கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் முரளி சிவகுரு அவர்கள் உற்சாகத்துடன் தெரிவிப்பு
(மார்க்கம் நகரலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
“எமது கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைகளுக்கான தெரிவு ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு தடவை நடைபெறுகின்றது. இந்த தேர்தலின் மூலம் ஆர்வத்தோடு பணியாற்றக்கூடிய தகுதியானவர்கள் தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனாலேயே தொடர்ச்சியாக எமது சம்மேளனம் வளர்ச்சிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது. இதனால் அங்கத்தவர்களுக்கும் கனடிய தமிழ்ச் சமூகத்திற்கும் பயனுள்ள ஒரு அமைப்பாக நாம் செயற்பட்டு வருகின்றோம்”
இவ்வாறு கடந்த 10-04-2024 புதன்கிழமை கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் முரளி சிவகுரு அவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தார். மார்க்கம் நகரில் உள்ள சம்மேளனத்தின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நேர்காணலின் போது சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய நிறைவேற்றுப் பணிப்பாளருமான கென் கிருபா அவர்கள் நேர்காணல் இடம்பெறுவதற்குரிய ஏற்பாடுகளைக் கவனித்தார்.
மிகுந்த சுவாரஸ்யமாக நகர்ந்து சென்ற இந்த நேர்காணலின் போது உதயன் பிரதம ஆசிரியரின் கேள்விகளுக்கு மிகுந்த உற்சாகத்துடன் பதிலளித்தார் தலைவர் முரளி சிவகுரு அவர்கள்.
முதலாவது கேள்வியாக ‘1991ம் ஆண்டு நிறுவப்பெற்ற கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் 18வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு மிகுந்த ஆர்வத்தோடு பணியாற்றிக்கொண்டிருக்கின்ற தாங்கள். இதன் அங்கத்தவராக எப்போது இணைந்து கொண்டீர்கள்? அவ்வாறு இணைந்து கொள்ள வேண்டிய ஆர்வம் எவ்வாறு தங்களுக்கு ஏற்பட்டது? என்று கேட்டபோது முரளி சிவகுரு அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்.
“எமது வர்த்தக சம்மேளனம் கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிவருவதை நாம் அவதானித்து வந்தேன். 2001ம் ஆண்டு என்னையும் சம்மேளனத்தில் இணைந்த கொள்ளும்படி வர்த்தகத்துறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் சிலர் தூண்டினார்கள். எனவே இதில் இணைந்து தமிழ் பேசும் வர்த்தகச் சமூகத்திற்கு ஆதரவு வழங்கி ஒரே குடையில் நிற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் இணைந்து கொண்டேன். அத்துடன் நான் ஈடுபட்டுள்ள வர்த்தகமானது தமிழ் மக்களைச் சார்ந்தது அல்ல என்றாலும் எமது சமூகத்தின் வளர்ச்சியில் வர்த்தகத்துறை தங்கியுள்ளது எனபதையும் நன்கு உணர்ந்து கொண்டே சம்மேளனத்தோடு தொடர்ச்சியாகப் பயணித்து வருகின்றேன். என்னைப் போலவே பல அங்கத்தவர்களும் அதே நோக்கம் கொண்டவர்களாக விளங்குகின்றார்கள்” என்றார்.
பிரதம ஆசிரியரின் அடுத்து கேள்விக்காக காத்திருந்த முரளி சிவகுரு அவர்களிடம் பின்வரும் கேள்வி முன்வைக்கப்பட்டது.
கனடிய வர்த்தக சம்மேளனம் நடத்திய முதலாவது ‘வாணிப வசந்தம் ‘ என்னும் கண்காட்சி 1993ல் ஒரு பாடசாலை சிறு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வர்த்தக சம்மேளத்தை நிறுவிய ‘பிறைட்டன் அரியரட்ணம் மற்றும் ஜெயநாதன் ஆகியோர் சக அங்கத்தவர்களுடன் இணைந்து அதை நடத்தினார்கள். ஆனால், தற்போது கனடிய வர்த்தக சம்மேளனம் நடத்துகின்ற விருது விழா ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இலட்சக்கணக்கான டாலர்கள் பொருட்செலவில் நடைபெறுகின்றது இந்த வளர்ச்சியை எவ்வாறு நாம் கருதலாம்?
