இலங்கையின் பிரதமராக 6 தடவைகள் ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்து வரலாற்று சாதனை படைத்த போதும் ஒருதடவை கூட பிரதமர் பதவிக் காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய ”துரதிர்ஷ்டம்” அவரை அனுமதிக்கவில்லை. அத்துடன் கட்சித் தலைமைப் பதவியும் எதிர்க் கட்சித்தலைவர் பதவியும் அவரின் கட்சித்தலைவர்களின் படுகொலைகளின் வழியாகவும் தற்போதைய ஜனாதிபதி பதவி கூட மக்கள் போராட்டங்கள், வன்முறைகளின் விளைவாகவுமே ரணில் விக்கிரமசிங்கவை வந்தடைந்தன.
கே .பாலா
இலங்கையின் ஜனாதிபதியாக வேண்டுமென்ற நீண்டகால கனவில் இருந்த ரணில் விக்கிரமசிங்க ஒரு கட்டத்தில் அந்தக்கனவை தானே கலைத்து விட்டு பிரதமர் பதவியிலாவது ஒரு தடவையாவது அதற்குரிய காலம் வரை நிலைத்து இருக்க வேண்டுமெனப் போராடிய போதும் அவருக்கும் அந்தப் பிரதமர் பதவியை இடையிலேயே பறித்துவிடும் துரதிர்ஷ்டத்துக்குமிடையிலான போட்டியில் ஆறு தடவைகள் பிரதமர் பதவியை பறி கொடுத்து தோற்றுப்போன ரணில் விக்கிரமசிங்க எதிர்பாராத நிலையில் தற்போது நாட்டின் ஜனாதிபதியாகி விட்டார்.எனினும் பிரதமர் பதவிகளின்போது தன்னை அந்தப் பதவிகளில் நீடித்திருக்க விடாது ஆப்படித்த துரதிர்ஷ்டம் அவரை விடாது துரத்துவதால் இப்போது ஜனாதிபதி பதவியை காக்கவும் மீண்டும் ஜனாதிபதியாகவும் போராடத் தொடங்கியுள்ளார்.
1948 ஆம் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஆட்சி பீடமேறிய சேனநாயக்க குடும்பத்தின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி,இலங்கையில் 2020 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத்திற்கான தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூட பெறமுடியாது வரலாற்று தோல்வியடைந்த போதும் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் ஊடாக தனி ஒருவனாக பாராளுமன்றம் வந்து இன்று ஜனாதிபதியாக பதவி வகிக்கும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவை மிகப்பெரும் அதிர்ஷ்டக்காரர்,95.100 ஆசனங்களைப்பெற்றும் ஜனாதிபதியாக முடியாத அவரை அதிர்ஷ்டம் ஜனாதிபதியாக்கியுள்ளது என்று கூறுவோருக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் துரதிர்ஷ்டத்துக்கும் இடையில் பல வருடங்களாக நடந்த போட்டியும் அதில் ரணில் விக்கிரமசிங்க தொடர் தோல்வியடைந்த வரலாறும் தெரியாதிருக்கலாம்
இலங்கையின் பிரதமராக ஒரு தடவையேனும் அதற்குரிய காலம் வரைக்கும் நீடித்திருக்க சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் போராடியபோதும் இறுதிவரை அதில் வெற்றிபெற முடியாமல் தோற்றுபோனவரும் தற்போது அதிர்ஷ்டத்தில் கிடைத்தது எனக் கூறப்படும் ஜனாதிபதி பதவியை பாதுகாக்கவும் மீண்டும் ஜனாதிபதியாகவும் போராடும் ரணில் விக்கிரமசிங்கவை விடாது துரத்திய.துரத்தும் துரதிர்ஷ்டம் தொடர்பில் பார்ப்போம்.
ரணில் விக்கிரமசிங்க தனது ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வியை கொழும்பு, ரோயல் கல்லூரியில் பயின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த இவர், 1972 ஆம் ஆண்டில் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இணைந்து ஐந்து வருடங்கள் ஒரு வழக்கறிஞராக கடமையாற்றினார்.1977 ஆம் ஆண்டு தனது 28ஆவது வயதில் பியகம தேர்தல் தொகுதி மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவான இளம் சட்டத்தரணியான இவர் தனது பல்கலைக்கழக நாட்களில் இருந்தே ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணியில் பணியாற்றி வந்தார். அத்துடன் 1975 ஆம் ஆண்டு பியகம தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டதுடன் அந்தக் காலகட்டத்தில் வயதில் மிகவும் குறைந்த அரசியல்வாதியாக முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்தனவின் தலைமையிலான அரசாங்கத்தில் வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சராகப் பதவி வகித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் அசாதாரணமான மதிநுட்பம் மற்றும் பணியாற்றுவதற்கான தனித்துவம் மிக்க மன ஆற்றல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு பின்னர், அவர் இளைஞர் விவகார மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் கல்வி அமைச்சராகவும் பணியாற்றிவந்த ரணில் விக்கிரமசிங்க, அரசியல் விவகாரங்களைப் பற்றிய ஆழ்ந்த அறிவு பெற்றவர் என்ற வகையில், 1989 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தில் சபை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவை மட்டுமன்றி, அவர் கைத்தொழில் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சராகவும் இருந்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்,பிரதமர் ,ஜனாதிபதி என்று அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்து பழுத்த அனுபவத்தைப் பெற்றவர்.
