எச்.எச்.விக்கிரமசிங்க.
மலையகத்தின் எழுச்சித் தலைவர் பெ.சந்திரசேகரன் நிர்மாணித்த மலையக மக்கள் முன்னணி, மலையகத் தொழிலாளர் முன்னணியின் 35 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் தேசிய மகாநாடும் இன்று அட்டன் மாநகரில் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சயைத் தருகிறது.
மலையைக அரசியல் வரலாற்றில் கோ.நடேசய்யர் முதல் சௌமிய மூர்த்தி தொண்டமான் வரை புகழ்பூத்த பல பெரியார்கள் பணியாற்றி வந்த நிலையில், மலையகத்தில் ஒரு புதிய அரசியல் இயக்கத்தைத் தோற்றுவித்து, ஒரு சமூக புரட்சியை ஏற்படுத்தியவர் அமரர்
பெ.சந்திரசேகரன் அவர்கள். அவர் அமைத்துத்தந்த அரசியல் ராஜபாட்டையில் இன்றைய நமது அரசியல் தலைவர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன் போன்றோர் தொடந்தும் அயராமல் அரசியல் பணி செய்து வருவது பாராட்டிற்குரியது ஆகும்.
அமரர் பெ.சந்திரசேகரன் குறுகிய காலமே வாழ்ந்தாலும், 1994-–2010 வரைப்பட்ட அவர் அரசியலில் இணைந்த பதினாறு ஆண்டு காலப்பகுதியில், மலையக மக்கள் வாழ்விலும் மலையக அரசியல் சிந்தனையிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. அதை கௌரவிக்கும் விதமாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வி.இராதாகிருஷ்ணன் அவர்கள் முத்திரை வெளியிட்டு கௌரவிப்பது போற்றதக்கதாகும்.
அமரர் பெ.சந்திரசேகரன் தோட்ட வீடமைப்பு பொது வசதிகள் பிரதி அமைச்சராக இருந்த 1994-–1997, மேற்கொண்ட மலையகத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் மலையக வரலாற்றில் முதல் முதல் மேற்கொள்ளப்பட்ட சமூக வளர்ச்சித் திட்டமாகும். அதுகால வரை லயத்தில் வாழ்ந்துவந்த மக்களுக்கு ஏழு பேர்ச் காணியில் தனி வீடுகள் அமைக்கும் திட்டம் என்பது கொள்கையளவில் அரசினால் ஏற்கப்பட்டு, நடைமுறையில் 3,985 தனி வீடுகள் கட்டி வழங்கப்பட்டமை அமரர் பெ.சந்திரசேகரன் காலத்திலேயே நடந்தது. இன்றும் பல மட்டங்களில் தொடரும் வீடமைப்புத் திட்டங்களின் பிதாமகன் அவரேயாவார்.
அவருடைய அமைச்சிலேயே, அவரின் தயவால் உயர் பதவி வகித்தவர் எழுதிய ‘மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நிலவுரிமை’ என்ற புத்தகத்தில், பெ.சந்திரசேகரன் அவர்களின் வீடமைப்பின் சரித்திர முக்கியத்துவம் பற்றி ஒற்றை வரியில் முடித்த அபத்தம் நம் காலத்திலேயே நடந்திருக்கிறது.
‘1994இல் பெ.சந்திரசேகரன் பிரதி அமைச்சராக இருந்த காலத்தில், ஏழு பேச் காணியுடன் தனி வீடுகள் கட்டப்படும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது’ என்று வேறு நூலாசிரியர் ஒருவர் எழுதியிருப்பதாக இவர் தனது நூலில் மேற்கோள் காட்டுவதோடு மட்டும் நிறுத்திக் கொண்டமை நன்றி மறந்த செயலாகும்.
அமரர் பெ.சந்திரசேகரன் அவர்களின் மற்றுமொரு பெருங்கனவு மலையகத்திற்குத் தனி பல்கலைக்கழகத்தை நிறுவுவதாகும்.
அவரின் பெருங்கனவைச் சாத்தியமாக்குவதும் அவர் நமக்கு இட்டுச் சென்றிருக்கும் பணியாகும்.
அரசாங்கங்கள் மாறிமாறி வந்தாலும் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும், எல்லாச் சமரசங்களோடும் உடன்படும் போலி புத்திஜீவிகள் மத்தியில். அமரர் பெ.சந்திரசேகரன் அவர்கள் உருவாக்கிய மலையக மக்கள் முன்னணியை முன் நடத்திச் செல்லும் இன்றைய தலைவர், வீ.இராதாகிருஷ்ணன், செயலாளர் நாயகம், பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன் அவர்களின் பெரும் முயற்சி வெற்றிபெற தமிழகத்திலுள்ள என் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மகாநாட்டின் வெற்றிக்காக அயராது உழைத்த அரசியல் பீட உறுப்பினர்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள், காரியாலய பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் போற்றி புகழ்கின்றேன். இந்த மகாநாடு மலையக மக்கள் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
மகாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்!