– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
“கட்சிகள் விற்பனைக்கு உண்டு உங்களுக்கு வேண்டுமா?” என்று என்று ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியின் சார்பாக பேசிய ஒருவர் தன்னிடம் கேட்டதாக சுமந்திரன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் நாட்டின் அரசியலில் தலையீடு செய்வது என்பது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. புலம்பெயர்ந்த தமிழர் சமூகம் எப்பொழுது எழுச்சி பெறத் தொடங்கியதோ அப்பொழுதிருந்தே அது தாயகத்து அரசியலின் மீது தலையிடத் தொடங்கிவிட்டது. இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல,ஏனைய எல்லா புலப்பெயர்ச்சி நிகழ்ந்த சமூகங்களுக்கும் பொருந்தும். சீக்கியர்களுக்கும் பொருந்தும். சில ஆபிரிக்க சமூகங்களுக்கும் பொருந்தும். புலப்பெயர்ச்சி மூலம் வெவ்வேறு நாடுகளில் குடியேறிய மக்கள் அங்கு நிதி ரீதியாகத் தங்களைப் பலப்படுத்திக் கொண்ட பின் குறிப்பாக முதலாம் தலை முறை புலம்பெயரிகள் தாயகத்தின் அரசியல் நடவடிக்கைகளின் மீது ஏதோ ஒரு விதத்தில் செல்வாக்குச் செலுத்த முற்படுவதுண்டு.கடந்த நூற்றாண்டில் இஸ்ரேல் என்ற நாடு உருவாகியது அவ்வாறுதான். யூத புலப் பெயர்சியின் விளைவுதான் நவீன இஸ்ரேல். இஸ்ரேல் என்ற நாடு உருவாகியதோடு நவீன அரசியலில் புலம்பெயர் சமூகத்தின் சகாப்தம் துலக்கமான விதத்தில் மேல் எழுந்து விட்டது.
தமிழர்களைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்த சமூகம் ஈழப் போரின் காசு காய்க்கும் மரமாக காணப்பட்டது. 2009க்கு பின் நீதிக்கான போராட்டத்தின் கூர் முனையாகக் காணப்படுவது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தான். குறிப்பாக தாயகத்துக்கு வெளியே அதிகரித்த தொகையில் தமிழர்கள் வாழ்வது கனடாவில். தமிழ் புலம்பெயர் சமூகத்தைப் பொறுத்தவரை அதிகம் செல்வாக்கு மிக்க,ராஜதந்திர அந்தஸ்து மிக்க ஒரு புலம்பெயர் சமூகமாக கனேடியத் தமிழர்கள் வளர்ந்து வருகிறார்கள். அதனால்தான் பரிகார நீதியை கோரும் தமிழ் மக்களின் போராட்டத்தில் முக்கிய முன்னேற்றங்கள் அங்கு ஏற்பட்டன.
இவ்வாறான ஒரு வளர்ச்சியின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் பொழுது, ஆயுதப்போராட்டத்தின் போதும் அதற்குப் பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் தாயகத்தைக் கட்டியெழுப்பிய விடயத்திலும் சரி,தாயகத்தின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் விடயத்திலும் சரி,புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் நிர்ணயகரமான ஒரு பாத்திரத்தை வகித்து வருகின்றது
தொலைவில் இருந்து கொண்டு அதாவது கள யதார்த்தத்துக்கு வெளியே இருந்து கொண்டு தாயகத்து அரசியலை இயக்குவதில் வரையறைகள் உண்டு. அதில் கோளாறுகளும் உண்டு. குழப்பங்களுக்கும் இடம் உண்டு. என்றாலும் எல்லா விதமான விமர்சனங்களுக்கும் அப்பால் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு என்பது பிரித்துப் பார்க்க முடியாத ஒன்று. ஈழத் தமிழ் அரசியல் சமூகம் என்பது புலம்பெயர்ந்த தமிழர்களையும் உள்ளடக்கியதுதான். யாராவது புலம்பெயர்ந்த தமிழர்களை அந்த அரசியல் சமூகத்தில் இருந்து வேறாக்கிப் பார்க்கிறார்கள் என்றால் அல்லது பிரித்துப் பார்க்க விரும்புகிறார்கள் என்றால் அவர்கள் தமிழ்த் தேசிய நீக்கத்தைச் செய்ய முற்படுகிறார்கள் என்று பொருள்.
