சிவா பரமேஸ்வரன்…..மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
(இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்)
பகுதி-2
சரித்திரத்தின் வலி போகாது, அதன் வடு மறையாது.
அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் நான் லண்டனில் எனது வீட்டிற்கு வந்து உறங்கச் செல்ல முயன்றாலும் ஏனோ ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.
முதல் நாள் இரவுப் பணி.
இந்திய நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பிபிசி தமிழோசை சிறப்பு ஒலிபரப்புகளை திட்டமிட்டு இரண்டு வாரங்களுக்கு செய்தது. மே 16 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நாள். அன்று நள்ளிரவு அளவில் (இந்திய நேரம்) முடிவுகள் முழுமையாக வெளியாகிவிட்டன. அதையொட்டி 17.5.2009 லண்டன் நேரம் அதிகாலை 2.30 முதல் 2.45 மணிவரையிலான அந்த ஒலிபரப்பு இந்திய தேர்தலில் வெற்றியை மையப்படுத்தியே இடம்பெற்றது.
அவ்வகையில் அந்த சிறப்பு ஒலிபரப்பில் தேர்தல் முடிவுகள், முக்கியமான தொகுதிகளில் வெற்றிபெற்றவர்கள், தோல்வியடைந்தவர்களின் விவரங்கள் ஆகியவற்றுடன் அடுத்த ஆட்சி அமைப்பு தொடர்பிலான தகவல்களும் இடம்பெற்றன.
இதற்கு அப்பாற்பட்டு அன்றைய அந்த சிறப்பு ஒலிபரப்பில், இந்தியாவில் அடுத்து அமையவுள்ள ஆட்சியும், அதன் ஆட்சியாளர்களும் இலங்கை பிரச்சனையை எவ்வாறு கையாள்வார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எப்படியாக இருக்கும் என்பது தொடர்பில், புலம்பெயர் தேசம் ஒன்றில் வசிக்கும் மூத்த செய்தியாளர் ஒருவருடன் ஆய்வு ஒன்றை செய்துவிட்டு அதை எனது மேசைக்கு வந்து எடிட்டிங் செய்து கொண்டிருந்தேன்.
நான் யாருடன் உரையாடலை முடித்துவிட்டு எனது இருக்கைக்கு வந்து எடிட்டிங் வேலையை செய்துகொண்டிருந்தேனோ அவரிடமிருந்து சிறிது நேரத்தில் ஒரு அழைப்பு வந்தது. அப்போது லண்டனில் பின்னிரவு நேரம்.
“அண்ணா, நாளை எனது பேட்டி ஒலிபரப்பாகுமா?”
“ஏன்….. அதிலென்ன சந்தேகம்….. அதற்கான வேலையைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்!”
“இதைவிட வேறு முக்கியமான செய்தி வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?”
“ஏன்….என்ன!….ஏதேனும் முக்கியமான தகவல் உள்ளதா? இருந்தால் கூறுங்களேன்.”
“மஹிந்த அவசரமாக நாடு திரும்புகிறார். அரச அச்சகத்தின் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வேலைக்கு வரும்படி பணிக்கப்பட்டுள்ளனர். மஹிந்தவை வாழ்த்தி சுவரொட்டிகள் அச்சடிக்கப்படுவதாக ஒரு தகவல் வந்துள்ளது. அதை நான் உறுதி செய்துகொள்ள முயல்கிறேன். உங்களுக்கு அப்படி ஏதேனும் தகவல் கிடைத்ததா? கிடைத்தால் என்னுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?”
”சரி…..நானும் முயல்கிறேன்…… அவதானமாக இருக்கிறேன்” என்று கூறிவிட்டு மிகவிரைவாக அதிகாலை ஒலிபரப்பிற்கு வேண்டிய செய்திகளை தயார் செய்யும் அதேவேளை ஓயாமல் தொலைபேசியை சுழற்றிக்கொண்டிருந்தேன் உலகமெங்கும்.
