– மன்னாரில் போதைப்பொருள் மாபியா போல் மணல் அகழ்விற்கு பெரிய மாபியாக்கள் உருவாகிவிட்டன.
கட்டுரையாளர்:-வி.எஸ்.சிவகரன்
(26-04-2024)
மனிதன் தனது சுயநலத்தால் நிகழ்கால எதிர்கால சந்ததிகளின் இருப்பு பற்றிய எந்த விதமான தூர நோக்கும் இன்றி சுயநலமாக செயல்படுகிறான்.
இயற்கையோடு இயல்பாக ஒன்றித்து வாழும் வாழ்வியலுக்கு எதிராக இயற்கையை எதிர்த்து தன்னையும் தன் சந்ததியையும் தானே அழிக்கின்றான். என்பதை அறிவு பூர்வமாக உணராமல் அல்லது உணர்ந்தும் தெளியாமல் தன் நலனில் மட்டுமே சிரத்தை கொள்கிறான் என்பதே வேடிக்கையான உண்மை.
இயற்கை தன்னியல்பை எப்போது இழக்கிறதோ அப்போது மனிதன் இயல்பாக உயிர் வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதே இயற்கையின் சமநிலை கட்டமைப்பு .
அதனால் தான் ஒரு நாட்டில் மூன்றில் ஒரு பகுதி காடாக இருக்க வேண்டும் என்பது நியதி. ஒரு மனிதன் சுகதேகியாக சுவாசிக்க 422 மரங்கள் தேவை. கனடாவில் ஒருவருக்கு பத்தாயிரம் மரங்கள் உள்ளன. உலகில் ரஷ்யாவில் தான் அதிக மரங்கள் உள்ளன 642 பில்லியன் அதேபோல் கனடா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் குடித்தொகை களுக்கு ஏற்ப போதுமான மரங்கள் உள்ளன.
ஒரு வாகனத்தின் நச்சுப் புகையை கட்டுப்படுத்த ஆறு மரங்கள் வேண்டும். நச்சுக் காற்றை மூச்சுக் காற்றாக மாற்றுவது மரங்களே.
ஒரு யானை ஒரு நாளைக்கு முந்நூறு தொடக்கம் ஐநூறு வரை மரங்களை உற்பத்தி செய்கிறது. தனது வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்களை உற்பத்தி செய்கிறது.
ஆனால் மனிதன் இவற்றையெல்லாம் வகை தொகையாக அழிக்கின்றான். வட-கிழக்கு உட்பட நாடு முழுவதும் ஆறுகள் அனாதை ஆக்கப்பட்டு விட்டன.
இவற்றில் சட்டரீதியான சட்ட விரோதத்தால் கட்டுப்பாடு இன்றி மணல் அகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆறுகள் இயல்பாகவே நிலப்பரப்பிலிருந்து ஐந்து தொடக்கம் ஏழு மீட்டர் ஆழமானவை. இருபது தொடக்கம் இருபத்தைந்து மீட்டர் அகலமானவை.
ஆனால் தற்போது பல மடங்கு ஆழ மாகவும் நீளமாகவும் காணப்படுகிறது. ஆற்றங்கரையில் இருபுறமும் உள்ள பல நூற்றாண்டு கடந்த மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. அதிக மணல் அகழ்வினால் இயற்கைச் சமநிலை மாறுபடும். மண்ணின் தரம் குன்றும். கடல் நீர் நிலப்பரப்புக்குள் ஊடுருவும். உவர் நீர் உருவாகும். பூமியில் வாழ்கின்ற உயிரினங்களின் பாதுகாப்பு நிலை குலைந்து விடும்.
நீரின் தரம் குன்றி விடும், மரங்கள் பாதிக்கப்படும் போது இயல்பாகவே வறட்சி ஏற்படும். நிலத்தடி நீர் விரைவில் ஆவியாகிவிடும். நன்னீர் மட்டம் கீழ் இறங்கிவிடும். தொற்றா நோய்கள் ஏற்படும்.விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும். இதனால் உணவு உற்பத்தி நலிவடையும்.
ஆரோக்கியமற்ற பிறப்பு வீதம் ஏற்படும் சமூக பிறழ்வு உருவாகும் இன்னும் பல கேடுகள் மனிதனுக்கு ஏற்படும் ஒரு சதவீத மரங்கள் அழிந்தால் சமூகத்தில் எட்டு விதமான கொசுக்கள் உற்பத்தியாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகில் கொசுக்களால் தான் அதிக மரணம் நிகழ்கிறது.
மண்ணுக்கும் மரத்திற்கும் கேடு விளைவிப்பதால் இயற்கை அனர்த்தம் ஏற்படும். வெப்பமயமாதல் அதிகரிக்கும். தற்போது அதிகூடிய வெப்பநிலை கூட இதற்கு நிகழ்கால உதாரணம் அது மட்டுமன்றி அதிகமான இயல்பற்ற இயற்கை சீற்றம் ஏற்படும்.
பருவம் கடந்த மாறுதல் உருவாகிறது. காலக்கணிப்பை விஞ்சி விடுகிறது. தற்போது வளைகுடா நாடுகளில் அதிக கூடிய கனமழை பெய்வது காலநிலை மாறுதலே.