2009க்குப் பின் தமிழ் மக்கள் தங்கள் சொந்த சாம்பலில் இருந்து மீண்டு எழுவதற்கு பெரிதும் உதவியது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தான். தாயகத்தில் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் நிதி உதவிகளையும் தார்மீக ஆதரவையும் வழங்குவது புலம்பெயர்ந்த தமிழ் சமூகம்தான். ஐநாவில் மனித உரிமைகள் பேரவையிலும் ஏனைய உலகப் பெரு மன்றங்களிலும் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் கூர் முனைகளாகக் காணப்படுவது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தான்.
கடந்த 15 ஆண்டுகளிலும் தாயக்கத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் நிதி உதவி வழங்கியிருக்கின்றது. தாயகத்தில் நடந்த பெரும்பாலான போராட்டங்களின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழ் செயற்பாட்டாளர்கள் காணப்படுகின்றார்கள். எழுக தமிழாகட்டும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியாகட்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்கள் ஆகட்டும்,பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களாகட்டும்,எல்லாவற்றிலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு உண்டு.
மிகக்குறிப்பாக சுனாமி தாக்கிய பொழுதும் அதன்பின் பெருந் தொற்று நோய்க் காலத்திலும் அண்மை ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியின் போதும் தாயகத்துக்கு புலம்பெயர் தமிழ் சமூகம் பெருமளவுக்கு உதவிகளைச் செய்திருக்கின்றது.
இந்த உதவிகள் ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படவில்லை; பொருத்தமான புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்படவில்லை ;அவ்வாறு உதவிகளை செய்யும் பலர் அதன் மூலம் தங்களுடைய தனிப்பட்ட இமேஜைக் கட்டி எழுப்ப முற்படுகின்றார்கள்; உதவிகளின் மூலம் தாயகத்தில் உள்ள செயற்பாட்டாளர்களை சோம்பேறிகள் ஆக்குகின்றார்கள்; தாயகத்தில் செயல்படும் கட்சிகளையும் அமைப்புகளையும் பிரித்துக் கையாள முற்படுகிறார்கள்… போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உண்டு. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கியதில் புலம்பெயர்ந்த தமிழ் நபர்களுக்கு பங்கு உண்டு என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. அவ்வாறே தமிழரசு கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரிவிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் தலையீடு உண்டு என்ற குற்றச்சாட்டு உண்டு. குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் தேர்தல் நடந்த பொழுது அதில் ஒரு வேட்பாளரை புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் சிலர் ஆதரித்ததாக அவதானிக்கப்பட்டுள்ளது. இப்பொழுதும் தமிழரசு கட்சிக்குள் இரு அணிகள் வெளிக்கிளம்பியிருக்கும் ஒரு பின்னணியில், புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் இருப்பவர்கள் இந்த இரண்டு அணிகளையும் ஆதரிக்கிறார்கள். எதிர் எதிராக நின்று மோதுகிறார்கள்.அதை முகநூலில் காணலாம்.
