தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: இந்தியாவிலேயே பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் மிக அதிக அளவில் வெறுக்கிற மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் அதை சகித்துக் கொள்ள முடியாமல் ஆதாரமற்ற அவதூறுகளை பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் பரப்பி வருகின்றனர்.
1974-ம் ஆண்டு இந்திய இலங்கை நாடுகளுக்கிடையே 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து உண்மைகளை திரித்து கருத்துகளை கூறி வருகிறார்கள். தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கும், கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிற போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. மோடி ஆட்சி அமைந்த 2014 முதல் 2024 வரை 400 படகுகள் பறிமுதலும், 3,179 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த 2016-ம் ஆண்டு இருநாடுகளுக்கிடையே அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைக்குழு 2020-ம் ஆண்டிற்கு பிறகு ஒருமுறை கூட கூடவே இல்லை.
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமைக்கப்பட்ட இக்குழுவை பா.ஜ.க. அரசு என் கூட்டவில்லை? கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமரான பிறகு கச்சத்தீவு குறித்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் தலைமை வழக்கறிஞர் முகுல் ரொக்டகி உச்சநீதிமன்றத்தில், “கச்சத்தீவை திரும்ப எப்படி மீட்க முடியும்? அப்படி மீட்க வேண்டுமென்றால் போர் தொடுத்து தான் மீட்க முடியும். வேறு எந்த வகையிலும் மீட்க முடியாது” என்று கூறிய பிறகு கச்சத்தீவு பற்றி பா.ஜ.க.வினர் பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? தமிழக மீனவர்கள் எல்லைகளை பொருட்படுத்தாமல் பாரம்பரியமாக மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தருவதற்கு கையாலாகாத பா.ஜ.க. அரசு கச்சத்தீவை பற்றி பேசுவது பிரச்சினையை திசைத் திருப்புகிற செயலாகும்.
இப்பிரச்சினையில் 10 ஆண்டுகளாக ஒரு துரும்பைக் கூட எடுத்து போடாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதவி பிரமாணத்தில் எடுத்துக் கொண்ட ரகசிய காப்பு உறுதிமொழியை அப்பட்டமாக மீறுகிற வகையில் கருத்து கூறியிருக்கிறார். வருகிற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் தமிழக விரோத போக்கிற்கு உரிய பாடத்தை மக்கள் நிச்சயம் புகட்டுவார்கள். அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக பதவி பிரமாண உறுதிமொழியை மீறிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அதிபர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.