1977ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக இலங்கைப் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே பாராளுமன்ற உறுப்பினர், இலங்கையில் 6 தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர், 4 தடவைகள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்தவர் என்ற பெருமைகள் ரணில் விக்கிரமசிங்கவும் மட்டுமே உண்டு. டட்லி சேனநாயக்க மற்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் மூன்று தடவைகள் மாத்திரமே பிரதமர்களாக இருந்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க 6 தடவைகள் பிரதமராக இருந்துள்ளார். அதே போன்றே பிரதமர் பதவியும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவியும் எதிர்க் கட்சித்தலைவர் பதவியும் அக்கட்சியின் தலைவர்கள் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்ட நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைத்த வரலாறும் உண்டு.
அதாவது 1993 மே மாதம் முதலாம் திகதி அப்போது ஜனாதிபதியாகவிருந்த ரணசிங்க பிரேமதாச கொழும்பு ஆமர் வீதி சந்தியில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனையடுத்து பிரதமராகவிருந்த டி.பி.விஜேதுங்க இடைக்கால ஜனாதிபதியாகப்பொறுப்பேற்றதையடுத்து ஏற்பட்ட பிரதமர் வெற்றிடத்துக்கு 1993 மே 17 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். இதுவே ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக பதவி வகித்த முதல் சந்தர்ப்பமாகவிருந்தபோதும் 1994 ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையே அப்பதவியில் அவரால் நீடிக்க முடிந்தது.இதன்மூலம் பிரதமர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாமல் முதல் தடவையாக பதவி இழந்தார்.
1999 ஆம்ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் பொதுஜன முன்னணியில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஜனாதிபதியாகிய நிலையில் 2000 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அவரின் கட்சி வெற்றிபெற்றபோதும் அதன்பின்னர் ஏற்பட்ட குழப்பங்களையடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றதையடுத்து ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது தடவையாக பிரதமரானார். இந்த அரசில் ஜனாதிபதியாக சந்திரிகா பண்டார நாயக்க குமாரணதுங்கவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் இருந்தனர். ஆனால் இருவருக்குமிடையில் ஏற்பட்ட இழுபறிகளினால் ஆட்சிக்காலம் முடியுமுன்னரே ஜனாதிபதியான சந்திரிகா பண்டார நாயக்க குமாரணதுங்கவினால் 2004 ஆம் ஆண்டு அரசு கலைக்கப்பட்டது. இதனால் ரணில் விக்கிரமசிங்க 2001 டிசம்பர் 9 ஆம் திகதி முதல் 2004 ஏப்ரல்2 ஆம் திகதி வரையே பிரதமராக இருக்க முடிந்தது. இதன்மூலம் பிரதமர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாமல் இரண்டாவது தடவையாக பதவி இழந்தார்.
இதன்பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஐக்கியதேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக்கட்சிகளின் ஆதரவுடன் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதையடுத்து ரணில் விக்கிரமசிங்க மீண்டும் 2015 ஜனவரி 9 ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டபோதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய அரசொன்றை அமைப்பதற்காக 2015 ஜூன் 26 ஆம் திகதி நள்ளிரவு பாராளுமன்றத்தைக் கலைத்து, 2015 ஆகஸ்ட் 17 இல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டதனால் 8 மாதங்கள் மட்டுமே ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் காபந்து அரசொன்று செயற்படுமென்பதனால் 2015 ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இருந்தார். இதன்மூலம் பிரதமர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாமல் மூன்றாவது தடவையாக பதவி இழந்தார்.
இந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றதையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராகவிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து நல்லாட்சி அரசொன்றை அமைத்தது.இந்த அரசில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க 2015 ஆகஸ்ட் 24 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டார் எனினும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து . 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த மகிந்தராஜபக்சவை பிரதமராக நியமித்தார். இதனால் தனது பிரதமர் பதவிக்குரிய காலம் முடியுமுன்னரே ரணில் பதவியை இழந்தார். இதன்மூலம் பிரதமர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாமல் நான்காவது தடவையாக பதவி இழந்தார்.
எனினும் பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி நீக்கியமை தொடர்பில் நீதிமன் றத்தில் தொடரப்பட்ட வழக்குகளையடுத்து வழக்கு தீர்ப்புக்கள் அடிப்படையில் மீண்டும் ஐந்தாவது தடவையாக 2018 டிசம்பர் 16 ஆம் திகதி பிரதமராகப்பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க 2019 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றதையடுத்து 2019 நவம்பர் 20 இல் பிரதமர் பதவியைத் துறந்தார். இதன்மூலம் பிரதமர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாமல் ஐந்தாவது தடவையாக பதவி இழந்தார்.
இதனையடுத்து 2020 பாராளுமன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி போட்டியிட்டாலும், கட்சியில் இருந்து எவரும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகாமல் வரலாற்றுத் தோல்வியை சந்தித்தது. ரணில் விக்கிரமசிங்க கூட தோல்வியடைந்தார். ஆனால் கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் அவர் மட்டும் 2021 ஜூன் 23 ஆம் திகதி பாராளுமன்றம் வந்தார். இவ்வாறான நிலையில்கோத்தபாய ராஜபக்ஸவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததன் விளைவாக மகிந்த ராஜபக்ஸ 2022 மே 9 இல் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.இதனையடுத்து மக்கள் போராட்டத்தை சமாளிக்க 2022 மே 12 அன்று ரணில் விக்கிரமசிங்கவை கோத்தபாய ராஜபக்ஸ பிரதமராக நியமித்தார்.
எனினும் 2022 ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. கோத்தபாய ராஜபக்ஸ தலைமறைவானார். இந்நிலையில் 2022 ஜூலை 13 இல் கோத்தபாய ராஜபக்ஸநாட்டை விட்டு வெளியேறி 14 ஆம் திகதி தனது ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதை அடுத்து, பிரதமராகப் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க ஜூலை 15 இல் பதில் ஜனாதிபதியானார். 2022 ஜூலை 20 ஆம் திகதி , பாராளுமன்றத்தில் 225 எம்.பி.க்களிடையில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்று 8ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் பிரதமர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாமல் ஆறாவது தடவையாக பதவி இழந்தார்.
இதேவேளை ஐக்கியதேசியக்கட்சியின் தலைமைப்பதவியும் எதிர்க் கட்சித்தலைவர் பதவியும் அதன் தலைவரான காமினி திசாநாயக்கா 1994 அக்டோபர் 24இல் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைத்தன. 1994 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பல்வேறு சவால்கள், நெருக்கடிகள், சதிகள், கழுத்தறுப்புக்கள் கட்சி பிளவுகளுக்கு மத்தியிலும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க தொடர்கின்றார்.
1977 ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான தனது 47 வருடகால அரசியல் வாழ்க்கையில் 6 தடவைகள் இலங்கையின் பிரதமராக பதவி வகித்த பெருமையை பெற்ற போதும் அந்த 6தடவைகளும் பிரதமர் பதவிக்குரிய 5 வருட காலம் முழுவதும் ரணில் விக்கிரமசிங்கவினால் பிரதமர் பதவியில் இருக்க முடியவில்லை. இடை நடுவில் அவர் பிரதமர் பதவியை இழப்பதே துரதிஷ்ட வரலாறாகியுள்ளது.பிரதமர் பதவியைப் பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்கவை முழுகாலப் பகுதிக்கும் அமர விடாது துரத்தும் துரதிர்ஷ்டமே தொடர்ந்தும் வெற்றி பெற்று வந்துள்ளது .
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவை துரத்தி துரத்தி அடித்த துரதிர்ஷ்டம் என்ன நினைத்ததோ தெரியவில்லை அவரே கலைத்துவிட்ட ஜனாதிபதி பதவிக் கனவை நனவாக்கி கொடுத்து தற்போது புது ஆட்டத்தை தொடக்கி வைத்துள்ளது. ஒரு முறையேனும் பிரதமர் பதவியை முழுமையாக பூர்த்தி செய்ய துரதிர்ஷ்டத்துடன் போராடித் தோற்றுப்போன ரணில் விக்கிரமசிங்க தற்போது கிடைத்த தனது ஜனாதிபதி பதவியை பாதுகாக்கவும் மீண்டும் ஜனாதிபதியாகவும் துரதிர்ஷ்டத்துடன் மீண்டும் போராடத் தொடங்கியுள்ளார்.
இந்த ஜனாதிபதி பதவியை இறுதிவரை தொடரக்கூடிய அரசியல் கள நிலையும் மீண்டும் ஜனாதிபதியாவதற்கான மக்கள் மன நிலையும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக இல்லாத நிலையே உள்ளதால் மீண்டும் ரணில்-துரதிர்ஷ்டத்துக்கிடையிலான போட்டியில் துரதிர்ஷ்டமே வெற்றிபெறக்கூடிய சூழலே பிரகாசமாகவுள்ளது.