உள்ளூர் உற்பத்தி நிலைகளை வலுப்படுத்துவதன் ஊடக உற்பத்தி பொருள்களின் அளவு நிலைகளை அதிகரிப்பதுடன் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் இருப்பதை உறுதிசெய்ய அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புகளும் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக மாவட்டத்தின் பொருளாதார வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் துறைசார் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேவிபுரம் பகுதியில் பெண் முயற்சிகாளர்களால் மேற்கொள்ளப்படும் நியூ லக்ஷ்மி தையல் உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றையதினம் (17.04.2024) விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருடனும் கலந்தரையாடல்கள் மற்றும் கள விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.
இதன் ஓர் அங்கமாக முல்லைத்தீவு தேவிபுரம் நியூ லக்ஷ்மி தையல் உற்பத்தி நிலையத்திற்கு விஜயம் செய்து பெண் தொழில் முயற்சியாளர்களினால் மேற்கொள்ளப்படும் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டு அவர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
பெண் தொழில் முற்சியாளரான விஜயலக்ஷ்மி என்பவரினால் நிறுவப்பட்டுள்ள குறித்த நிலையத்தில் தொழில் முயற்சிகளுக்கு மேலும் வலுச்சேர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கிலேயே அமைச்சரது குறித்த விஜயம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதுதொடர்பான அறிக்கை ஒன்றை இரண்டு வார காலத்தில் சமர்ப்பிக்குமாறும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்புக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா அவர்களுக்கும் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்ககளின் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் அதிகமாக மேற்கொள்ளப்படும் வெளிச்சம் பாச்சி மீன் பிடியில் ஈடுபடுவதினால் சிறுதொழிலில் ஈடுபடுகின்ற தாங்கள் பாதிக்கபடுவதாக முறையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.