சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சி குழுவின் ஆதரவோடு தொடங்கப்பட்ட தமிழ்மொழி விழா தன்னுடைய 18வது ஆண்டு விழாவை இவ்வாண்டு சிங்கப்பூரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.
இந்த விழாவின் ஓர் அங்கமாக வளர்தழிழ் இயக்கத்தின் ஆதரவோடு அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர்) ஆண்டுதோறும் தமிழன்னைக்கு விழா எடுத்துச் சிறப்பித்து வருகிறது, அதன் தொடர்ச்சியாக ‘தமிழ்மொழியின் சொல்லாற்றல்’ என்ற தலைப்பில் 11வது ஆண்டு விழாவை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி மாலை மிகச் சிறப்பாக நடந்தேறியது.
நிகழ்ச்சியின் துவக்கமாக மழலைச்செல்வம் செல்வி. சாகித்யா செந்தில் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியைத் துவங்கினார், அவரது பாடல் அரங்கில் உள்ள அனைவரின் பாராட்டைப்பெற்றது.
விழாவிற்கு வருகை புரிந்திருந்த அனைவரையும் வரவேற்று சங்கத்தின் தலைவர் திரு ப. கருணாநிதி அவர்கள் வரவேற்புரையாற்றினார், எங்கள் அமைப்பு கடந்த 25 ஆண்டுகளாகச் சிங்கப்பூருடன் தன்னை இணைத்துக்கொண்டு, அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்துத் தமிழுக்கு ஆற்றும் பணிகள் தவிர, கலாச்சாரம், சமூக, இளைஞர் முன்னேற்றப் பணிகளையும் செய்து வருகிறது என்று கூறினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம், மாணவர்களிடையே தமிழ் பேசும் ஆர்வத்தைத் ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கான போட்டிகளை மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றது, இந்த ஆண்டு “தமிழ்மொழியின் சொல்லாற்றல்” என்ற தலைப்பில் மாணவர்கள் தங்கள் ஆய்வினை படைக்கும் போட்டி நடைபெற்றது, சிங்கப்பூரின் பல பள்ளிகளிலிருந்து 100க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் தங்கள் ஆய்வினை படைத்தனர்.
உயர்நிலை 1&2, உயர்நிலை 3&4 மற்றும் தொடக்கக் கல்லூரி என்று மூன்று பிரிவுகளாக மாணவர்கள் தங்கள் ஆய்வினை படைத்தனர், சிறந்த தமிழ் அறிஞர்களை நடுவர்களாகக் கொண்டு சிறந்த ஆயிவனை படைத்த மாணவர்கள் தேர்த்தெடுக்கப்பட்டனர், வெற்றிபெற்ற மற்றும் பங்கெடுத்துக்கொண்ட மாணவர்களுக்கு விழா மேடையில் பரிசளிக்கப்பட்டது. மூன்று பிரிவுகளிலும் முதல் பரிசு வென்ற மாணவர்கள் தங்கள் ஆய்வினை அவை நிறைந்த ஆன்றோர்கள், சான்றோர்கள் முன்பு படைத்தனர், இதன் துவக்கமாக உயர்நிலை 1&2 பிரவில் முதல் பரிசு பெற்ற மாணவர் செல்வன். கார்த்திக் சரண் கணபதி தனது ஆய்வினை படைத்தார், மலர் தோன்றுவது முதல் உதிர்வது வரை அதன் ஏழுநிலைகளுக்கும், தமிழில் சொற்கள் உள்ளது எனபதை கூறி தமிழின் சொல்வளத்தையும், உலகத்து மொழிகளிலேயே மிக அதிகமான வேர்ச் சொற்களையுடைய மொழி தமிழ் என்பதையும் தனது ஆய்வின் மூலம் பகிரந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து உயர்நிலை 3&4 பிரிவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் செல்வன். மகேஸ்வரன் ஆதித்யா மற்றும் செல்வன். யுதிஷ் செந்திலரசு தங்களது ஆய்வினை படைத்தனர், ஒரே இரவில் 4 கோடி பாடல்கள் எழுத தன் புலவர்களுக்கு ஆணையிட்ட மன்னனுக்காக “மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்; உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்; கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்; கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும். என்ற நான்கு வரி்களில் பாடலமைத்த ஔவையாரின் தமிழ் சொல்லாற்றலை எடுத்துக்காட்டாகக் கூறி இன்னும் பல எடுத்துக்காட்டுகளுடன் தங்கள் ஆய்வினை பகிர்ந்துகொண்டனர்.