எனவே ஈழத்தமிழ்த் தேசிய அரசியல் சமூகம் எனப்படுவது புலம்பெயர்ந்த தமிழர்களையும் உள்ளடக்கிய ஒன்றுதான். அதிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் அதற்காக கள யதார்த்தத்துக்கு வெளியே இருந்து கொண்டு தாயகத்தின் அரசியலின் மீது ரிமோட் கொன்ட்ரோல் செய்ய முற்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
சுமந்திரன் மேற்சொன்ன அந்த நேர்காணலில் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் தாயக அரசியலில் செல்வாக்கு செலுத்துவதை கடுமையாக விமர்சிக்கின்றார். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தொடர்பாக ஒரு தமிழ் அரசியல்வாதி குறிப்பாக தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றைச் சேர்ந்தவர் அவ்வாறு கடுமையான வசனங்களைப் பயன்படுத்தி விமர்சித்திருப்பது இதுதான் முதல் தடவை. வெளியில் இருந்து வரும் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் நாட்டில் புலனாய்வுத் துறையின் அனுமதியோடுதான் இயங்க முடியும். எனவே அவர்களுடைய நடவடிக்கைகளில் தென்னிலங்கையில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல் மறைமுகமாக செல்வாக்குச் செலுத்த முடியும் என்ற பொருள்பட சுமந்திரன் அந்த நேர்காணலில் பதில் கூறியிருக்கிறார். தாயகத்தை நோக்கி வரும் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வுக் கட்டமைப்பின் கண்காணிப்பின் கீழ் தான் இயங்க முடியும் என்பது ஒரு யதார்த்தம். அதுவே இன முரண்பாட்டின் ஒரு பிரதிபலிப்புத் தான். இனவாதத்தின் பிரதிபலிப்புத் தான். அவ்வாறு புலனாய்வுத் துறையின் கண்காணிப்புடன் இயங்கும் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் அரச புலனாய்வுத் துறையின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறார்கள் என்று அவசரப்பட்டுத் தீர்ப்பு எழுதி விட முடியாது.
அந்த நேர்காணலில் சுமந்திரன் கூறியது போல ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர் தென்னிலங்கையில் இரண்டு கட்சிகளை விலைக்கு வாங்கி இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. ஜனாதிபதித் தேர்தலில் அதில் ஒரு கட்சிப் பதிவை உபயோகித்து தாயகத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கும் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது.அந்த முயற்சியில் ஈடுபட்ட புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அது தொடர்பாக கட்சிகளைச் சந்தித்து உரையாடிய பொழுது ஒரு விடயத்தை வெளிப்படையாகவே தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கதான் நாட்டுக்குப் பொருத்தமான தலைவர். எனவே அடுத்த ஜனாதிபதியாக அவரைத் தெரிவு செய்யும் நோக்கத்தோடுதான் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்த வேண்டியுள்ளது என்பதே அவர் முன் வைத்த தர்க்கம் ஆகும்.
அந்த முயற்சி பின்னர் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதே சமயம் தமிழரசுக் கட்சிக்குள் தற்பொழுது வெளிப்படையாகத் தெரியும் பிளவுக்குள் ஒரு அணியை அதாவது சிறீதரன் அணியை புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் அதிகமாக ஆதரிப்பது தெரிகின்றது. சுமந்திரன் ஏற்கனவே தமிழ்த் தேசிய நீக்கம் செய்கின்றார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியவர். ஒஸ்ரேலியாவிலும் கனடாவிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அவருக்கு கடுமையாக எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். அதே சமயம் கனடாவிலும் ஒஸ்ரேலியாவிலும் அவருக்கு ஆதரவு அணியும் உண்டு.
தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஒப்பீட்டளவில் அதிகமாக தனக்கு எதிராகக் காணப்படுவதை குறித்து சுமந்திரன் விசனம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது.அதனால்தான் தாயகத்தின் அரசியலில் புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் முதலீடு செய்வதற்கு எதிராகவும் தலையீடு செய்வதற்கு எதிராகவும் அவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றார்.
