கனடாவில் புகழ்பெற்ற மூத்தோர் பாடல்போட்டி நிகழ்ச்சியான ‘சந்தியா ராகம்-2024’ இன் 4வது சுற்று சிறப்பாக நடைபெற்றது. ‘விலா கருணா’ என்னும் மூத்தோர் நலன் காக்கும் நிலைய’ ஸ்தாபகரும் அதிபருமான திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களின் ஏற்பாட்டில் இந்த போட்டி நிகழ்ச்சி 6வது ஆண்டாக நடைபெற்றுவருகின்றது.
மார்க்கம் நகரில் நடைபெற்ற இந்த 4வது சுற்று நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான ஆர். என். லோகேந்திரலிங்கம் தனது பாரியார் சகிதம் அழைக்கப்பெற்றிருந்தார்.
அன்றைய தினம் பாடக பாடகிகளின் பாடல்களுக்கு இசை வழங்கிச் சிறப்பித்தார்கள் ‘ஜெரோம்’ இசைக்குழுவினர். எல்லாமாக 11 பாடக பாடகிகள் அன்றைய போட்டியில் பங்குபற்றினார்கள். நடுவர்களாக பிரபல இசைக் கலைஞர்கள் பாபு, திருமதி உசா. பாடகர் நல்லநாதன். மற்றும் சாந்தினி வர்மன் ஆகியோர் பணியாற்றி அதை சிறப்பாகச் செய்தார்கள்.
அனைத்துப் பாடக பாடகிகளும் தங்களால் இயன்ற அளவிற்கு சிறப்பாகப் பாடல்களை வழங்கினார்கள். அன்றைய போட்டி நிகழ்ச்சி ஒரு மேடை நிகழ்வாகவே அனைவராலும் ரசிக்கப்பெற்றது.
இறுதியில் 3 போட்டியாளர்கள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு மிகுதி எட்டுபோரும் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்கள். இறுதிப் போட்டி விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.