கமல்ஹாசன் கதாநாயகராக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி (வயது 48). இவர் பொல்லாதவன், காக்க காக்க, பைரவா உள்பட பல்வேறு படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.