எனது மனதிற்குள் வந்த முதல் கேள்வி. ஜோர்டான் நாட்டிற்கு அரசுமுறை பயணமாக சென்றிருக்கும் மஹிந்த எதற்காக அவசரமாக நாடு திரும்புகிறார்? சரி, ஒரு நாட்டின் ஜனாதிபதி அரச பயணத்தை பாதியில் முடித்துகொண்டு நாடு திரும்புவது புதிதல்ல என்றாலும், எதற்காக அரச அச்சகத்தின் ஊழியர்கள் அவசர அவசரமாக அலுவலகம் வருமாறு அழைக்கப்படுகின்றனர். அவரை வாழ்த்தி சுவரொட்டிகள் அச்சிடப்படுவதாகக் கூறப்படுவது ஏன்? இப்படி பல கேள்விகள் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தன.
ஒரு செய்தியாளருக்கே உரிய அந்த குறுகுறுப்பு தொடர்ந்த வண்ணமே இருந்தது.
ஏன் இவ்வளவு படபடப்பு; மஹிந்தவை தொடர்புகொள்ள முடிந்தால் அவரிடமே நேரில் கேட்டுவிடலாமே என்ற எண்ணம் தோன்றியது. ஆனால், ஜோர்டான் நாட்டில் அவரை எங்கே தேடுவது?
தேள் கடித்தவனுக்கு விஷம் ஏறுவது போன்று நேரம் ஒடிக்கொண்டிருந்தது.
மனதில் சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற, பிபிசியின் அரபு மொழி சேவையில் இருக்கும் நண்பர்கள் யாராவது உதவக் கூடுமே என்று எண்ணி அவர்கள் பிரிவுக்கு சென்று உதவுமாறு கோரினேன். சரி, பார்ப்போம் என்ற அவர்கள், “உங்கள் ஜனாதிபதி எங்கு தங்கியிருக்கிறார்? “என்று கேட்டார்கள். அது தெரிந்தால் நான் ஏன் உங்களை சிரமப்படுத்தப் போகிறேன் என்று மனதில் எண்ணியவாறு அதற்குத்தானே உங்கள் உதவியை நாடியிருக்கிறேன் என்று கூற அவர்களும் “டோண்ட் வொறி…லெட்ஸ் ட்ரை” என்றார்கள்.
அடுத்த நிமிடம் ஜோர்டான் தலைநகரான அம்மானிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அரைமனதுடன் அழைப்பெடுத்தால் எதிர்ப்பார்த்தபடி பதில் ஏதுமில்லை. ஏனெனில் ஜோர்டானில் அப்போது நள்ளிரவு கடந்த நேரம். அடுத்து அங்குள்ள அனைத்து ஐந்து நட்சத்திர ஹொட்டல்களுக்குத் தொலைபேசி அழைப்புகள். இறுதியாக அவரது குழாம் ’ஹொலிடே இன்’ ஹொட்டலில் தங்கியிருப்பதை அறிந்தோம். இது தெரிந்தவுடன் யாரைத் தொடர்புகொள்வது? ஜனாதிபதியை நேரடியாக அழைக்க முடியுமா என்று சில நிமிடங்கள் சிந்தித்த பிறகு அந்த சமயத்தில் அவருடன் பரவலாக பயணிக்கும் அனுஷ பல்பிட்டியவும் இம்முறையும் சென்றிருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் அவரது தொலைபேசியில் அழைத்தபோது “யெஸ்” என்ற பதில். நான் யாரென்பதை அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடலை ஆரம்பித்தேன்.
“மிஸ்டர் பல்பிட்டிய, ஜனாதிபதி தனது பயணத்தை அவசரமாக பாதியில் நிறுத்திக்கொண்டு நாடு திரும்புவதாக அறிகிறோம். அவ்வாறு செல்கிறீர்களா?”
“ஆம், நாங்கள் பயணத்தை இடைநிறுத்தி நாடு திரும்புகிறோம். அது உண்மைதான்.”
“ஏன் முக்கியமான ஒரு உச்சிமாநாட்டிற்கு வந்த இடத்தில் பயணத்தை இடையில் முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறீர்கள்?”.
“அதற்கு நான் பதிலளிக்க முடியாது. ஜனாதிபதி அவர்கள் உடனடியாக நாம் நாடு திரும்பலாம் என்றார். அவர் கூறினால் அதன்படி செயற்படுவதான் எங்கள் கடமை. உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்பதால், நாங்களும் சரியென்று அதற்கான ஒழுங்குகளை செய்துகொண்டிருக்கிறோம்.”
