கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தரப்பை ஒன்றாக்குவது பெரும்பாலும் எதிர்த் தரப்புத் தான்.வெடுக்குநாறி மலை விவகாரம் பெரும்பாலான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றுபடுத்தியிருக்கிறது. போராட்டக் களத்தில் எல்லாக் கட்சிகளும் ஒன்றாக நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. பரவாயில்லை. குறைந்தது ஒரு விவகாரத்தை மையமாகக் கொண்டாவது கட்சிகள் அவ்வாறு ஒன்றாகத் திரள்வது நல்லது. ஆனால் இந்த விவகார மைய ஐக்கியம் மட்டும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டப் போதாது. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்ற அடிப்படையில் கட்சிகள் ஒன்றிணையும் போதுதான் கடந்த 15 ஆண்டு காலத் தேக்கத்தில் இருந்து விடுபடலாம். அல்லது அவ்வாறு கட்சிகளை ஒன்றிணைக்கத்தக்க பலத்தோடு ஒரு கட்சி பலமானதாக மேற்கிளம்ப வேண்டும். அல்லது கட்சிகளை ஒன்றிணைக்கவல்ல பலத்தோடு சிவில் சமூகங்கள் மேலெழ வேண்டும்.
எதுவாயினும் சிவராத்திரியன்று கைது செய்யப்பட்டவர்களை மீட்பதற்காக கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டது வரவேற்கத்தக்கது. இது போன்ற “கலெக்டிவ்” ஆன அதாவது கூட்டு முயற்சிகள்தான் பொதுப் பிரச்சினைகளுக்கு வெற்றியளிக்கும் என்பதற்கு இங்கு அரசியல் அல்லாத வேறு ஒரு உதாரணத்தைச் சுட்டிக் காட்ட வேண்டும்.
எங்களில் எத்தனை பேர் தமது வீடுகளில் உள்ள தென்னை மரங்களில் விளைச்சல் குறைந்து வருவதை அவதானித்திருக்கிறோம்? தென்னை இலைகளில் மேற்பரப்பில் கருப்பாக எண்ணெய்த் தன்மையோடு ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஓலைகளின் கீட் பகுதிகளில் பூஞ்சனம் போல வெள்ளையாக ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கிறது. அது தென்னை மரங்களில் இருந்து தொடங்கி மாமரம், கறிவேப்பிலை, வாழை என்று எல்லா மரங்களின் மீதும் பரவுகிறது. ஒரு வீட்டில் மட்டுமல்ல, ஒரு கிராமம், ஒரு பிரதேசம் முழுவதும் அது பரவி வருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்திலும் அதன் தாக்கம் இருப்பதாக அண்மையில் முகநூலில் ஒரு குறிப்பைக் காண முடிந்தது. 1976 ஆம் ஆண்டு இப்படி ஒரு தாக்கம் ஏற்பட்டது என்றும் அது பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் கிளிநொச்சியில், அக்கராயன் கோணாவில் பகுதிகளில் உள்ள தென்னந் தோட்டப் பண்ணையாளர்கள் தெரிவிக்கிறார்கள். புத்தளம் மாவட்டத்தில் தங்கொடுவ, நாத்தாண்டிய, சிலாபம், முகுனுவடவன, ஆரியகம, பட்டுலுஓயா மற்றும் முந்தலம ஆகிய பிரதேசங்களில் வெள்ளை ஈயின் தாக்கம் உள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது. தீவிரமாகப் பரவும் வெள்ளை ஈயினால் இலங்கையில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் தென்னந் தோப்புகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இது தொடர்பாக பல மாதங்களுக்கு முன்னரே நான் சம்பந்தப்பட்ட சிலரோடு அணுகிக் கதைத்தேன். சுற்றுச் சூழலியலாளர் ஒருவரை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்து தென்னோலையைக் காட்டினேன்.