உயர்நிலை 3&4 பிரிவில் மற்றுமொரு ஒரு முதல் பரிசு பெற்ற மாணவி செல்வி. சித்வியா சிதம்பரம் தனது ஆய்வினை படைத்தார், தமிழ்மொழியின் சொல்வன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிலேடை மற்றும் அந்தாதியை இலக்கியங்களிலும், திரைப்படப்பாடல்களிலும் எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதை உதாரணங்களுடன் எடுத்துரைத்தார், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் “குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய்வைத்து ஊத‘ என்பர்” என்ற சிலேடையை பயன்படுத்திய விதத்தையும், “வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள் வளர்வதற்குக் காமனவன் மலர்க்கணைகள்” என்ற பாடல் வரிகளில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அந்தாதியை பயனபடுத்திய விதத்தையும், இன்னும் பல உதாரணங்களுடன் தனது ஆய்வின் மூலம் பகிர்ந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து தொடக்கக்கல்லூரி பிரிவில் முதல் பரிசு பெற்ற மாணவி செல்வி. பவ்யா கணேஷ் குமார் மற்றும் மாணவன் செல்வன். பிரசன்னா திருவிக்ரம் தங்களது ஆய்வினை படைத்தனர், தமிழ்மொழி மிகுந்த தலைச்சொற்கள் உடைய மொழி (சுமார் 3.8 லட்சம் சொற்கள்) என்றும், தமிழ்மொழியுடன் ஒப்பிடுகையில், ஆங்கிலத்தில் மூன்று மடங்கு குறைவான சோற்களே உள்ளன (1.7 லட்சம் சொற்கள்) என்றும், தமிழ் மண்ணில் வளர்ந்த அனைத்து செடிகொடிகளுக்கும் தமிழர்கள் பெயரிட்டு மகிழ்ந்தனர் என்றும் இதற்கு எடுத்துக்காட்டாக, தேவனேய பாவாணர், தனது தமிழ்ச்சொல்வளம் கட்டுரையில் வித்துவகை, வேர்வகை, அரும்பு வகை, பூக்காம்பு வகை, இதழ்வகை, காய்வகை, கனி வகை, தாவரக் கழிவு வகை, கொடி வகை, மர வகை, கரும்பு வகை என்று வெகுபல சொல்வளங்களைக் குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறினர் இன்னும் பல எடுத்துக்காட்டுகளுடன் தங்கள் ஆய்வினை பகிர்ந்துகொண்டார்.
சங்கத்தின் துணைத் தலைவர் திரு செந்தில் சம்பந்தம் அவர்கள் சிறப்புப் பேச்சாளரை மேடைக்கு அழைத்தார், வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் திரு ஜோதி மாணிக்கவாசகம் அவர்களுக்குச் விழா ஏற்பாட்டுக்குழு தலைவர் திரு ப.சிவக்குமார் அவர்கள் பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தார், சிறப்புப் பேச்சாளர் பாவலர் அறிவுமதி அவர்களுக்குச் சங்கத்தின் ஆலோசகர் திரு சேது நாராயணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசினை வழங்கிச் சிறப்புச் செய்தார்.
இதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட மாணவர்களுக்கும் விழா மேடையில் பரிசளிக்கப்பட்டது. அத்துடன் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் ஆய்வுத்திறனை ஊக்கப்படுத்திய அவர்களின் ஆசிரியர்களுக்கும், சிறந்த படைப்பாளியைத் தேர்ந்தெடுக்க உதவிய நடுவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார் பாவலர் அறிவுமதி அவர்கள்.
நிகழ்ச்சியின் நெறியாளர் திருமதி அபிராமி அவர்கள் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக வழி நடத்தினார்.
இந்த நிகழ்விற்குத் தலைமை பொறுப்பேற்று நடத்திய ஏற்பாட்டுக்குழு தலைவர் திரு ப.சிவக்குமார் அவர்கள் அனைவரையும் ஒருங்கினைத்து இந்நிகழ்வை வெற்றிகரமாக வழி நடத்தினார்.