இந்த வளர்ச்சியை எமது சம்மேளனம் அடைய சுமார் 30 வருடங்கள் எடுத்துள்ளது. இதற்கு பின்னால் எத்தனையோ பேரின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவை கட்டாயம் இருந்திருக்க வேண்டும். எமது கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தில் கடந்த காலங்களில் இயக்குனர் சபை அங்கத்தவர்களாக பணியாற்றியவர்கள் தங்கள் நேரத்தை அர்ப்பணித்து தான் பணிகளைச் செய்கின்றார்கள். எனது அனுபவமும் அதே போலத்தான். அதற்கு மேலாக ‘ஒற்றுமையே பலம் ‘ என்ற கூற்று காரணமாக உள்ளது. நாம் ஒற்றுமையாகவே திட்டங்களைத் தீட்டுகின்றோம். தீவிரமாக யோசித்து விவாதித்த பின்னரேயே இறுதி முடிவு எடுக்கின்றோம். இது தான் எமது சம்மேளனத்தின் வளர்ச்சிக்கு காரணமாக விளங்குகின்றது என்று நான் உறுதியாக நம்புகின்றேன்” என்று பதிலளித்தார் முரளி சிவகுரு அவர்கள்
அடுத்த கேள்வியாக ஒரு வித்தியாசமானதொன்றை சம்மேளனத்தின் தலைவரிடம் ஒப்படைத்தார் ‘உதயன்’ பிரதம ஆசிரியர் அவர்கள்.
“ஒரு தேசத்தில் புதிதாய் வந்து குடியேறும் ஒரு இனம் அல்லது சமூகமானது வர்த்தகத் துறையில் வெற்றிகரமான முன்னேற்றத்தை அடைந்தால் தான் அங்கு உறுதியான தளத்தை அமைத்துக்கொள்ளலாம் என்று பொருளாதார வல்லுனர்களின் கூற்றுக்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் தமிழ் மக்களின் தற்போதைய இருப்பை இந்த வகையில் எவ்வாறு நீங்கள் பார்க்கின்றீர்கள்?
இந்தக் கூற்றில் உண்மை இருக்கின்றது என்பதை நான் ஒத்துக் கொள்கின்றேன். அதற்கு எமது கனடிய தமிழர் சமூகம் ஒரு உதாரணமாக விளங்குகின்றது என்பதையும் நான் உறுதியாக நம்புகின்றேன். ஏனென்றால் எமது தமிழர் சமூகத்தில் வர்த்தகத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களில் பலர் வளர்ச்சியடைந்துள்ள காரணத்தால் அவர்களில் பலர் எமது தமிழர் சமூகத்தையும் முன்னேற்ற வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் ஆதரவை வழங்குகின்றார்கள். கனடாவிற்கு 1980ம் ஆண்டு தொடக்கம் வந்து குடியேறிய எமது தமிழ் மக்கள் ஆரம்பத்தில் ஏனைய நிறுவனங்களிற்கு சென்று தொழில் வாய்ப்புப் பெற்றார்கள். ஆனால் தற்போது. எமது தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த பல வர்த்தகத்துறை வெற்றியாளர்கள் இன்று ‘தொழில் வழங்கும் நிறுவன அதிபர்களாக உயர்ச்சியடைந்துள்ளார்கள். அவர்ளில் சிலர் எமது சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்லது எமது மொழி பேசுகின்றவர்கள் என தங்கள் இனம் சார்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குகின்றார்கள். இதனால் அந்த நிறுவனங்களும் உயர்ந்து எமது மக்களும் வாழ்க்கையில் உயர்வைக் காண்கின்றார்கள் என்று நான் நிச்சமாக நம்புகின்றேன்” என்று முடித்தார் சம்மேளனத்தின் தலைவர் முரளி சிவகுரு அவர்கள்
முகத்தில் ஒரு புன்னைகையுடன் தலைவர் அவர்களின் பதிலைக் கேட்டவண்ணம் இருந்த உதயன் பிரதம ஆசிரியர் பின்வரும் கேள்வியை அவரை பார்த்து கேட்கின்றார்.
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் வளர்ச்சியையும் அதன் நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்களையும் நான் கவனித்து வருகின்றேன். உதாரணமாக உதவித் தலைவர்கள் சிலர் வெவ்வேறு விடயங்களைக் கவனிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த மாற்றம் காரணமாக சம்மேளனம் அடைந்த வெற்றிகளை குறிப்பிடுவீர்களா?