“சரி, நான் ஜனாதிபதியுடன் ஓரிரு நிமிடங்கள் பேச இயலுமா?”
“நீங்கள் சரியாக ஐந்து நிமிடங்களில் மீண்டும் அழையுங்கள் நான் ஜனாதிபதியிடம் தொலைபேசியை அளிக்கிறேன்”
இந்த பதில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. உடனடியாக கலையக நிர்வாகியிடம் சென்று ஏற்பாடுகளைச் செய்யுமாறும், மாற்று ஏற்பாடாக மற்றொரு கலையகத்தையும் இணைப்பில் வைத்திருக்குமாறு வேண்டினேன். செய்து தருவதாக பதிலளித்த அவர், மூன்று நிமிடங்களில் அனைத்தும் தயார், நீங்கள் கலையகம் வரலாம் என்றார்.
ஆர்வம் மேலிட, கலையகம் சென்று மீண்டும் அனுஷ பல்பிட்டியவை அழைத்தால் பதிலில்லை.
சற்று ஏமாற்றமாக இருந்தாலும், உடனடியாக அவர்கள் தங்கியிருந்த அந்த ஹொட்டலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து நண்பர் உதவியுடன் அரபு மொழியில், “நாங்கள் லண்டன் பிபிசியிலிருந்து பேசுகிறோம், இலங்கை ஜனாதிபதியின் பயணக்குழுவில் உள்ள யாரிடமாவது பேச முடியுமா?” என்று கேட்டோம்.
“அவர்கள் அனைவரும் சற்று முன்னர் தான் ஹொட்டலைவிட்டு வெளியேறி விமான நிலையம் சென்றனர்” என்ற பதில் வந்தது.
மீண்டும் மனம் தளராத விக்ரமாதித்தன் கதை போன்று, அடுத்து அம்மான் விமான நிலையத்தை தொடர்புகொண்டு அங்கு யார் மூலமாவது பேச இயலுமா என்று சிந்தித்தோம். எனது அரபு மொழி சேவையில் இருக்கும் நண்பர், அது நல்ல யோசனை, தனக்கு விமான நிலைய உயரதிகாரி ஒருவரைத் தெரியும், அவர் மூலம் முயன்று பார்போம் என்றார்.
நம்பிக்கை மீண்டும் சற்று துளிர் விட்டது.
நாங்கள் விமான நிலைய அதிகாரியுடன் தொடர்பிலிருந்த அதேவேளை, ஒரு நாட்டின் அதிபர் என்பதால், அதற்கான பாதுகாப்போடு அவர் விமான நிலையத்தின் சிறப்பு அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார், இன்னும் சிறிது நேரத்தில் அவர் விமானம் ஏறுகிறார். இப்போது அவரிடம் சென்று எனது தொலைபேசியை அளித்து பேசவைக்கும் சாத்தியங்கள் இல்லை” என்ற பதில் கிடைத்தது.
மீண்டும் அனுஷ பல்பிட்டிய……அழைப்பிற்கு பதிலில்லை…….
இனி முயற்சிகள் பலனளிக்காது என்று எண்ணி சற்றே சோர்வுடன் எனது ஆசனத்திற்கு வந்தமர்ந்த நிலையில், அந்த புலம் பெயர்ந்த செய்தியாளரிடமிருந்து மீண்டும் ஒரு அழைப்பு.
“அண்ணா ஏதாவது தகவல் கிடைத்ததா?”
நான் நடந்தவற்றை கூறி முயற்சி பலனளிக்கவில்லை என்று தெரிவித்து அவரிடம் ஏதாவது தகவல் உள்ளதா என்று மீண்டும் வினவினேன். தன்னிடம் மேலதிகமாக அந்த சமயத்தில் தகவல் ஏதுமில்லை என்றும் தகவல் கிடைத்தால் பகிர்ந்துகொள்கிறேன் என்றும் கூறினார்.
