கனடா-தொல்காப்பிய மன்றமும்
தமிழ்நாடு – இலக்குவனார் இலக்கிய இணையமும்
இணைந்து நடத்தும்
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா – 2024
பேரன்புமிக்க பெரியோர்களே!
தொல்காப்பியம், இன்று எமக்குக் கிடைத்துள்ள தமிழ் இலக்கண, இலக்கியங்களுள் மிகத் தொன்மையானது. தொல்காப்பியத்திற்கு முன்னமேயே பல இலக்கண இலக்கியங்கள் இருந்து. காலத்தால் அழிந்து போய்விட்டன என்பதைத் தொல்காப்பியம் வாயிலாக அறிகிறோம். தொல்காப்பியம், பொ. ஆ. மு. 711 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்பது அறிஞர்
துணிபு.
தொல்காப்பியமே இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூலாக விளங்குகின்றது என்பது தொல்காப்பியத்தின் சிறப்பாகும். தொல்காப்பியம், பண்டைய உலக இலக்கண மரபுகளான கிரேக்க, உரோமானிய, வடமொழி மரபுகளிலிருந்து வேறானது.
தொல்காப்பியத்தின் சிறப்பு. அதன் தொன்மை. இளமை, செம்மொழித் தன்மை. அறிவியல் கருத்துகள் முதலியவை மிக அண்மைக் காலம் வரை பெரும்பாலான தமிழர்களால் அறியப்படாமலே இருந்திருக்கிறது. “தொல்காப்பியம் கற்பதற்கு மிகவும் கடினமானது” என்று. எமது, கற்றறிந்த பெரியோர்கள், சொல்லிச் சொல்லியே, தொல்காப்பியத்தைப் பொது மக்கள் அணுகாமலே போய்விட்டனர். இந்நிலையை மாற்றி, தொல்காப்பியத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதற்காகத் தொடங்கப்பட்ட அமைப்பே உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். பிரான்சு நாட்டில், 2015 ஆம் ஆண்டு “உலகத் தொல்காப்பிய மன்றத்தின்” தொடக்க விழா நடைபெற்றுப் பின் உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கனடாவில், தொல்காப்பிய மன்றம் அதே ஆண்டில் (2015) தொடங்கி வைக்கப்பட்டு, கடந்த 9 ஆண்டுகளாகச் சிறப்பாக இயங்கி வருகிறது.
கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் குறிக்கோள்:
- தமிழ் இனம், மொழி, கலை, பண்பாடு முதலியவற்றின் தொன்மையை அறிவியல் அடிப்படையிலும் மானிடவியல் அடிப்படையிலும் ஆராய்ந்து தமிழர் தொன்மைச்
சிறப்புக்களை வெளிக்கொணர்வது, - புலம்பெயர் நாடுகளில், தமிழ் மொழி, கலை, பண்பாடு முதலியவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லத் தக்கதொரு தலைமுறையை உருவாக்குவது,
- புலம் பெயர் நாடுகளில் பிறந்து வளரும் சிறார்களுக்கு உரிய முறையில் தமிழ் மொழிக்கல்வியை எடுத்துச் செல்வது,
- பல்லினப் பல்பண்பாட்டு மக்களிடையே, தமிழ் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்கள் பற்றிய அறிவை வளர்ப்பது.
தமிழ் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களைப் புலம் பெயர் நாடுகளில் பல்லின, பல்பண்பாட்டு மக்களும் அறியும் வகையில் செயலாற்றி வருகிறோம். புலம்பெயர் நாடுகளின் அரசியலிலும் இரண்டாம் தலைமுறைத் தமிழர்ஈடுபட்டுள்ளார்கள்.
தொல்காப்பிய ஆய்வுகளை முன்னிலைப்படுத்தும் மாதக் கருத்தரங்குகள், சிறாரை ஊக்குவிக்கும் தமிழ்த் திறன் போட்டிகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என்று எமது மன்றத்தின் செயற்பாடுகள் விரிந்து கொண்டே செல்கின்றன.
இந்த வரிசையில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள் 04, 05, 06 ஆம் நாள்களில் (2024-09-20, 202409-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் நடைபெறவுள்ளது. இம் மாநாட்டை, கனடா, தொல்காப்பிய மன்றமும், தமிழ்நாடு, இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்துகின்றன.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், ஐக்கியப் பேரரசு, பிரான்சு, சேர்மனி, அவுத்திரேலியா, அமெரிக்கா, கனடா முதலிய தமிழ் மக்கள் வாழும் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பேராளர்கள் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்.
இம்மாநாடு தொடர்பான செய்திகள், அறிக்கைகள், முடிவுகள் முதலியவற்றை, தொல்காப்பிய மன்றம் – கனடாவின் இணையத்தளத்திலும் (www.tolkappiyam.ca), அகரமுதல மின்னிதழிலும் (www.akaramuthala.im) காணலாம்.
இலக்குவனார் திருவள்ளுவன்
ஒருங்கிணைப்பாளர்
இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்நாடு
முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்
தொல்காப்பிய மன்றம் – கனடா
தலைவர்