இதனை அடுத்து இவ்விழாவின் நாயகர் பாவலர் அறிவுமதி அவர்கள் சிறப்புரையாற்றினார்,
தமிழ் மொழி் விழாவிற்காகவும், தமிழுக்காகவும் வந்திருக்கிறேன், தமிழர்களுக்காக அல்ல, ஏனென்றால் தமிழ் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான பொது மொழி என்று கூறி தனது உரையைத் துவங்கினார், தமிழை மதிப்பதில் உலக நாடுகளில் சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது என்றும், அதன் தலைவர் லீ குவான் யூ அவர்களை உலக தமிழர்கள் அனைவரும் வணங்கிப் போற்ற வேண்டும் என்று கூறினார், திருவள்ளுவர் மற்றும் கணியன் பூங்குன்றனார் பாடல்களை உவையாகக் கொண்டு தமிழர்களின் மரபு மணிதநேயம் அல்ல உயிர்மெய்நேயம் தான் என்பதை எடுத்துரைத்தார், உலக நாடுகளுக்கெல்லாம் நான் விருந்தினனாகச் செல்வேன் ஆனால் சிங்கப்பூருக்கு மட்டும் தான் தமிழர்களில் ஒருவனாக வருவேன் என்று தமிழர்களுக்கும் சிங்கப்பூருக்குமான பிணைப்பைக் கூறி மகிழ்ந்தார், மாணவர்களின் ஆய்வு கட்டுரைகளைக் கண்டு, தலைசிறந்த தமிழ் மாணவர்களைச் சிங்கப்பூர் வைத்திருக்கிறது என்று நெகிழ்ந்து பாராட்டினார், பிறகு “தமிழை ஏன் படிக்க வேண்டும் அதைத் தாய்ப்பால் போல் குடிக்க வேண்டும், எத்தனை மொழியையும் கற்றுக்கொள் நம் இனத்தமிழ் முதலாய் பெற்றுக்கொள், எதிர்க்கத்துணிந்தால் தமிழ் மீளும் எதற்கும் துணிந்தால் தமிழ் வாழும்” என்று தனது கவிதையை நினைவு கூர்ந்தார், சங்கக்கால இலக்கியங்களில் மரம் வெட்டுபவர்களை கூடக் கொலைகாரர்கள் என்றே குறிப்பிட்டனர் என்று உயிர்மெய் நேயத்தை சுட்டிகாட்டினார், அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் பயின்ற காலங்களைப் பற்றியும் தனது ஆசான்களை பற்றியும் நினைவுகூர்ந்தார், தனது இயற்பெயர் மதியழகன் என்றும், தனது கல்லூரி நண்பர் பெயர் அறிவழகன் என்றும், எங்களின் நட்பைக் கண்டு அனைவரும் அறிவுமதி என்றே அழைப்பார்கள் என்று தன் பெயர் காரணத்தைக் கூறி தனது நண்பரின் நீங்கா நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
நாம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் அல்ல, எந்நாளும் நாம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் என்று கூறினார், ஆங்கில சொற்கள் கலக்காமல் தான் திரையிசை பாடல்கள் எழுதுவேன் என்னும் திமிரில் என்னை வாழ வைத்தது அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை தான் என்று பெருமிதம் கொண்டார், திரைப்படப் பாடல்கள் எழுதுவதை விட்டுவிட்டு தனது கிரமாத்தில் ஒரு நூலகம் அமைத்துச் சங்க இலக்கியங்களைப் பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன், மிக விரைவில் என் தமிழ் குழந்தைகளுக்குப் பல அழகிய சங்க இலக்கிய தமிழ் விழிமியங்களை ஊட்டும் பெரும்பணியை எற்றுள்ளேன் என்றும் கூறினார், தமிழர்களின் உயிர்மெய்நேயத்துக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக “சினை கயல் மாய்க்கும்” என்ற புலவரின் வரிகளையும்“ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் வரிகளையும் எடுத்துரைத்தார், தமிழர்களின் சிந்தனை அனைத்தும் வேளான்மையை ஒட்டியே இருந்தது என்பதற்கு“ புலன் உழுது உன்மார், வில் உழுது உன்மார்” என்ற வரிகளை உவமையாகக் கூறி விளக்கினார், வானத்தை மீறிய வட்டச்சிந்தனைக்காரர்கள் தமிழர்கள், கிணற்றுச்சிந்தனைக்காரர்கள் அல்ல என்று தமிழர்களின் உலகளாவிய சிந்தனையைப் பெருமை படப் பேசினார்,
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உணவு அருந்தியபிறகு உணவு அருந்துவதே தமிழர் மாண்பு என்று“ உலகம் உண்ண உண்” என்ற பாரதிதாசனின் வரிகள்மூலம் எடுத்துரைத்தார், சங்க காலத்தில் பல மொழிகள் பேசும் வணிகர் பூம்புகாரில் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்ந்தனர் என்றும் அதுபோலத் தான் இன்று சிங்கப்பூர் என்றும் கூறினார்.
திருக்குறளில் தமிழர்கள்பற்றிய அடையாளம் இல்லை என்பவர்களுக்கு, திருக்குறளில் வள்ளுவர் தமிழர்களை “தென்புலத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார் மற்றும் 9வது புறநானூற்றில் “தென்புலம் வாழ்னர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, இதிலிருந்து தமிழர்களின் வாழ்க்கை தெற்கிலிருந்து துவங்கியது என்று அறிகிறோம் என்று விளக்கினார்.
