(மன்னார் நிருபர்)
(29-03-2024)
யுத்தம் காரணமாக மியன்மாரில் இருந்து இடம் பெயர்ந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக வருகை தந்து பாணந்துறையில் தங்கியுள்ள மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு அவசரமாக காணப்பட்டு வீட்டிற்கான நிவாரணத்தை மன்னார் மெசிடோ நிறுவனம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (28) மாலை நேரடியாக சென்று வழங்கினர்.
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் நேரடியாக விஜயம் செய்து வழங்கினர்.
யுத்தம் காரணமாக மியன்மாரில் இருந்து இடம் பெயர்ந்து பங்களாதேஷில் வாழ்ந்த நிலையில் அங்கிருந்து வெளியேறி தமது உயிரை பாதுகாத்துக் கொள்ள கடலில் பயணித்த போது கடல் மார்க்கமாக பயணித்த மியன்மார் முஸ்லிம் அகதிகள் 105 பேர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியை வந்தடைந்த மியன்மார் அகதிகள் 105 பேரையும் மீட்ட கடற்படையினர் யாழ் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.பின் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குறித்த மியன்மார் அகதிகள் கொழும்பு பாணந்துறையில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு சர்வதேச அமைப்பினால் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023 டிசம்பர் வரையான ஒரு வருட காலம் அவர்களுக்கான அடிப்படை உதவிகளையும் முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அவர்களின் உதவிகள் நிறுத்தப்பட்ட நிலையில் இவ்வருடம் 2024 முதல் அவர்கள் பாணந்துறை பகுதியில் வாடகைக்கு அமர்ந்திருந்த வீடுகளுக்கான மாத வாடகையை செலுத்த முடியாத நிலையில் காணப்பட்டனர்.
குறித்த மக்கள் இருந்த வீடுகளின் ஒப்பந்தம் முடிவடைந்த மையினால் குறித்த வீடுகளின் இருந்து வெளியேற வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.இதனால் எவ்வித அடிப்படை உதவிகளும் இன்றி மியன்மார் அகதிகள் 105 பேரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகை தந்த போது அவர்களுக்கான உடனடி மனிதாபிமான பணிகளை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) உடனடியாக சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியில் அவசர உதவிகளை வழங்கி இருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக அந்த மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக பாணந்துறை பகுதியில் அவர்கள் தங்கியுள்ள வீடுகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவர்கள் தொடர்ச்சியாக அந்த வீட்டில் தங்கி இருக்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
-நேற்றைய தினம் வியாழக்கிழமை பாணந்துரை பகுதிக்குச் சென்ற மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் குறித்த வீடுகளுக்கான வாடகை பணத்தை கையளித்தனர்.
வீட்டு உரிமையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அகதிகளையும் சந்தித்து அவர்களுக்கான வீட்டு நிவாரண பணியாக எதிர்வரும் ஒரு வருடத்திற்கான வீட்டு வாடகைக்கான நிதியை செலுத்தியுள்ளனர்.
17 குடும்பங்களில் தயார் நிலையில் இருந்த 15 குடும்பங்களுக்கு 33 லட்சத்து 15500 ரூபாய் நிதியும் இரண்டு குடும்பங்கள் தமது ஆவணங்களை சரி செய்யாத நிலையில் அவர்கள் குறித்த ஆவணங்களை உடன் சமர்ப்பிக்கும் போது அவர்களுக்கு 4 லட்சத்து 56 ஆயிரம் ரூபாவும் மொத்தமாக 37 லட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபா நிதி மெசிடோ நிறுவனத்தினால் அவர்களின் வீட்டு வாடகைக்காக பகிர்ந்தளிக்க பட்டுள்ளது.
பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்ட மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு மன்னார் மெசிடோ நிறுவனத்தின் மனித நேய பணி உதவியாக குறித்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசினால் போதிய உதவிகள் மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படாத நிலையில் அந்த மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.