‘தமிழ்ச் சமூக மையம்’ கட்டடத் தொகுதி நிதி சேகரிப்பு குழுவின் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் கனடா உதயனுக்கு தெரிவிப்பு
(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
“எமது நீண்டா கால கோரிக்கைகளின் பலனாக ஸ்காபுறோவில் அமையப்போகின்ற ‘தமிழ் சமூக மையம்’ கட்;டடத் தொகுதியை பூர்த்தி செய்ய கனடாவின் மத்திய அரசு. ஒன்றாரியோ அரசு மற்றும் ரொறன்ரோ நகரசபை ஆகிய மூன்று அரச அமைப்புக்கள் வழங்கிய ஒரு தொகை நிதி ஒதுக்கீடு எமது சமூகத்திற்கு கிட்டிய ஒரு வரப்பிரசாதமாகும். இந்த வகையில் ஸ்காபுறோவில் அமையப்போகின்ற ‘தமிழ் சமூக மையம்’ கட்;டடத் தொகுதியை பூர்த்தி செய்ய வேண்டிய தார்மீகக் கடமை எம் அனைவருக்கும் உண்டு என்பதை உணரவேண்டும். அந்த சமூக மையத் தொகுதியை பூரணமாக கட்டி முடிக்க மேலும் 30 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகின்றன. அந்த தொகையை நாம் எமது மக்களிடமிருந்தும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்தும்தான் பெற்றுக்கொள்ள வேண்டும். எமது தமிழ்ச் சமூகத்தின் தேவைக்காக வேறு ஒரு சமூகத்திடமிருந்து எமக்கு நிதி கிடைக்கும் என்றும் நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே எமக்குத் தேவையான 30 மில்லியன் டாலர்களை கனடா வாழ் தமிழ் மக்களிடமிருந்து சேகரிக்கும் வகையில் எமது நிதி சேகரிப்புக்குழு திட்டங்களை வகுத்துள்ளது. அதற்கு எமது ஒட்டு மொத்த சமூகமும் முன்வந்து ஆதரவைத் தரவேண்டும்”
இவ்வாறு ‘தமிழ்ச் சமூக மையம்’ கட்டடத் தொகுதி நிதி சேகரிப்பு குழுவின் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் ‘கனடா உதயன்’ பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமையன்று காலை தொடக்கம் பொது மக்களைச் சந்தித்து உரையாடும் வகையில் ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ‘தமிழ்ச் சமூக மையம்’ நிர்வாகக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேற்படி கூட்டத்தில் எவ்வாறு ‘தமிழ்ச் சமூக மையம்’ என்ற சிந்தனை உருவாகியது. பின்னர் எத்தனை கட்டங்களாக அதற்குரிய காணியை ரொறன்ரோ நகரசபை நீண்ட கால குத்தகைக்கு வழங்கியது. பின்னர் எவ்வாறு மூன்று அரசாங்கங்களிடமிருந்து ஆரம்ப நிதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பெற்றன போன்ற விபரங்கள் சபையோருக்கு எடுத்துரைக்கப்பட்டன.
தொடர்ந்து சபையோரிடமிருந்தும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
மேற்படி கூட்டம் பயனுள்ள வகையில் அமைந்தது என்றே கூறலாம்.
அதனைத் தொடர்ந்து ‘தமிழ்ச் சமூக மையம்’ கட்டடத் தொகுதி நிதி சேகரிப்பு குழுவின் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் தங்கள் நிதி சேகரிப்புக் குழுவின் திட்டங்கள் தொடர்பாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
‘ எமது கனடா வாழ் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு கொடையாகவே இந்த ‘தமிழ்ச் சமூக மையம்’ அமையப் போகின்றது. அதனை பூரணமாக கட்டி முடிக்கத் தேவையான 30 மில்லியன் டாலர்களை எமது மக்கள் மத்தியி-லிருந்து தான் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் எமது சமூகத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் கொடையாளர்களிடமிருந்து பத்து மில்லியன் டாலர்களை சேகரிக்கும் முயற்சிகளில் இரவு பகலாக இயங்கிவருகின்றோம். அதை விட அடுத்த 10 மில்லியன் டாலர்களை எமது சமூக மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எமது மக்களில் 10000 பேரிடமிருந்து தலா ஆயிரம் டாலர்கள் சேகரிப்பது என்று நாம் தீர்மானித்துள்ளோம். எனவே இந்த திட்டத்திற்கும் எமது மக்கள் தங்கள் கடமை என எண்ணி தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.
நாம் தொடர்ந்து ஏனைய இனங்களால் நடத்தப்பெறும் ஆர்மேனியம் மண்டபம் சீனக் கலாச்சார மண்டபம் போன்ற மண்டபங்களில் நடத்தவது போன்று எமது தமிழ்ச் சமூக மையத்தில் அமையவுள்ள நவீன மண்டபத்திலும் எமது விழாக்களை நாம் நடத்த வேண்டும். எமது முதியவர்கள் ஒன்று கூடி தங்கள் முதுமைக்கால கவலைகளிலிருந்து விடுதலை பெறும் வகையில் அவர்களுக்கான திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்”
இவ்வாறு தெரிவித்தார் திரு சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள்