ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளில், அதிகம் பேசு பொருளாக மாறியிருப்பது இந்த முறைதான். அதேபோல அது அதிகம் தரப்புக்களால் முன்னெடுக்கப்படுகிறது என்பதும் இந்த முறைதான். அது மட்டுமல்ல, அது அதிகம் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் ஆபத்துக்கள் நிறைந்திருப்பதும் இந்த முறைதான்.
இந்தக் கோரிக்கையை கோட்பாட்டு ரீதியாக முதலில் முன்வைத்தவர் மு.திருநாவுக்கரசு. எனினும் இக்கோரிக்கையை அதற்குரிய கோட்பாட்டு அடர்த்தியோடு விளங்கிக் கொள்ளாமல் பிர யோகித்தவர்கள் குமார் பொன்னம்பலமும் சிவாஜிலிங்கமும் ஆவர்.
மு.திருநாவுக்கரசு 2010 ஆம் ஆண்டு அதாவது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த அடுத்த ஆண்டு “பொங்குதமிழ்” என்ற இணையதளத்தில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும் என்று கட்டுரை எழுதினார். ஆனால் அந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தரப்பு ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களிப்பதாக நினைத்துக் கொண்டு, அதே ராஜபக்சக்களின் ஆணையை முன்னெடுத்த தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள்.
திருநாவுக்கரசுவின் கட்டுரையை யாரும் பொருட்படுத்தவில்லை. பின்னர் 2015 ஆம் ஆண்டும் திருநாவுக்கரசு அதே கட்டுரையை சிறு மாற்றங்களோடு எழுதினார். அப்பொழுது ஆட்சி மாற்ற அலை வீசியது.ராஜபக்சக்களை தோற்கடிப்பதற்காக ரணில் + மைத்திரி கூட்டு ஒன்றை மேற்கு நாடுகளும் இந்தியாவும் சேர்ந்து உருவாக்கின. அப்பொழுதும் தமிழ் மக்கள் ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களிப்பதாகக் கருதிக் கொண்டு இறுதிக்கட்டப் போரில் தற்காலிகமாக பாதுகாப்பு மந்திரியாக இருந்த மத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள்.
திருநாவுக்கரசு இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் அது தொடர்பாக எழுதிய பின்னரும் தமிழ் அரசியல் சமூகம் அது தொடர்பாக கவனத்தில் எடுக்கவில்லை. அதனால் நோர்வையில் வசிப்பவரும் திருநாவுக்கரசுவின் மாணவரும் ஆகிய ஒரு புலமையாளர் அவரிடம் கேட்டார்… “நீங்களும் திரும்பத் திரும்ப எழுதுகிறீர்கள். ஆனால் யாரும் அதனை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லையே” என்று. அப்பொழுது திருநாவுக்கரசு சொன்னாராம் ஒருமுறை எழுதியதை யாரும் உள்வாங்கவில்லை என்பதனால்தான் அதைத் திரும்ப திரும்ப எழுத வேண்டியிருக்கிறது என்று.
அதன்பின் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வந்த பொழுது தமிழ் மக்கள் பேரவை ஒரு சுயாதீனக் குழுவை உருவாக்கியது. அக்குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எல்லாக் கட்சிகளையும் சந்தித்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பாக தெளிவான பதில்களைக் கூறவில்லை. கோட்டாபய தனது அமெரிக்கப் பிரஜா உரிமையைத் துறப்பதில் இருக்கும் சட்டச் சிக்கல்களை முன் வைத்து சம்பந்தர் உரையாற்றினார். அதுமட்டுமல்ல, ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால் அது சிங்கள மக்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களைத் தூண்ட உதவாதா என்றும் அவர் கேட்டார்.
தமிழரசுக் கட்சி அப்பொழுது தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை. கூட்டமைப்புக்குள் அங்கம் வகித்த பங்காளிக் கட்சிகள் துணிந்து முடிவெடுக்கவில்லை. விக்னேஸ்வரன் அதை ஆதரித்தார். ஐங்கரநேசன், அனந்தி போன்றவர்களும் அதை ஆதரித்தார்கள். எனினும் ஒரு கட்டத்துக்கு மேல் அந்த விடயத்தை செயலுருப்படுத்த தமிழ் மக்கள் பேரவையால் முடியவில்லை. அது உருவாக்கிய சுயாதீனக் குழுவானது அது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டதோடு அமைதியடைந்து விட்டது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கும் பல மாதங்களுக்கும் முன்னரே இந்த விடயத்தை முதலில் கையில் எடுத்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அதன் பின் “மக்கள் மனு” என்று அழைக்கப்படும் ஒரு சிவில் சமூகம் அதனை முன்னெடுக்கின்றது. அந்தச சிவில் சமூகம் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் இரண்டு கருத்தரங்குகளையும் நடத்தியிருக்கிறது. அதே சமயம் புலம்பெயர்ந்த தமிழ் முதலாளி ஒருவரும் இது தொடர்பில் சிந்திப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.
விக்னேஸ்வரன் அது தொடர்பாக வெளிப்படையாகவே பேசி வருகிறார்.தமிழ் பொது வேட்பாளர் என்று தெரிவை சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு அடுத்தபடியாக அவர் இப்பொழுது அதிகமாகப் பேசி வருகிறார். அவர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரை அவ்வாறு பொது வேட்பாளராக நிறுத்தலாமா என்றும் ஒரு பரிந்துரையைச் செய்திருந்தார். அதேசமயம் ஈழத்துச் சிவசேனையின் தலைவராகிய மறவன்புலவு சச்சிதானந்தம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனை பொது வேட்பாளராக சிபாரிசு செய்திருந்தார்.
இவ்வாறாக தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் இப்பொழுது மேற்பரப்புக்கு வந்து விட்டது. அது அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக மாறிவிட்டது. அதில் பல்வேறு தரப்புகளும் ஈடுபாட்டைக் காட்டுகின்றன. அல்லது அதை குழப்புகின்றன. அவ்வாறு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவைக் குழப்பும் தரப்புகள் அல்லது அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் தரப்புகள், பின்வரும் காரணங்களை முன்வைக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
முதலாவது காரணம், தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவு ஏற்கனவே தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ஒன்று என்பது. குமார் பொன்னம்பலம் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் அதில் ஏற்கனவே தோல்வி கண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. குமாரும் சிவாஜியும் அதை அதற்குரிய கோட்பாட்டு அடர்த்தியோடு முன்னெடுக்கவில்லை. அவர்கள் தமிழ் வேட்பாளர்கள் தவிர தமிழ் தரப்பில் பெரும்பாலானவர்களின் விருப்பங்களை பிரதிபலித்த பொது வேட்பாளர்கள் அல்ல.
ஆனால் இப்பொழுது பேசப்படுகின்ற தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர்,தமிழ் மக்களின் தேசிய ஐக்கியத்தின் குறியீடு. அவர் தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலை ஒரு மறைமுக பொது வாக்கெடுப்பாக மாற்றும் அரசியல் நகர்வின் குறியீடு.
தமிழ்ப் பொது வேட்பாளர் தேர்தலில் வென்று ஜனாதிபதியாக வரப்போவதில்லை. ஆனால் பெருமளவுக்கு தமிழ் வாக்குகளை அவர் திரட்டும் பொழுது, அவர் தமிழ்க் கூட்டு மனச்சாட்சியின் குறியீடாகப் பார்க்கப்படுவார். தமிழ்ப் பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவார் என்ற கற்பனையோடு யாரும் தமிழ் வேட்பாளரை நிறுத்தவில்லை. அவர் சிங்கள வேட்பாளர்களின் வெற்றியை சோதனைக்கு உள்ளாக்குவார் என்ற ஒரு பேர வாய்ப்பு அதில் உண்டு. அதைவிட முக்கியமாக, அவர் தேர்தலில் வெல்லப் போவதில்லை. ஒரு ஜனாதிபதி வேட்பாளராக அவர் தேர்தலில் தோற்பார். ஆனால் அவர் எவ்வளவு வாக்குகளைத் திரட்டுகிறார் என்பது தமிழ் மக்கள் எந்த அளவுக்கு தேசமாக இருக்கிறார்கள் என்பதனை ஒரு குறியீடாக காட்டும். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டி தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக அவர் நிற்பார். அது முதலாவது வெற்றி. தமிழ்த் தேசிய ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவது இரண்டாவது வெற்றி.இலங்கை அரசாங்கம் நடத்தும் ஒரு தேர்தலையே தமிழ் மக்கள் மறைமுக பொதுசன வாக்கெடுப்பாக மாற்றலாம் என்பதும் ஒரு வெற்றி தான்.எனவே அந்தத் தேர்தல் களத்தை தமிழ் ஐக்கியத்தை கட்டி எழுப்புவதற்கான ஒரு பரிசோதனை வாய்ப்பாக பயன்படுத்துவதுதான் தமிழ்ப் பொது வேட்பாளரின் நோக்கமே தவிர, வென்று ஜனாதிபதியாக வருவது அல்ல.
இரண்டாவது காரணம், தமிழ்ப் பொது வேட்பாளர் தோல்வியுற்றால் அது தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளின் தோல்வியாகக் காட்டப்படும் என்பது. உண்மைதான். ஆனால் தேர்தல் என்று வந்தால் வெற்றி மட்டும் தான் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தரப்பை ஒன்றிணைப்பதற்கான மிக வலிமையான ஒரு செய்முறையாக அது இருக்கும் என்பதே வெற்றி தான். அங்கு தேர்தல் வெற்றியை மட்டும் வைத்து அந்த முயற்சியின் இறுதியான விளைவை மதிப்பிட வேண்டியதில்லை.
கடந்த 15 ஆண்டுகளிலும் இம்முறை பொது வேட்பாளர் என்ற கோரிக்கை மேற்பரப்புக்கு வந்திருப்பது ஒரு வெற்றி.அதை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எப்படி மேலே உயர்த்துவது என்று தமிழ்த் தரப்பு சிந்தித்து ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.
மூன்றாவது காரணம் ,ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களைத் தூண்டிவிடுவார் என்பது. சம்பந்தர் திரும்பத் திரும்ப அதைச் சொல்லுகிறார். தமிழரசு கட்சிக்குள் ஒரு பகுதியினரும் அதைக் கூறுகிறார்கள். அவ்வாறு தூண்டப்படும் சிங்கள வாக்காளர்கள் ராஜபக்சக்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும் எனவே ராஜபக்சக்களை வெற்றி பெற வைப்பதற்குத்தான் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுகிறார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூற வருவதன் கோட்பாட்டு விளக்கம் என்னவென்றால், தமிழ் மக்கள் எதிர்ப்பைக் காட்டினால் அல்லது தமிழ் மக்கள் தனித்து முடிவு எடுத்தால், அது சிங்கள இனவாதத்தைத் தூண்டிவிடும் என்பது. ஆனால் இங்குள்ள அடிப்படைக் கேள்வி என்னவென்றால், சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் இப்பொழுது மட்டும் என்ன தூங்கிக் கொண்டா இருக்கிறது? அப்படி என்றால் விகாரைகளைக் கட்டுவதும் தமிழ் மரபுரிமைச் சின்னங்களை ஆக்கிரமிப்பதும் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிப்பது யார்? அவர்களை யார் இயக்குகிறார்கள்?
சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் கோபித்துக் கொள்ளும் அல்லது அது தன்னை மீண்டும் பலப்படுத்திக் கொள்ளும் என்று பயப்பட்டால் தமிழ் மக்கள் எதிர்ப்பு அரசியலையே கையில் எடுக்கக் கூடாது. தமிழ் தேசியம் என்ற வார்த்தையெல்லாம் பயன்படுத்தக் கூடாது. போராட்டம் சுதந்திரம் என்றெல்லாம் பிரகடனங்களைச் செய்யக்கூடாது.
நாலாவது காரணம், ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்துகிறவர்கள் யாரோ ஒரு சிங்கள வேட்பாளரோடு டீல் செய்ய விரும்புகிறார்கள் என்ற சந்தேகம். இருக்கலாம். அதற்கு வாய்ப்புகள் உண்டு.அதேநேரம் அது தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகள் என்ன என்பதில்தான் தங்கி இருக்கின்றது. ஏனென்றால் தமிழ் பொது வேட்பாளரோடு ஏதோ ஒரு டீலுக்கு வரும் சிங்கள வேட்பாளர் சிங்கள பௌத்த வாக்குகளை இழக்க வேண்டிவரும் என்பதே இலங்கைத் தீவின் கள யதார்த்தமாகும். சரத் பொன்சேகாவுக்கு அதுதான் நடந்தது. மைத்திரிக்கு அது நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் சம்பந்தர் மையால் உடன்படிக்கை எழுதுவதற்கு பதிலாக இதயங்களுக்கு இடையில் உடன்படிக்கை செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் இலக்கியத்தனமாகப் பேசினார்.
தமிழ்ப் பொது வேட்பாளர் உச்சமான கோரிக்கையை முன் வைத்தால், அவருடன் எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் பேரம் பேச வர மாட்டார் என்பதே யதார்த்தம். எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் முன்வைக்கப் போகும் கோரிக்கைகள் எவை என்பதுதான் அதைத் தீர்மானிக்கின்றது.
ஐந்தாவது காரணம், எந்த ஒரு சிங்கள வேட்பாளரையும் நம்ப முடியாது. எனவே தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பது. உண்மை. எந்த ஒரு சிங்கள வேட்பாளரையும் நம்பக் கூடாது என்பதற்காகத்தான் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் முன்வைக்கப்பட வேண்டும் என்று கேட்கப்படுகிறது. 15 ஆண்டுகளாக தமிழ் மக்களின் வாக்குகள் வெற்றுக் காசோலையாக யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்கு வழங்கப்பட்டன. அதை நிறுத்தி அதை தமிழ் வேட்பாளருக்கு உரியதாகத் திரும்பினால் என்ன ?
எனது கட்டுரைகளில் திரும்பத் திரும்ப நான் கூறுவது போல, பகிஸ்கரிப்பு ஒரு தெரிவுதான் இந்தியாவில் நோட்டா என்று தெரிவு உண்டு. அதைப் போல. ஆனால் அந்த தெரிவை முன்வைக்கும் ஒரு கட்சி அதற்காக உழைக்க வேண்டும். அந்த தெரிவை மக்கள் மயப்படுத்த வேண்டும். அறிக்கையை விட்டுவிட்டு பேசாமல் இருக்க முடியாது. அப்படி இருந்தால் ஏனைய கட்சிகள் மக்களைப் பிழையான வேட்பாளரை நோக்கிச் சாய்த்து கொண்டு சென்று விடுவார்கள். அதாவது தமிழ் வாக்குகள் மீண்டும் வெற்றுக் காசோலையாக யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை நோக்கிப் போகும்.
தேர்தலைப் புறக்கணிப்பது ஒரு தெரிவு. ஆனால் அதற்காக உழைக்க வேண்டும். அதை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதுதான் சுதந்திரத்திற்காகப் போராடும் ஒரு மக்கள் கூட்டம் செய்ய வேண்டியது.
மேற்சொன்னவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது தக்கபூர்வமாகத் தெளிவாகத் தெரிகிறது, தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுபவர் தமிழ் மக்களின் கூட்டு மனோநிலையின் குறியீடாக இருக்க வேண்டும். அவர் தமிழ்க் கட்சி அரசியலைப் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடாது. தமிழ் மக்கள் மத்தியில் தற்போது தூண்டி விடப்படும் பிரதேச, சாதி, சமய, பால் அசமத்துவங்களை அவர் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது. எந்த ஒரு சிங்கள வேட்பாளரோடும் அவர் தன்னிச்சையாக டீலுக்கு போக முடியாது. ஜனாதிபதித் தேர்தல் மூலம் அவருக்கு கிடைத்த பிரபல்யத்தை அவர் அடுத்தடுத்த தேர்தல்களில் முதலீடு செய்யக்கூடாது…. போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு பொது வேட்பாளரை தமிழ் மக்கள் முன் நிறுத்துவார்களாக இருந்தால், அவ்வாறு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்குரிய கட்டமைப்புகளை தமிழ் மக்கள் உருவாக்க முடிந்தால், அது கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியலில் திருப்பகரமான ஒரு நகர்வாக அமையும்.