கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு தாய் ஏர்ஆசியா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது.
இதில், வழக்கம்போல் பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 56 வயதுடைய காபி விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவர் வந்திறங்கினார். அவருடைய உடைமைகளை ஸ்கேன் செய்தனர். அவரிடம் இருந்த சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்ததில், அரிய வகையை சேர்ந்த மஞ்சள் நிற அனகோண்டா பாம்பு வகைகளின் 10 குட்டிகள் உள்ளே இருந்துள்ளன. இதனை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொரு பாம்பும் 2 முதல் 2.5 அடி வரை நீளம் கொண்டது. அவற்றில் 3 குட்டிகள் இறந்திருந்தன. இதுபற்றி அந்நபரிடம் விசாரித்தபோது, அனகோண்டா பாம்பு குட்டிகளை கடத்திய விவரங்களை அவர் ஒப்பு கொண்டார். தாய்லாந்து நாட்டின் பாங்காக் விமான நிலையத்தில் இருந்த நபர் கூறியதன் பேரில் இந்த பாம்பு குட்டிகளை இந்தியாவுக்கு கடத்திய விவரங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நபர் சுற்றுலாவாசியாக பாங்காக் சென்றிருக்கிறார். அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டியதில் மயங்கிய அவர், இதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். பெங்களூருவில் உள்ள நபரிடம் சூட்கேசை கொடுத்து விட்டால் போதும். ரூ.20 ஆயிரம் பணம் தரப்படும் என பாங்காக்கில் அவருக்கு உறுதிமொழி வழங்கப்பட்டு உள்ளது. இதனை சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வகை மஞ்சள் அனகோண்டா பாம்புகளில் ஒன்று சந்தையில் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விலை போகும். இதனை வளர்ப்பு பிராணிகளாக விற்பதற்காக பலர் ஆர்வம் காட்டுவதுண்டு. இதனால், கடத்தல்காரர்கள் அவற்றை கடத்தி செல்லும் வழக்கம் வைத்திருக்கின்றனர்.