்து என்னும் கூற்றுக்கிணங்க அமரர் கவிநாயகர் கந்தவனத்தை எனது இடைநிலைப்பள்ளி ஆசிரியராகக் கொண்டமை எனது வாழ்க்கையில் பெரிய பாக்கியமே என்று கூறவேண்டும்.
“எழுத்தறிவித்தவன் இறைவனாகுவான்” என்னும் ஒளவையாரின் கூற்றின்படி அமரர் கவிநாயகர் கந்தவனத்தின் மாணவ –ஆசிரியத் தொடர்பு ஒரு தெய்வீகத் தொடர்பாகும். அதாவது அவரது மாணவ – ஆசிரியத் தொடர்பு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என ஒரு தெய்வீகத்தன்மை நிறைந்ததாக அமைந்திருந்தது. அவர் எப்போதும் “ Do not waste your time. Do something” என்று கூறியதை அவரது வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவமாகக்கொண்டு கனடாவிலும் தனது வாழ்வின் இறுதிமூச்சுவரை செயற்பட்டுவந்தவர். எனது பால்ய நண்பரான சிவா முத்துலிங்கம், செயலாளர், ஒன்ராறியோ இந்துசமயப் பேரவை, நேற்றுக் குறிப்பிட்டதுபோல அமரர் ஒன்ராறியோ இந்துசமயப் பேரவையில் பல ஆண்டுகளாகத் தலைவராகப் பணியாற்றியவர். இச்சபையின்மூலம் இந்துசமயத்தையும், தமிழ்மொழியையும் கனடாவில் வளர்க்கப் பல திட்டங்கள் வைத்திருந்ததாகவும் அவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதாகவும் மனம்வருந்திக் கூறினார். சென்றவாரத்தில் எனது கட்டுரையில் குறிப்பிட்டதுபோல, யப்பானியப் பேராசிரியர், “கனடாவில் இந்துசமயத்தையும் தமிழையும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வளர்ப்பதில் பெரும்பங்காற்றுகின்றார்கள்” என்பதைக் குறிப்பிட்டதில், கவிநாயகர் கந்தவனத்தின் பங்கு அளப்பரியபங்காகும்.
இன்று அமரரது மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதென்றே குறிப்பிடவேண்டும். அவர் எப்போதும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து தனது எல்லாக் காலைக்கடமைகளையும் முடித்துவிட்டு எட்டு மணிக்கு வசாவிளான் (MMV) மத்திய மகா வித்தியாலயத்துக்கு வந்துவிடுவார். அவர் எப்போதும் எமக்குக்கூறும் கூற்று என்னவெனில் அதிகாலையில் வசாவிளான் எம்எம்விக்குள் கால் எடுத்துவைக்கும்போது தான் ஒரு ஆலயத்திற்குள் காலெடுத்து வைக்கும் உணர்வைப் பெறுவதாகக் குறிப்பிடுவார். ஆகவேதான் இக்கட்டுரையில் மேலே குறிப்பிட்டதுபோல அமரரது மாணவ – ஆசிரியர் படிப்பித்தல் வாழ்க்கை ஒரு தெய்வீக வாழ்க்கையென்று குறிப்பிட்டிருந்தேன். அதாவது அமரர் இலக்கியக் கலாநிதி விநாயகர் கந்தவனத்தின் கல்விப்பணி குறிப்பாக அமரரின் ஆசிரியப்பணி உன்னத ஒழுக்கவிழுமியங்களை அடிப்படையாகக் கொண்டமைந்தது.
“குஞ்சி யழகும் கொடுத்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்விஅழகே அழகு” என்னும் நாலடியார் பாடலுக்கு இலக்கணமாகவும்
“கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றயவை” -குறள்-
அதாவது “ஒருவருக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. மற்றையவை எல்லாம் செல்வங்கள் ஆகா” என்னும் குறளில் உறுதியாக நம்பிக்கைகொண்டு தனது இறுதிமூச்சுவரை வாழ்ந்த மகத்தான பொக்கிசமாக வாழ்ந்தார்.
கவிநாயகர் கந்தவனம் எந்தவித சாதிவேறுபாடுகளையும் கடந்து “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என, மாணவர்களைத் தரம் மட்டுமேகொண்டு கணித்து அவர்களது கல்விவளர்ச்சியில் தனது நுண்ணறிவினால் ஊக்கமளித்தவர். அண்மையில் மார்ச்சு 16ந் திகதி நடைபெற்ற அவரது இறுதி அஞ்சலிக் கூட்டத்தைக் காணொளியில் கண்டு அவரது இரங்கல் செய்தியில் அவரது பன்முகப்பட்ட ஆற்றல்களையும் பரிணாமங்களையும் அவரது “கோடி ஆங்கோர் ஏழைக்கு கல்வி புகட்டுதல்” தலையாய தர்மம் என்னும் மகாகவி பாரதியின் கூற்றுக்கு இணங்க அமரர் கவிநாயகர் தான் கல்விகற்பித்த இடங்களில் எல்லாம் மாணவர்களது வாழ்வில் ஒளியேற்றிவைத்த பெருந்தகையாளன் அமரர் கவிநாயகர் கந்தவனம் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக ஏலவே இக்கட்டுரையில் குறிப்பிட்டதுபோல அவர் எப்போதும் கூறும் சுலோகம் “Do not waste your time. Do something” என்னும் கூற்று என் இளவயதிலேயே தலைசிறந்த பண்புகளையும் ஆளுமைகளையும் தந்ததைஅவரது பழைய மாணவர்களும் நண்பர்களும் புகழ்ந்து கூறியதைக் கேட்டு உள்ளம் பூரிப்படைந்தேன். இதற்குச் சான்றாக மலையகத்திலும், நைஜீரியாவிலும், அளவெட்டியிலும் யாழ்ப்பாணத்திலும் அவரது பழைய மாணவர்களுக்கும் அவர்களது கல்விவாழ்வில் நான் உட்பட அவர் உதவியதை மறக்கமுடியாது.
