(இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்) பகுதி-4
சிவா பரமேஸ்வரன்…..மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
மே 18, 2009, திங்கட்கிழமையன்று, ஆர்வம், தாக்கம் மற்றும் தொழில்ரீதியன பற்று, மன உறுத்தல் ஆகியவைகளுடன் அலுவலகம் வந்து, “ஏன் உங்கள் விடுப்பு நாளான இன்று வந்தீர்கள் என்ற எரிச்சலூட்டும் கேள்விக்கு இடையேயும், அவமானங்களைப் பார்த்தால் செய்தியாளராக இருக்க முடியாது என்கிற அனுபவ பாடம் காரணமாகவும் அன்று பணியை முடித்தாலும் நாள் முழுவதும் மனதிற்குள் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.
செய்தியின் முக்கியத்துவத்தை உணராத ஒரு தலைமையுடன் முரண்பட்டு, அதனால் அவமானப்பட்டு, பதவி உயர்வுகள் மற்றும் அதனுடன் வரும் ஊதிய உயர்வு ஆகியவைகளை இழந்தாலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று, அவர்கள் எதிர்கொண்ட/எதிர்கொள்கின்ற பிரச்சனைகளை உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் போது அவை மறைந்து போகின்றன. அரசின் ஊதுகுழலாக நான் இருக்க மாட்டேன், பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே இருப்பேன், அவர்கள் தரப்பு நியாயத்தைப் பேசுவேன், ஊடக அறத்திலிருந்து பின்வாங்க மாட்டேன், ஊழலுக்கு துணையாக இருக்க மாட்டேன், என் சுயத்தை இழக்க மாட்டேன் என்ற ஒரு நிலைப்பாட்டில் இன்றுவரை இயன்றளவிற்கு எனது ஊடகப் பணியைச் செய்து வருகிறேன்.
அந்த உறுத்தல் அந்த திங்கள்கிழமை முழுவதும் இருந்துகொண்டே இருந்தது. அன்று போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசு கூறியதை செய்தியாக எடுத்துவருவதில் இருந்த சவால்களை கடந்த வாரம் உங்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தேன். ஆனால் 18.5.2009 அன்று பணி முடிந்து பின்னிரவு நேரம் வீடு திரும்பிய பிறகும், ஒரு கேள்வி எனது மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
எதன் அடிப்படையில் போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது?
அடுத்த நாள் மே 19, 2009 செவ்வாய்க்கிழமை அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்துவார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதும் எனது சிந்தனையோட்டம் மேலும் இனம்புரியாத ஒரு கவலையுடனேயே இருந்தது.
போர் முடிந்துவிட்டதாக அரசு கூறுகிறது. ஆனால் விடுதலைப் புலிகள் தரப்பின் கருத்து என்ன? அவர்கள் பிரபாகரன் தொடர்பில் அரச தரப்பில் கூறுவதை ஏற்பார்களா அல்லது மறுப்பார்களா? அரசு கூறுகின்றபடி போர் முடிந்துவிட்டதனால் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கியிருந்த பொதுமக்களின் நிலை என்ன? உயிரிழப்புகள் எந்தளவிற்கு இருந்திருக்கும்? அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு மாறாக இலங்கை அரசு தொடர்ச்சியாக நடத்திய தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களின் கோரம் எப்படியிருக்கும், செய்த கொடூரங்களை அரசு மூடி மறைக்க முயலுமா? இனியாவது பிபிசி தமிழோசை பாதிக்கப்பட்ட தமிழர்கள் பக்கம் நிற்குமா? புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்வார்கள்? இப்படி தொடர்ச்சியாக அடுக்கடுக்கான கேள்விகள் எனக்குள் எழுந்தவண்ணமே இருந்தன.
அன்று அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பின்னரும் எனது தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்தன. வன்னியிலிருந்தும் மேலதிகமாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் நான் உரையாடிய நபர்களுக்கும் என்னவாயிற்று என்று தெரியவில்லை. அவர்களில் மருத்துவர்கள், விடுதலைப் புலி உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள் என்று யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அது அச்சத்தை மேலும் அதிகரித்தது.
இரவு முழுவதும் நித்திரை இல்லை. எங்கிருந்தாவது ஏதாவது செய்தி வரும் என்று ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்துகொண்டே இருந்தது. செவ்வாய்க்கிழமை பொழுதும் புலர்ந்தது. அதிகாலை லண்டன் நேரம் 4 மணி இருக்கும். மீண்டும் நண்பரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனிடமிருந்து அழைப்பு.
“சிவா, சாரி டு டிஸ்டர்ப் யூ எர்லி மார்னிங்”
“நோ வொறிஸ் மனோ. எனக்கும் நித்திரை இல்லை.”