கடும் தேசியவாதம் கதைக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் மறைமுகமாக தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலைப் பலப்படுத்துகிறது என்ற பொருள்படவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்.கடும் தேசிய வாதம் என்று அவர் எதனை வரையறுக்கிறார் என்பதனை முதலில் அறிய வேண்டும். அதேசமயம் தமிழ்த் தேசிய அரசியலில் தீவிர நிலைப்பாடுகளை எடுப்பவர்கள் தென்னிலங்கையில் உள்ள இனவாதத்தையும் தீவிர நிலைக்குத் தள்ளுவார்கள் என்ற ஒரு தர்க்கத்தை அவர் முன்வைக்கின்றார். தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தையும் அவர் அப்படித்தான் பார்ப்பதாகத் தெரிகின்றது.
தமிழ் மக்கள் எதிர்ப்பு காட்டினால் அல்லது தமிழ் மக்கள் தீவிரமான நிலைப்பாடுகளை எடுத்தால் அது சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை உசுப்பேத்திவிடும் என்ற வாதம் கடந்த 15 ஆண்டுகளாக சம்பந்தர் சுமந்திரனை போன்றவர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றது. அப்படியென்றால் சம்பந்தரும் சுமந்திரனும் பலமாக இருந்த ஒரு காலகட்டத்தில் ஐநாவோடு இணைந்து நிலை மாறு கால நீதியை உருவாக்க முற்பட்ட ஒரு காலகட்டத்தில், சிங்கள மக்களை நோக்கி அளவுக்கும் அதிகமாக இறங்கிச் சென்றதன் விளைவாக எதைப் பெற்றார்கள் ?
அதற்குரிய பதிலை சுமந்திரன் 2021 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கூறினார். தமிழ்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஐநாவுக்கு ஒரு கூட்டு கடிதத்தை அனுப்புவதற்காக கூட்டப்பட்ட அந்த சந்திப்பில், அவர் சொன்னார்…6 ஆண்டுகளாக அதாவது 2015 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கி ஒரு பரிசோதனையை முன்னெடுத்தோம். அதில் தோற்றுப் போய்விட்டோம் என்று. அவர் பரிசோதனை என்று கூறியது நிலை மாறு கால நீதியை.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தை விடவும் ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயக வெளிக்குள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். எனவே அவர்கள் எதிர்ப்பைக் கட்டுப்பாடு இன்றி வெளிப்படுத்துவார்கள்.அதனால் அவர்களுடைய தேசிய நிலைப்பாடுகள் தீவிரமானவைகளாக இருக்கலாம். அவை சிலசமயம் தாயகத்தில் சட்டரீதியாக தடை செய்யப்பட்டவைகளாகவும் இருக்கலாம். நிதி உதவி செய்வதன் மூலம் தாயகத்து அரசியலின் மீது அவர்கள் ரிமோட் கண்ட்ரோல் செய்ய முற்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டிலும் உண்மைகள் உண்டு.ஆனால் மேற்சொன்ன விமர்சனங்களுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களை எதிர் நிலைக்குத் தள்ளக் கூடாது. புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளை எதிரியின் ஆட்கள் என்ற பொருள்பட விமர்சிக்கவும் முடியாது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தின் நீட்சிதான். அவர்களும் ஈழத்தமிழ் ரத்தந்தான். ஈழத்து தமிழர்களுக்கு ஒரு துன்பம் என்றால் கொதித்து எழுவது அவர்களும் தமிழகமும் தான்.
தாயகத்தில் கட்சிகள் ஒழுங்காக இயங்கினால்,கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால், புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கே தலையிடுவதில் வரையறைகள் இருக்கும். ஒரு கட்சிக்குள்ளேயே இரண்டு அணிகள் தோன்றும் பொழுது அதை புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல, அரசு புலனாய்வுத் துறையும் கையாளத்தான் பார்க்கும்.எனவே இங்கு கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியது ஒரு மூத்த கட்சியை இரண்டாக உடைக்கும் சூழ்ச்சி நோக்கத்தைக் கொண்டவர்கள்தான். அந்த உடைவுக்குள் முதலீடு செய்ய முற்படும் புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் அல்ல.