“பகையின் பிரிவும் இன்னாதே” என்ற வரிகளின் மூலம் பகைவன் பிரிவதையே ஏற்றுக்கொள்ள முடியாதவன் தமிழன் என்று கூறினார். கற்றாழை செடிக்குக் குமரி என்ற பெயரும் உண்டு, குமரி கண்டத்தில் விளைந்ததால் அதற்கு அப்பெயர் வந்தது, குமரி கண்டத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் அதன் நினைவாகத்தான் கற்றாழையை வீட்டில் வளர்க்கின்றனர் என்றும், இயற்கை சீற்றத்தால் பேரழிவு ஏற்பட்ட பிறகு வேளாண்மையை மீட்டெடுக்கத்தான் கோவில் கலசங்களில் பல ஆண்டுகள் ஆனாலும் கெடாத வரகை வைத்தனர் என்றும், வரட்சி காலங்களில் பாலை வழியாக நடந்து செல்லும் மக்கள் மயக்கமுற்றால் அவர்களின் உயிரைக் காக்க சங்ககால தமிழ்ர்கள் நெல்லி மரத்தை நட்டனர் என்றும், மறைமான் வாழ்ந்த காடுதான் திருமறைக்காடு, பின்னர் அதற்கு வேதாரண்யம் என்று வடமொழி பெயரிட்டு வரலாற்றை மாற்றி எழுதிவிட்டனர் என்றும் கூறினார்.
நகர் என்பதன் பொருள் கல்வீடு என்றும் கல்வீட்டில் வாழ்ந்தவர்கள் தான் நகரத்தார் என்றும் அழைக்கப்பட்டனர், சங்க காலத்தில் தமிழர்கள் எழுநிலை மாடம் வைத்து வீடு கட்டி வாழ்ந்தனர், சிலப்பதிகாரத்தில் 4வது மாடியில் தான் கொவளனும் கண்ணகியும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினார்கள் என்றும் தமிழர்களின் பெருமையை எடுத்துரைத்தார், பெண்களுக்கு முன்னரே வேளாண்மையை கண்டெடுத்தது பன்றிகள் தான் என்பதை சங்க இலக்கியங்கள் சொல்வதையும், சங்க காலத்தில் மன்னர்கள் நேரத்தைக் கணிக்க நாழிகை கணக்கர் எனபவரை நியமணம் செய்து நாழிகையை கணக்கிட்டனர் என்றும், கல் கால் கவனை என்ற சிறந்த போர்கருவியை தமிழனும் பயனபடுத்தினான் என்றும் தமிழனி்ன் பெருமையை உரக்க கூறினார். பின்னர், சங்க இலக்கியங்களைப் பற்றி ஆய்வு செய்து தான் எழுதிய நூல்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார், அந்த நூல்கள் பின்வருமாறு“ உயிர்த்தமிழ் சங்கச் சாறு–நூறு” “உலக அமைதிக்கான நூல் புறநானூறு” “ பாரி இறங்கி—ஏறியவன் வரலாறு” சங்க இலக்கிய ஆய்விற்காகத் தனது வாழ்க்கையை ஒப்படைத்துவிட்டேன் என்றும், வரும் காலங்களில் நிறைய நூல்களைத் தமிழ் சமுதாயத்திற்கு தருகிறேன் என்று கூறினார், உலகளாவிய பொதுச்சிந்தனை கொண்டவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், சிங்கப்பூர் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் இந்த அரங்கம் தாண்டிப் பேரரங்கம் செல்லும் ஒரு வரலாற்றுக்கு வாழ்ந்து செழிக்க வேண்டும் என்று வாழ்த்தினார், “தமிழ்மொழியின் சொல்லாற்றல்” என்ற தலைப்பைக் கொடுத்த அய்யா சுப. திண்ணப்பன் அவர்களுக்கும் வாய்ப்பளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தினருக்கும், அரங்கம் நிறைந்திருந்த அனைருக்கும் தனது நன்றியைத் தெரிவித்து அமர்ந்தார்.
வருகை புரிந்த அனைவருக்கும் இரவு விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது. விழாவின் இறுதியில் சங்கத்தின் செயலாளர் திரு இரா. குமரேசன் அவர்கள் நன்றி உரையாற்றினார், நம் தமிழ் திக்கெட்டும் பரவ, தமிழர் தம் வாழ்வில் எல்லா வளங்களையும் உயர்வையும் பெற்றிட உதவிய வளர்தமிழ் இயக்கம், ஏற்பாட்டுக் குழுவினர், ஆதரவாளவர்கள், சிறப்புப் பேச்சாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள். நன்கொடையாளர்கள் மற்றும் சங்கத்தின் ஆலோசகர்கள், மேனாள் தலைவர்கள், மேனாள் செயலாளர்கள் என்று இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சிறப்புகள் செறிந்த தமிழன்னைக்கு இந்த விழா மேலும் சிறப்பு சேர்த்துள்ளது, நன்றி.
–இரா. இராம்ஜி