நிச்சமாகக் கூறுவேன் ஆசிரியர் அவர்களே என்ற முத்தாய்ப்புடன் தனது பதிலை பகிரத் தொடங்கினார் முரளி சிவகுரு அவர்கள். ஆமாம் கடந்த பத்து வருடங்களாத் தான் இவ்வாறான நிர்வாகக் கட்டமைப்பை எமது சம்மேளனம் வகுத்துக் கொண்டது என்று நான் நம்புகின்றேன். ஏனென்றால் எமது கனடிய வர்த்தக சம்மேளனத்தின் செயற்பாடுகள் மற்றும் சமூகம் சார்ந்த ஈடுபாடு ஆகியன அதிகரித்த வண்ணம் உள்ளதால். இயக்குனர் சபையான அனைத்துப் பணிகளையும் ஒரே நபரிடம் ஒப்படைக்காமல் தகுதியானவர்களிடம் பகிர்ந்து கொடுக்கும் ‘புதிய’ அணுகுமுறையை கடைப்பிடிக்கத் தொடங்கியது. உதாரணமாக தலைவரான எனக்கு உதவியாக ஐந்துக்கு மேற்பட்ட உதவித் தலைவர்கள் உள்ளார்கள். அவர்கள் பல பணிகளை பொறுப்பேற்று சரியாகச் செய்து முடிக்கின்றார்கள். உதாரணமாகச் சொன்னால் எமது சம்மேளனத்திற்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொண்டு இதை பலப்படுத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படுகின்றபோது அந்தப் பொறுப்பை உபுதலைவர்- புதிய அங்கத்துவம்’ என்ற பகுதிக்கு உப-தலைராக உள்ளவர்கள் அங்கத்தவர்களை அதிகளவில் இணைத்துக் கொள்ள கடுமையாக உழைக்கின்றார். அதிலும் வெற்றியும் கண்டுள்ளார். இவ்வாறு தான் எமது அனைத்து இயக்குனர் சபை உறுப்பினர்களும். இதற்கு மற்றுமொரு காரணம். எமது சம்மேளனத்தில் இயக்குனர் சபையில் பணியாற்றுகின்றவர் எவ்வித ஊதியத்தை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் தங்கள் நேரத்தையும் அவர்களிடத்தில் உள்ள அனுபவத்தையும் எமது சம்மேளனத்திற்காக அர்ப்பணிக்கின்றார்கள்”என்று மிகவும் ஏற்புடையதும் நீண்டதுமான பதிலைத் தந்து விட்டு ஓய்ந்தார் முரளி சிவகுரு அவர்கள்
5. எமது அவதானிப்பில் தாங்கள் தலைவராகப் பதவியேற்ற காலப்பகுதியில் அல்லது அதற்கு சில வருடங்களுக்கு முன்னர் தொடக்கம் சம்மேளனத்தின் செயற்பாடுகள் இளைய தலைமுறையினரை கவர்ந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் வணிகத்துறையில் அதிகளவு இளம்பெண்கள் ஈடுபாடு கொண்டு வர்த்தக சம்மேளனத்திலும் இணைந்துள்ளதார்களே? அவர்களுடைய வருகையை தாங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
ஆமாம்! நிச்சயமாக மகளிர் அங்கத்தவர்கள் எமது சம்மேளனத்தில் இணைந்த கொள்வதை நாம் ஊக்கப்படுத்தி வருகின்றோம். பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்ற முனைப்பு உலகெங்கும் ஊன்றி பேணப்பட்டு வருகின்ற வேளையில், சுய வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மகளிர் இயக்குனர்சபையிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்கள். அத்துடன் எமது சம்மேளனம் கடந்த பல வருடங்களாக ‘சர்வதேச பெண்கள் தினத்தை’ நாம் சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றோம். இந்த விழாக்களில் பெண்கள் தலைமைத்துவம் பற்றிய கோட்பாட்டை முன்வைத்து விவாத அரங்குகளை நடத்துகின்றோம். இந்த முயற்சியின் முழுமையான பயன்பாடு இன்னும் சில ஆண்டுகளில் ‘வெள்ளிடை மலையாகத்’ தெரிகின்றது எனலாம். இன்னும் சொல்லுவதானால். இளையோரும் மகளிரும் எமது சம்மேளனத்திற்கு இன்றியமையாதவர்களாக உள்ளார்கள் என்று மிகவும் பொருத்தமான பதிலை எமக்களித்தார் தலைவர் முரளி சிவகுரு அவர்கள்.
எதிர்வரும் 20-04-2024 அன்று சனிக்கிழமையன்று கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தில் வருடாந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ள நிலையில் அது தொடர்பான பல பொறுப்புள்ள பணிகள் அடங்கியுள்ள வேளையிலும் எமது வேண்டுகோளை ஏற்று இந்த நேர்காணலைச் செய்ய ஒத்தாசையாக இருந்த கனடா தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் அவர்களுக்கும் சம்மேளனத்தின் நிறைவேற்றுப் பணிபாளராகப் பணியாற்றி வரும் கென் கிருபா அவர்களுக்கும் நன்றி சொல்லி விடைபெற்றோம் நாம்.