வடக்கு கல்வியில் தகுதியற்றவர்களுக்கும் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக தேசிய மக்கள் சக்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டினார்.
28-04-2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டுகின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கல்வியில் ஊழல் மலிந்து காணப்படுகிறது குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படாமல் பதவி உயர்வு வழங்கும் நடைமுறை வடக்கில் காணப்படுவது வடக்கு கல்வியை அழித்துவிடும் செயற்பாடாகவே பார்க்கிறேன்.
ஆசிரிய மற்றும் அதிபர்கள் இட மாற்றத்தில் முறைகேடுகள் இடம்பெறுகின்ற நிலையில் இடமாற்ற சபையின் அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன.
வன்னி ஓட்டி சுட்டான் பாடசாலையில் பாடசாலை வளங்கள் ஊழல் செய்யப்பட்ட நிலையில் குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் நிதி நிர்வாக விடையங்களில் முறைகேடுகளுடன் தொடர்பட்ட நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்படாமல் உயர் பதவி ஒன்றில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை வடக்கு உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கில் காணப்படும் நான்கு அமைச்சுகளில் தகுதியான செயலாளர்கள் இல்லாத காரணத்தினால் நிர்வாக ரீதியான முடிவுகள் எடுப்பதில் பிரச்சனைகள் காணப்படுகிறது.
தகுதியானவர்களை நியமிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அவர்களை ஒதுக்கி தமக்குத் தேவையான அலிபாபா திருடர்களை பதவியில் வைத்திருப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர்.
வடக்கு ஆளுநர் இத்தகைய செயல்பாடுகள் இடம் பெறுவதை கண்டும் காணாமல் இருக்கிறாரா அல்லது அவரும் இத்தகைய செயல்பாடுகளின் பின்னணியில் உள்ளாரா என சந்தேகம் எழுகிறது.
ஆகவே வடக்கு கல்வி ஊழல்வாதிகளால் சீரழிந்து வருகின்ற நிலையில் வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.