இது எல்லாம் இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் வன்கொடுமையின் விளைவுகளே இயற்கை மீதான தாக்குதல்களை மனிதன் நிறுத்துவதாக இல்லை.
இவற்றை ஒழுங்கு முறையாக சீர் படுத்த முடியவில்லை. அதற்கு அனுமதி வழங்குகின்ற திணைக்களங்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்குகின்றன. அதனால் கட்டுப்படுத்துவதில் பல்வேறு விதமான சவால்கள் உள்ளன.
உலகில் காபன் படிவு அதிகமானது என காலநிலை தொடர்பான டுபாய் மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போதை பொருள் மாபியாவை போல் மணல் அகழ்விற்கு பெரிய மாபியாக்கள் உருவாகிவிட்டன. இதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, புவிச்சரிதவியல் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனத்திணைகளம், பிரதேச செயலகங்கள் ஆகியன லஞ்சம் பெற்றுக் கொண்டு இயற்கையை ஏலம் கூறி விற்பனை செய்கின்றனர்.
மணல் அள்ளிச் செல்லும் டிப்பரிலிருந்து வழிகிறது ஆற்றின் கண்ணீர் என்பதை எந்த அதிகாரியும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
இதில் பல ஆற்றங்கரைகளில் அதிக அளவில் விவசாய செய்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் தற்போது அந்த இடங்கள் எல்லாம் உவர் நீர் அதிகரித்து விட்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குட்படுகிறது விவசாயம் இல்லாவிட்டால் மனிதன் உயிர் வாழ முடியுமா?
இந்த ஆறுகளில் ஒரு மண் கூட்டம் உருவாக 08 தொடக்கம் 12 வருடங்கள் தேவை என கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஆறுகள் மணல் இன்றி சேத்து நிலமாக உள்ளன. இதில் பல இடங்களில் நீதிமன்றங்கள் தடை செய்த போதும் கூட அதிகாரிகளின் ஆதரவுடன் மணல் அபகரிக்கப்படுகிறது.
உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியிடத்து நபர்களாலும் மணல் கொள்ளை சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இதில் அரச படையினரும் கூட ஈடுபட்டு வருகின்றனர். சீமந்து, கல், சாடி,தூண் போன்றவற்றை உற்பத்தி செய்து தமது முகாம்களுக்கு முன்னுக்கு வைத்து விற்பனை செய்தும் வருகின்றனர்.
அதேபோல் கடற்கரை பகுதிகளிலும் மண் அகழ்வதால் பல ஊர்களில் கடல் தண்ணி உள்ளே வருகிறது. எனவே இந்த இயற்கை வளச் சுரண்டலுக்கு அரசியல்வாதிகள் பின்னணியிலும் அதிகாரிகளின் ஆசீர்வாதமும் கிடைப்பதால் எப்படி தடுப்பது?.
பல போராட்டங்கள் பல கூட்டங்கள் பல கள விஜயங்கள் எல்லாம் நடை பெற்றும் எந்த பயன் அளிக்கவில்லை. ஆகவே இயற்கைக்கு எதிரான மனிதனின் செயல்பாடு பாரிய இயற்கை அனர்த்தத்தை ஏற்படுத்தும் நில அதிர்வு, சுனாமி, அதிக மழை, புயல்,அதிக வெப்பம் என்பன எதிர்காலத்தில் நிகழலாம் என நாசா உட்பட பல சூழலியல்,மற்றும் காலநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தது போதும் மனிதன் இயற்கையை அழித்து தனது சொகுசு வாழ்வியலை உயர்த்தும் நோக்கை கைவிட்டதாக தெரியவில்லை .
இவர்களுக்கு உதவியாக அதிகாரிகளும் உள்ளதால் சட்டவிரோத மண் அகழ்வு, காடழிப்பு போன்றவற்றை நிறுத்துவது என்பது இலகுவான விடயம் அல்ல.
ஆகவே இந்த அதிகாரிகளுக்கும் சட்டவிரோத மணல் அகழ்வாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இயற்கையில் மணலும் மரமும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
வாழ்க்கைக்கும் வாழ்வியலுக்கும் அது எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்த வேண்டும் .இல்லையேல் இதை எந்த சந்தர்ப்பத்திலும் தடுக்க முடியாது. இயற்கைக்கு எதிரான செயற்பாட்டில் மனிதன் தோற்றே போவான் இயற்கையின் சமநீதி அறம் எவருக்கும் எதற்கும் இடம் கொடுக்காது குற்றம் என்று தெரிந்தும் தண்டிக்க முடியாத சட்டம் ஊழல் என்று தெரிந்தும் ஒழிக்க முடியாத சட்டம் தீமை என்று தெரிந்தும் தடை செய்ய முடியாத சட்டம் இந்த நாட்டின் ஜனநாயகம் இதுதான்.
ஆகவே ‘இயற்கையை காப்போம் இயல்பாக வாழ வழி தேடுவோம்’.ஆகவே இயற்கையை காப்போம் இயல்பாக வாழ வழி தேடுவோம். எனவே வள்ளுவம் கூறுவது போல் “செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்”
தொகுப்பு:-எஸ்.றொசேரியன் லெம்பேட்