உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்
தேர்தல் பிரச்சாரத்தில் கச்சத் தீவு பிரச்சனைக் குறித்து பா.ச.க.வும், காங்கிரசுக் கட்சியும் மாறி மாறி குற்றம் சாட்டி உண்மையான பிரச்சனையைத் திசைத்திருப்ப முயலுகின்றன.
இந்தியப் பெருங்கடலில் செல்லும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சரக்குக் கப்பல்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் ஆகியவற்றைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் சோமாலியா கடற் கொள்ளையர்களிடமிருந்து இக்கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் இந்தியக் கடற்படை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்கு அமெரிக்க அரசு உள்பட பல நாட்டு அரசுகள் பாராட்டுத் தெரிவித்துள்ளன.
கடந்த பல ஆண்டு காலமாக இந்தியப் பெருங்கடலில் செல்லும் பிற நாட்டுக் கப்பல்களை சோமாலியா கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கும் பணியில் இந்தியக் கடற்படைத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அரிய சாதனைகளை புரிந்துவரும் இந்தியக் கடற்படை கரையோர கடற்படை என்ற நிலையிலிருந்து ஆழ்கடல் கடற்படை (Blue Water Navy) என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டதாக இந்தியக் கடற்படைத் தளபதி பெருமை பாராட்டிக்கொண்டிருக்கிறார்.
ஆப்பிரிக்காக் கண்டத்தைச் சேர்ந்த சோமாலியா நாடு, இந்தியாவிலிருந்து 1600 கடல் மைல்களுக்கப்பால் உள்ளது. இந்தியாவின் கடற்படை அதுவரையிலும் சென்று உலக நாடுகளின் கப்பல்களைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களைச் சிங்களக் கடற்படை சுட்டுத் தள்ளுகிறது. ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு போவது போல, நமது மீனவர்களைப் பிடித்துக் கொண்டும் போகிறார்கள். நமது மீனவர்களுக்குச் சொந்தமான இயந்திரப் படகுகள், மீன் வலைகள் போன்றவை பறிமுதல் செய்யப்படுகின்றன அல்லது சேதப்படுத்தப்படுகின்றன. நமது மீனவர்கள் பிடித்த மீன்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.
1983ஆம் ஆண்டிலிருந்து கடந்த 40 ஆண்டு காலமாக எவ்வித அச்சமுமில்லாமல் சிங்கள கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை வேட்டையாடி வருகிறது. ஆனால், அவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தியக் கடற்படை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இராமேசுவரத்திற்கு அருகிலுள்ள மண்டபத்தில் இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. கடற்படையோ, கடலோரக் காவல்படையோ இதுவரை சிங்களக் கடற்படைக்கு எதிராக ஒரு சிறு நடவடிக்கைகூட எடுக்கவில்லை. எங்கேயோ இருக்கிற சோமாலியா நாட்டுக் கடற் கொள்ளையர்களிடமிருந்து உலக நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்தியக் கடற்படை, சிங்களக் கொள்ளையர்களிடமிருந்து நமது மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யத் தயங்குவது ஏன்?
கச்சத் தீவு பிரச்சனையில் பா.ச.க.வும், காங்கிரசும் மாறிமாறி குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால், மன்னார் வளைகுடா பகுதியில் அத்துமீறி நமது மீனவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவரும் சிங்களக் கடற்படைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும் இதுவரை முன்வராதது ஏன்? என்பதற்குரிய காரணத்தை இந்த இரு கட்சிகளும் மக்களிடம் விளக்கியாகவேண்டும்.
அன்புள்ள,
(பழ. நெடுமாறன்)
தலைவர்.