“அன்னசத்திரம் ஆயிரம் கட்டுதல் ஆலயம் பதினாயிரம் கட்டுதல் அன்னயாவிலும் புண்ணியம் …“ என்பது ஆழப்பதிந்து வாழ்வில் எவ்வாறு நேரநிர்வாகம் செய்து நாம் வாழ்வில் முன்னேற எப்போதும் ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டிருத்தல் வேண்டும் என்பதையும் காலத்தை ஒருபோதும் வீணாக்கக்கூடாது என்பதையும் தெரிந்துகொண்டு முன்னேற உதவியது. இவ்விடயத்தில் ஆங்கிலத்தைப்படி என்று கூறியதோடு தன்னால் முடிந்தமட்டும் ஊக்குவித்தார். இன்று நான் கனடாவந்து 3 பல்கலைக்கழகங்களில் M.A., Ph.D. மாணவனாக வருவதற்கு அவர் ஆங்கிலமொழியில் போட்ட அத்திவாரமே என்று பெருமையாகக் கூறுவேன். அவரது ஆங்கிலமொழிஆளுமை எம்மையெல்லாம் ஊக்குவித்தது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
சுருங்கக்கூறின் அமரர் கவிநாயகர் கந்தவனம் ஆசிரியரோடு ஏற்பட்ட அனுபவத்தைப் பின்வருமாறு குறிப்பிடலாம். அவரது வார்த்தைகளில் கூறுவதானால் “Discipline is discipline. There is no compromise for discipline” எனலாம். அதாவது ஒழுக்கம் என்பதன் அர்த்தம் ஒழுங்கந்தான். அதற்கு எந்தவிதமான சமரசமும் கிடையாது. ஒழுக்கம் தவறினால் சிறைக்குத்தான் செல்லவேண்டு்ம். அங்கேதான் உங்கள் வாழ்வு முடியும் என்பதில் ஆணித்தரமான நம்பிக்கைகொண்டு அதன்படி ஒழுகுகின்றவர்களுக்கு ஓர் உதாரணமாக வாழ்ந்துகாட்டியவர் கவிநாயகர் கந்தவனம். நான் மேலே இக்கட்டுரையில் குறிப்பிட்டதுபோல அவரது இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் அவரது நண்பர்களும் மாணவர்களும் அமரரின் பன்முகஆளுமைகளை வியந்து கூறியவற்றில் பின்வரும் பண்புகளைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.
- அவரது நுண்ணறிவு
- உலகளாவிய இந்துசமயப்பணி – அதாவது புலம்பெயர்ந்த நாடுகளில் ஆற்றிய இந்துசமயப்பணி, குறிப்பாகக் கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகளைக் குறிப்பிலாம்.
- அமரரின் எளிமையும் அடக்கமும்
- அவரது குடுப்பப்பொறுப்பும் சேவை மனப்பான்மையும்
- மிகவும் நல்லடக்கமான கட்டுப்பாடுடன்கூடிய ஒழுக்கநெறி
முடிவாகக் கூறுவதாயின் “ In conclusion Bhagavad Gita says, “ Late Kavinayakar Kandavanm’s soul will never die because of his devoted teaching and selfless actions. He was the embodiment of the Hindu Dharma. As Gita says, “Do your duty, renounce the fruits of action, avoid alteration to the fruits and attachment to inaction.”
“As a man discards worn clothes and put on new and different ones, so the embodied self and soul discards its worn out bodies to take on new ones”
இக்கட்டுரையில் மேற்கூறிய அமரரது பண்புகளும், குணாம்சங்களும் வெறும் முகமனுக்காகக் கூறியஉபசார வார்த்தைகள் அல்ல. உண்மையில் அமரர் கவிநாயகர் கந்தவனத்தோடு பழகிய எம்மைப்போன்ற எல்லோரது அனுபவத்தில்கண்ட உண்மைகளாகும். இதனை மார்ச் 16ம் திகதி அவரது இறுதிஅஞ்சலியில் பங்குபற்றியவர்களின் சான்றுஉரைகள்மூலம் எம்மால் நன்கு அறியமுடிந்தது. இவையெல்லாம் அவரது உண்மையான உன்னத மனிதப்பண்புகளாகும்.
K. Ananthanathan, M.A., MSW, RSW
Registered Social Worker and Psychotherapist
with Ontario College of Social Workers and
Social Services Workers (OCSWSSW)