கதிரோட்டம் – 22-03-2024
இந்த உலகம் தோன்றிய நாட்களிலிருந்து கடலும் கடல் சார்ந்த நிலங்களும் கடலுக்குள் செல்வங்களாக விளங்கும் மீன் போன்ற கடலுணவுகளும் உலகெங்கும் பரவிக்கிடக்கின்றன. தண்ணீருக்குள் பிறந்து வளர்ந்து நீந்தித்திரிந்து. இறுதியில் மனிதர்களுக்கு சுத்தும் சுவையும் நிறைந்த உணவுப் பதார்த்தங்களாக மாறும் கடல்வளம் பற்றியதான விடயங்களை உள்ளடக்குவதே இவ்வார கதிரோட்டத்தின் நோக்கம் ஆகும்.
இதற்கான காரணம் இதுதான் என்று இந்த கதிரோட்டப் பந்திகளுக்குள் குறிப்பிடுவது தேவையற்ற ஒன்று என கருதுகின்றோம். கடந்த பல வருடங்களாக வட இலங்கையின் கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக படகுகளில் வரும் தமிழகத்தின் மீனவர்கள் இங்கிருந்து தமிழகம் நோக்கி தங்கள் கடலுணவு என்கின்ற பெரும் செல்வத்தை அள்ளிக் கொண்டு போகின்றார்கள் என்பது தினமும் நாம் முன்பக்கச் செய்திகளில் படித்து வியக்கின்ற விடயமாக மாறிவிட்டது.
இவ்வாறு தமிழகத்திலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டுப் பகுதிக்குள் அடங்கும் கடல்பகுதிகளுக்குள் கூட்டமாக வருகின்ற தமிழக மீனவர்களின் அபகரிப்பால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.
அத்துடன் இது ஒரு அத்துமீறல் என்றெல்லாம் இலங்கையின் வடக்கில் உள்ள மீனவர்களும் அவர்களின் உழைப்பைச் சுரண்டுகின்ற மீனவ முதலாளிகளாம் ‘சம்மாட்டி’களும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதேவேளையில் இலங்கையின் கடற்படையும் எல்லை தாண்டி வருகின்ற படகுகளையும் அதில் வருகின்ற மீனவர்களையும் கைது செய்தும் சிறையில் அடைத்தும். நீதி மன்றங்களில் அவர்களை குற்றவாளிகளாக முன்நிறுத்துவதுமாக நாட்கள் போராட்ட மயப்பட்டு காலங்கள் நகர்ந்து செல்கின்றன.
இங்கு குறிப்பிட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. இலங்கையின் வடக்குப் பகுதியில் சாதாரண மீனவர்களை தங்கள் தொழிலாளர்களாக கணித்து அவர்கள் மூலமாக கணிசமான தொகையை தினமும் பெற்று ‘கொழுத்துப் போயுள்ள சம்மாட்டி முதலாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் கடற்தொழிலுக்கு செல்லாமல். போராட்டக்களத்தில் நிற்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு யார் ‘சோறு’ போடுவார்கள் என்ற விடயத்தை நாம் மறந்தவர்கள் ஆகிவிடுவோம்.
இதன் மறுபக்கத்தில் மறைந்திருக்கின்ற மாயங்களை அமைச்சர்கள் தொடக்கம் அதிகாரிகள் வரையிலும் கவனிப்பதாகத் தெரியவில்லை. தற்போது இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து கடலுணவுப் பொருட்கள் மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பொதுவாக தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கு இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் அனுப்பப்படுகின்ற கடலுணவுப் பொருட்கள் எந்தக் கடலில் பிடிக்கப்பட்டவை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
இலங்கையின் வடக்கு மீனவர்கள் இழக்கும் கடலுணவுப் பொருட்கள் தமிழ்நாட்டு சம்மாட்டிகளுக்கும் மீனவமர்களின் குடும்பங்களுக்கும் சென்று விடுகின்றன. இதனால் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய கடலுணவுப் பொருட்களின் அளவும் குறைந்து அங்கு தொழிலாளர்களும் பட்டினிச் சாவுக்குள் தள்ளப்படுகின்றார்கள்.
எனவே கனம வளங்களின் விலைப் பெறுமதிகளைக் கொண்ட இலங்கையின் வடக்கு கடலுணவுப் பொருட்களை மீனவர்கள் மட்டும் இழக்கவில்லை. இலங்கை அரசாங்கமும் அதன் பொருளாதாரப் பிரிவும் இழக்கின்றன என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்