நடராசா லோகதயாளன்
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி மாநாட்டில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு ”தனிப்பட்ட அழைப்பு எதையும் தமது கட்சி விடுக்கவில்லை” என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாட்டுக்கு தமிழ் கட்சிகளுக்கான அழைப்பினை வழங்கினோம் அல்லாமல் தனிப்பட்ட அழைப்பு விடுக்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தனிப்பட்ட அழைப்பை எமது கட்சி வழங்கவில்லை தானாக மாநாட்டுக்கு வந்தார். வந்தவரை வரவேற்கும் பண்பின் அடிப்படையில் அவரை அழைத்தோம் என்றார் இராமலிங்கம் சந்திரசேகரன்.
”ஆனால் மாநாட்டிற்கு வந்த சுமந்திரன் எமது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் இந்தியாவைப் போல் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் தமது கட்சியின் தலைவருக்கு கூறியதாக செய்திகள் வெளி வந்ததாக அறிந்தோம்”.
அத்துடன் சமஷ்டியைப் பற்றியோ தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பிலோ தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சம்பந்தன் மற்றும் சிறிதரனை விட நமது கட்சியின் தலைவர் அநுரவுக்கு நன்கு தெரியும் எனவும் செய்தியாளர்கிடம் கூறினார் இராமலிங்கம் சந்திரசேகரன்.
ஆகவே நாம் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். ஆனால் தனி நபர்களை அழைத்து அரசியல் செய்யும் நோக்கம் தமது கட்சிக்கு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால், யாழ்ப்பாணத்திற்கு தமது கட்சியின் மாநாட்டில் பங்கேற்க வந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுராகுமார திசநாயக்கா மூன்று தடவைகள் நேரடியாக தம்மை அழைத்ததையின் நிமித்தம் தான் அங்கு சென்றதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சுமந்திரனுக்கு தனிப்பட்ட அழைப்பை எமது கட்சி விடுக்கவில்லை எனவும் அழையா விருந்தாளியாக வந்தவரையே வந்தாரை வரவேற்கும் பண்பிற்கமைய வரவேற்றதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தமை தொடரபில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,
”யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாட்டுக்கு வருகை தந்த சக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராகுமார திசநாயக்கா அன்று மாலை 3 தடவை தொலைபேசியில் நேரடியாக அழைப்பெடுத்து அழைப்பு விடுத்தார். இதன்போது கூட்டத்திலும் பங்குகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
இருந்தபோதும் கூட்டத்தில் பங்குகொள்ளமுடியாது கூட்டம் நிறைவுற்றதும் சந்திக்கின்றேன் எனக்கூறி கூட்டம் நிறைவுபெறும் எனக் கூறப்பட்ட நேரத்திற்குச் சென்றேன். அப்போதும் கூட்டம் நிறைவுபெறாத சூழலில் காத்திருந்து சந்தித்தேன்” என்று கூறிய சுமந்திரன் இதேநேரம் அனுரகுமார திஸாநாயக்கவிடம் பேசியதை சந்திரசேகரனிற்கு கூறவேண்டிய தேவை ஏறபடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
அத்துடன் சமஷ்டியைப் பற்றியோ தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பிலோ எனக்கோ, மூத்த தலைவர் சம்பந்தன் மற்றும் தமது கட்சியின் தலைவர் சிறிதரனை விட அநுரவுக்கு எவ்வளவு தெரியும் எனபவை உள்ளிட்ட ஏனைய விடயங்களையும் இடம்பெற்றவைகளையும் இராமலிங்கம் சந்திரசேகரன் தனது தலைவரிடமே கேட்டு அறிந்துகொள்ள முடியும் என்றார்.