சமுதாய பாதுகாப்பு குழுக்களிற்கான விசேட கலந்துரையாடல் இன்று பொலிஸ் மா அதிபர் தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய குறித்த கலந்துரையாடல் 17-03-2024 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது,
இக்கலந்துரையாடலில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் திலான் அலஸ், விசேட அதிரடிப்படையின் கட்டளை பிரதானி பிரதி பொலிஸ்மா அதிபர் விருண ஜயசுந்தர, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், சமுதாய பொலிஸ் குழுக்களின் உறுப்பிரகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், புதிய பொலிஸ் மா அதிபருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சருக்கும் வரவேற்பளிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, முதியவர்களிற்கான சக்கர நாற்காளிகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், யுத்திக பிணியில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் அமைச்சர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோருக்கு நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.