என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு முகநூலில் அது தொடர்பாக வெளிவந்த ஒரு குறிப்பை அனுப்பியிருந்தார். அது வெள்ளைத் ஈயின் தாக்கம் என்றும் அவர் கூறினார். அதற்கு இயற்கை வழி நிவாரணமும் உண்டு; இரசாயன வழி நிவாரணமும் உண்டு என்றும் அவர் கூறினார்.தென்னை ஆராய்ச்சி நிறுவனம் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் சோப்புத் தூள் கலவையை தெளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்படிப்பட்டதோர் பின்னணியில், பருவ மழை வந்தது. வருண பகவான் தென்னை மரங்களைக் குளிப்பாட்டிச் சுத்தப்படுத்தினார். வெள்ளை ஈ மழை நீரில் கழுவுண்டு போயிற்று. ஆனால் மழை முடிந்த கையோடு அது மீண்டும் வந்தது. கோடை வெயிலோடு முன்னரே விட வேகமாகப் பரவியது. இப்பொழுது நான் வசிக்கும் கிராமமும் உட்பட யாழ்ப்பாணத்தில் தென்னை மரங்கள் செறிவாகக் காணப்படும் எல்லா வீடுகளிலும் பகுதிகளிலும் வெள்ளை ஈ வேகமாகப் பரவி வருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை விருதுகள் வழங்கும் நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் பேசிய அந்த அமைப்பின் தலைவராகிய ஐங்கரநேசன் வெள்ளை ஈ தொடர்பாகவும் சுட்டிக் காட்டினார். வெள்ளை ஈ யை கட்டுப்படுத்துவதற்கு ஒஸ்ரேலியாவைச் சேர்ந்த ஒரு தமிழர் கூறிய ஒரு பரிகாரத்தை அவர் மேடையில் வைத்துச் சொன்னார். எமது வீடுகளில் நாங்கள் பயன்படுத்தும் சலவைத் தூளில் ஒரு மேசைக் கரண்டியை எடுத்து 4 லிட்டர் நீரில் கரைத்த பின் அதனை தென்னை மரங்களுக்கு பீச்சி அடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் பிரச்சினை என்னவென்றால் அதற்கு உயர் அழுத்தப் பம்பிகள் தேவை. சீனாவில் இருந்து அப்படிப்பட்ட பம்பி ஒன்றை கிட்டத்தட்ட 40,000 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும் என்று ஒரு வணிகர் கூறினார்.
அதைவிட முக்கியமான ஒரு பிரச்சினை உண்டு. வெள்ளை ஈயை ஒரு வீட்டில் மட்டும் கட்டுப்படுத்தி பிரயோசனமில்லை அல்லது ஒரு பண்ணையில் மட்டும் கட்டுப்படுத்தி பிரயோசனம் இல்லை. ஏனென்றால் இது ஒரு கூட்டுத் தாக்கம். ஒரு கூட்டுத் தாக்கத்துக்கு எதிராக; ஒரு பொது எதிரிக்கு எதிராக கூட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும். கூட்டாக ஒரு கிராமம் முழுவதிலும் வெள்ளைத் ஈ யை கட்டுப்படுத்த வேண்டும். கூட்டுப் பிரச்சினைகளுக்கு கூட்டத் தீர்வுகளே உண்டு. இது வெள்ளை ஈ க்கு மட்டுமல்ல இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல அரசியலுக்கும் பொருந்தும்.
வெள்ளை ஈயின் விடயத்தில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மட்டுமல்ல பண்ணையாளர்கள் மற்றும் வீடுகளில் செறிவாகத் தென்னை மரங்களை வளர்ப்பவர்கள் எல்லோருக்குமான பிரச்சினை இது. இதை இப்படியே விட்டால் ஒரு கட்டத்தில் தேங்காய்த் தட்டுப்பாடு ஏற்படும். அது நேரடியாக வயிற்றில் அடிக்கும்.