அந்த அதிகாலை நேரத்தில் சலிப்புகளிற்கு அப்பாற்பட்டு ஒலிபரப்பை முடித்துவிட்டு, அந்த செய்திகளை இணையத்தில் ஏற்றி முடிக்கும் பொது பொழுது புலரும் நேரம் நெருங்கியது. வீட்டிற்கு திரும்புவதற்கு முன்னதாக பிபிசியின் மத்திய செய்தியறைக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் நடந்தவற்றை விளக்கி, நீங்கள் தொடர்ந்து அவதானமாக இருங்கள். நானும் தொடர்பில் இருப்பேன் என்று கூறி இரவுப் பணி முடிந்த நிலையில், காஃபி ஒன்றை அருந்திவிட்டு வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானேன்.
அப்போது இலங்கையில் காலை 9 மணி. எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் மற்றும் மட்டக்களப்புச் செய்தியார் உதயகுமார் ஆகியோரிடம் நடைபெற்ற விடயங்களை பகிர்ந்துகொண்டு, கொழும்பிலிருந்து ஏதாவது முக்கியமான தகவல் இருந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு வேண்டிக்கொண்டு புறப்பட ஆயத்தமானேன்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லண்டன் மாநகரின் சுரங்க ரயில்கள் காலை 05.30 மணிக்கு பிறகே புறப்படும். மீண்டும் மத்திய செய்தியறைக்குச் சென்று சிறு நினைவூட்டலைச் செய்து ரயிலடி நோக்கி நடக்க ஆரம்பித்தாலும், மனது முதல்நாள் நள்ளிரவு தொடக்கம் நடைபெற்ற சம்பவங்களையே அசைபோட்டு கொண்டிருந்தது.
ரயில் நிலையம் வந்ததும் இதே சிந்தனை. எதற்கான மஹிந்த அவசரமாக நாடு திரும்புகிறார்? பன்னாட்டு அழுத்தம் காரணமாக போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்கப் போகிறாரா? அப்படியென்றால் போரின் கோரத்தன்மை ஓரளவு குறையுமா? உயிரிழப்புகள் தடுக்கப்படுமா? அப்படி அவர் செய்ய முற்பட்டால் அதை புலிகள் ஏற்பார்களா? என்று பல வகைகளில் சிந்தனை இருந்ததால், முதல் ரயில் வந்து சென்றதைகூட கவனிக்கவில்லை. பின்னர் அடுத்த ரயிலில் ஏறி 45 நிமிட பயணத்தின் பிறகு வீட்டிற்கு வந்ததும், உடல் சோர்வுடன் மனச்சோர்வும் சேர்ந்து கொண்டது. அப்போது லண்டன் நேரம் காலை சுமார் 6 இருக்கும். இலங்கையில் காலை 10.30. நமது செய்தியாளர்களிடமிருந்தும் எந்த தகவலும் இல்லை.
இரவுப்பணி முடித்து திரும்பினாலும் நித்திரையும் வரவில்லை. நித்திரையை கலைப்பதற்காக சுடுநீரில் ஒரு குளியலைப்போட்டு ஒரு காஃபியையும் அருந்திவிட்டு காத்திருந்தேன்.
லண்டன் நேரம் 7.30 மணி அளவில் எமது செய்தியாளர் இருவரும் ஏக காலத்தில் தொலைபேசி அழைப்பெடுத்து, மஹிந்த நாடு திரும்பிவிட்டார், விமானத்திலிருந்து இறங்கியதும் மண்ணை முத்தமிட்டு, ”உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நடவடிக்கையை நாங்கள் முடித்துள்ளோம், முற்றாக விடுவிக்கப்பட்ட நாட்டிற்கு நான் இப்போது திரும்பியுள்ளேன்” என்று அறிவித்தார் என்று கூறினார்கள்.
பிறகுதான் தெரிந்தது ஏன் இரவோடு இரவாக அச்சக ஊழியர்கள் அழைக்கப்பட்டு மஹிந்தவை வாழ்த்தியும், கொடிகளையும் தயாரித்து நகர் முழுவதும் ஒட்டினர் என்று.
ஆனால் அந்த அறிவிப்பின் பின்னணியில் இன்னும் வெளிவராத அம்சங்கள் பல இருந்தன.
அவை……… அடுத்த வாரம் ………. தொடரும்…