“சிறப்பு படையணி ஒன்றின் தலைவருடன், சிறப்பு ஹெலிகொப்டர் ஒன்றில் கருணாவும், தயா மாஸ்டரும் வன்னிக்குச் செல்லவுள்ளதாக எனக்கு செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று தான் அழைத்தேன். ஆனால் எதற்கு என்று தெரியவில்லை”
“சரி, நல்லது, நானும் கவனிக்கிறேன், நீங்களும் மேலதிகத் தகவல் இருந்தால் தயங்காமல் அழையுங்கள்”
அடுத்த அழைப்பு எமது வட இலங்கைச் செய்தியாளர் மாணிக்கவாசகம் அவர்களுக்கு.
“வணக்கம் மாணிக்ஸ். வன்னியிலிருந்து ஏதாவது செய்தி? கருணா அம்மானும், தயா மாஸ்டரும் வன்னிக்கு ஹெலிகொப்டரில் செல்லவுள்ளதாக ஒரு தகவல் உலவுகிறதே. உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? நேற்று போர் முடிந்துவிட்டது என்று அரச தரப்பு கூறியது. ஆனால் புலிகள் தரப்பில் தகவல் ஒன்றும் இல்லையே”
“வணக்கம். வன்னிப் பகுதியில் மயான அமைதி நிலவுவதாக அறிகிறேன். தொடர்புகளும் சிக்கலாக உள்ளது. அங்கு இன்னும் ஓரிரு இடங்களில் குண்டுச் சத்தம் கேட்கிறது. பெருந்தொகையான ஆட்கள் காயப்பட்டோ அல்லது உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவோ அல்லது மரணமடைந்துவிட்டதாகவோ அறிய முடிகிறது. புலிகள் தரப்பில் எந்த தொடர்பும் இல்லை. உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து ஏதாவது தகவல் கிடைத்ததா? அரசு போர் முடிந்துவிட்டதாக கூறினாலும், செய்தியாளர்கள் யாரையும் வன்னிப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கவிலை. நானும் முயன்றேன் ஆனால் அனுமிதி கிடைக்கவில்லை”
”சரி மாணிக்ஸ். இந்த இருவரும் வன்னி செல்லும் தகவலை பார்த்துக்கொள்ளுங்கள், நான் அலுவலகம் வந்ததும் தொடர்புகொள்கிறேன்”
“நல்லது. முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி இராணுவம் நிலைகொண்டுள்ள பகுதிக்குள் வந்துகொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி இன்று காலை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உரையாற்றுகிறார். அவர் என்ன சொல்கிறார் என்றும் கவனிக்கிறேன். அதை ஒலிப்பதிவும் செய்கிறேன்.”
இதையடுத்து எனக்கான காலை உணவு, மதிய உணவு ஆகியவற்றை தயாரித்து கொண்டே குளித்து அலுவலகம் புறப்பட ஆயத்தமானேன். இதேவேளை எமது வடக்கு மற்றும் கிழக்குச் செய்தியாளர்கள் இருவரும் ஏககாலத்தில் “பிரபாகரன் குறித்து சில விவரங்கள் வெளிவரக் கூடும் என்று உஷார்படுத்தினர்.
விரைவாக அலுவலகம் செல்ல முயன்ற வேளை மீண்டும் மனோ கணேசன் அவர்களிடமிருந்து அழைப்பு.
“சிவா…பிராபகரன் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தரப்பிலிருந்து செய்தி வருகிறது. அதை உறுதிப்படுத்தி அடையாளம் காண்பதற்காகத்தான் கருணாவும், தயா மாஸ்டரும் வன்னிக்கு சிறப்பு ஹெலிகொப்டரில் செல்கிறார்கள். பிரெசிடெண்ட் இஸ் ஆல்சோ மேக்கிங் எ ஸ்பெஷல் அட்ரெஸ் இன் பார்லிமெண்ட்”.
“நன்றி மனோ. வில் பி இன் டச்”
இதற்குள் இலங்கை நேரம் காலை சுமார் 11.30 ஆகியிருந்தது. பிரபாகரனின் உடல் நந்திக்கடல் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால், அந்த சமயத்தில் அது தகவலாகவே இருந்ததே தவிர, உறுதி செய்யப்பட்ட செய்தியாக இல்லை. எமது செய்தியாளர்களும் கண்ணிமைக்காமல் ரூபவாஹினி தொலைக்காட்சியை அவதானித்துக்கொண்டிருந்தார்கள்.
நானும் செய்திகளின் மூழ்கியிருந்ததால், வீட்டி சுயமாகத் தயார் செய்து அலுவலகம் எடுத்துச் செல்வதற்காக கட்டி வைத்திருந்த காலை மற்றும் மதிய உணவை மேசையிலேயே வைத்துவிட்டு வந்தது நான் வழக்கமாக ரயில் ஏறும் பார்கிங் ரயில் நிலையத்திற்கு வந்த பிறகு தான் உணர்ந்தேன். சரி, அனைத்திலும் விதி வலியது என்று எண்ணி ரயில் ஏறி அலுவலகம் நோக்கி பயணத்தாலும் கண்களை தொலைபேசியிலிருந்து எடுக்க முடியவில்லை. லண்டனின் புகழ்பெற்ற சுரங்க ரயில் அல்லது ‘டியூபில்’ செல்லும் போது நிலத்திற்கு கீழே பயணிக்கும் சமயம் சிக்னல் கிடைக்காது, எனவே ஆக்ஸ்ஃபோர்ட் சர்க்ஸ் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த பிறகு தொலைபேசியை பார்த்த போது பல அழைப்புகள் விடுபட்டிருந்தது தெரிந்தது. மாணிக்கவாசகம், உதயகுமார், மனோ கணேசன், கொழும்பிலிருந்து வேறு சிலர் என்று பலரது அழைப்புகள்.