இறுதிக்கட்டப் போரில் தேங்காய்க்கு அலைந்த ஒரு மக்கள் கூட்டம் நாங்கள். இறுதிக் கட்டப் போரில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆனந்தபுரத்தில் நடந்த சண்டையோடு பெரும்பாலும் தேங்காய் இல்லாமல் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் கடற்கரையில் தென்னைகள் இருந்தன. ஆனால் அங்கிருந்த அசாதாரண சனத்தொகைக்குப் போதுமான தேங்காய்கள் இருக்கவில்லை. ஆனந்தபுரத்தில்தான் ஒப்பீட்டளவில் அதிக தென்னை மரங்கள் இருந்தன. ஆனந்தபுரத்தை இழந்ததோடு தேங்காய்த் தட்டுப்பாடு தொடங்கியது. அதன் பின் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்குத் தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக பால்மாவை பயன்படுத்தப்பட்டது. ஒரு கஞ்சிக்கலயத்துக்கு இரண்டு பால்மா பக்கெட்டுகள்.
அது போர்க்காலம். ஆனந்தபுரத்தோடு தேங்காய் இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது 15 ஆண்டுகளின் பின் வெள்ளை ஈ ஏறக்குறைய ஒரு போரைத் கொடுத்திருக்கிறது. அது ஒரு கூட்டுத் தாக்கம். இத்தாக்கத்திலிருந்து தென்னை மரங்களைப் பாதுகாக்கத் தவறினால் தேங்காய்க்கு அலைய வேண்டி வரும். தேங்காய் எண்ணையின் விலை கூடும். எல்லா உணவுப் பொருட்களின் விலையும் கூடும். பொருளாதார நெருக்கடிக்கு முன்னரே தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்துவிட்டது. இப்பொழுது சுத்தமான எண்ணெய் ஒரு லிட்டர் 600 ரூபாயிலிருந்து 900 ரூபாய் வரை போகிறது.
நுகர்வுக் கலாச்சாரத்துள் சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்திய நல் விளைவுகளில் ஒன்றை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் தேங்காய் எண்ணையின் தரம் குறித்த சந்தேகங்கள்,சமூக வலைத்தளங்களில் பரவலாக வரத் தொடங்கிய ஒரு பின்னணியில், வீட்டில் தென்னைகளை வளர்ப்பவர்கள் தங்களுக்குத் தேவையான தேங்காய் எண்ணெயைத் தாங்களே உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள்.அது ஒரு அற்புதமான செயல். யாழ்ப்பாணத்தில் அதிகம் தென்னை மரங்களைக் கொண்ட காணிகளை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு தேவையான தேங்காய் எண்ணெயை பல் பொருள் அங்காடிகளில் வாங்குவதைத் தவிர்க்கத் தொடங்கினார்கள்.
ஆனால், இப்பொழுது வெள்ளை ஈ எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. வெள்ளைத் ஈ யை கூட்டாக எதிர்கொள்ளத் தவறினால், தேங்காயின் விலை அதிகரிப்பதைத் தடுக்க முடியாது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் பாதிக்கப்பட்டவர்களும் இணைந்து கூட்டாக முயற்சிக்க வேண்டும். இது விவசாயம் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் மட்டுமல்ல. இங்கேயும் அரசியல் உண்டு. சமூகத்தின் கூட்டுச் செயற்பாடுகள் என்று வரும்பொழுது, அதில் ஏதோ ஒரு விகிதமளவுக்கு அரசியல் இருக்கும். சமூகம் முழுவதுமான கூட்டுச் செயல்பாடுகளில் சில சமயம் அரசியல் தலைமைத்துவம் தேவையாக இருக்கும்.
கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் குடிமக்கள் சமூகங்களும் இதில் இறங்க வேண்டும். இது தமிழ்ச் சமூகத்தின் உள்ளூர்ப் பொருளாதாரத்தைப் பாதிக்க கூடிய ஒரு விடயம். இதில் அரசியல் கட்சிகளும் கிராமிய அமைப்புக்களும் குடிமக்கள் சமூகங்களும் ஊடகங்களும் ஒன்றிணைய வேண்டும்.