இணையதளத்திற்கு சென்ற போது பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதை கருணா அம்மானும், தயா மாஸ்டரும் அடையாளம் காட்டினர் என்றும் ‘பிளாஷ் நியூஸ்’ வந்துகொண்டிருந்தது. இதையடுத்து செய்தி தீயாக பரவியது. ஈழத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் அழுகுரல்கள். அதேவேளை புலிகள் அமைப்பின் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த கே பி- குமரன் பத்மநாதனிடமிருந்து வெளியான செய்தியில் பிரபாகரன் நலமாக உயிருடன் இருக்கிறார், தற்போது புலிகள் ஆயுதங்களை மௌனித்திருக்கிறார்கள் என்று கூறி அறிக்கை ஒன்றும் வந்தது.
பின்னர் கண்ணியமற்ற வகையில் அவரது உடல் காட்சிப்படுத்தப்பட்ட படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியாயின. நாட்டின் தென் பகுதியில் கொண்டாட்டமும், வடக்கு-கிழக்கு பகுதியில் கனத்த சோகமும் நிலவியதை காண முடிந்தது. தெற்கே அரசியல் கட்சியின் தலைவர்களும், சிங்கள பேரினவாதிகளும் பிரபாகரனின் இறப்புச் செய்தியை வீதிகளெங்கும் மேள தாளத்துடன், பால் சோறு (கிரிபத்) பரிமாறி மகிழ்ந்தனர். ஒரு இனத்தின் அழிப்பில் இவ்வளவு மகிழ்ச்சியா என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. நானறிந்த வரையில், விடுதலைப் புலிகள் தென்னிலங்கையில் தாக்குதல்களை நடத்திய போதோ, அல்லது இராணுவத்துடனான மோதலில் ஏதாவது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற போதோ வடக்கு-கிழக்கிலுள்ள மக்கள் அதை கொண்டாடி மகிழவில்லை.
எதிரியாக இருந்தாலும் மரணத்தில் ஒரு கண்ணியம் கடைப்பிடிக்கபட வேண்டும் என்பது மரபு. எதிரணியில் இருப்பவரின் மரண வீட்டிற்குச் சென்றால் கூட அவரைப் பற்றி ஓரிரு வார்த்தை மேன்மையாகப் பேசுவதும், இறந்தவரின் குறைபாடுகள் அல்லது தீய குணங்கள் ஏதாவது இருந்தால் அதுபற்றி பேசாமல் இருப்பதுமே உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் ஒரு மரபாகும். அதற்கு புறம்பாக நடந்துகொள்ளுதல், போரில் இறந்த நபரை மோசமாக காட்சிப்படுத்துதல் மிகவும் கௌரமற்ற செயல்களாகும். இது குரூரமான ஒரு மனநிலையில் வெளிப்பாடாகும். அதை சிங்களப் படைகள் அன்று செய்தன. கீழ் நிலையில் இருக்கும் இராணுவத்தினர் மட்டுமல்லாமல் அதிகாரிகள் தரத்திலிருந்தவர்களும் அப்படியான கீழ்நிலை மனோபாவத்தை வெளிப்படுத்தினர்.
அப்போது இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் ஃபொன்சேகாவிடம் 53ஆவது படையணிக்கு தலைவராக இருந்த பிரிகேடியர் கமால் குணரட்ண பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்ட தகவலைக் கூறிய போது, அவர் அணிந்திருந்த சீருடைய கழற்றிவிடுமாறு ஃபொன்சேகா கூறியது அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. “ஒரு பயங்கரவாதி சீருடையை அணிய முடியாது, அவரது சீருடையை கழற்றிவிடுங்கள்” என்று கட்டளையிட்டுள்ளார்.
இதனிடையே மஹிந்த நாடாளுமன்றத்திலும் உரையாற்றி முடித்திருந்தார். அந்த உரை உண்மைக்கும் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை வெளிப்படுத்தியது. உரை முழுவதும் முதலைக் கண்ணீர் வடித்திருந்தார் மஹிந்த. அப்படி என்ன கூறினார் அந்த உரையில்?………
இதேவேளை வன்னியில் இடம்பெற்ற அவலங்களின் கோர முகம் வெளியுலகிற்கு மெல்ல மெல்ல தெரிய ஆரம்பித்தது………..
தொடரும்………..