ந.லோகதயாளன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தேசிய சுற்றுச்சூழல் ஆலோசகரும், இலங்கையின் முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக்சொல்ஹெய்ம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
கொழும்பு ஹில்டன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான செய்திகள் தொடர்பாகவும் , புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரக வட்டாரங்கள தெரிவிக்கின்றன.
இச் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா:
“தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும் , அரசியல் பிரச்சனைகளுக்கும் சாத்தியமான தீர்வை பெற்றுத்தரக்கூடியவராக தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார். அதை அவர் நிரூபித்தும் வருகின்றார்.
அந்த வகையில் தொடர்ந்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருப்பதே நாட்டுக்கு நன்மையாக அமையும் என்பதே எமது நிலைப்பாடாகும்”.
இதேநேரம் காஸா விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு எவ்வாறான தீர்வைக்கான முடியும் என்று தொடர்ந்தும் கூறிவருகின்றோம் என்பதையும் அதற்கு மாறாக பிரபாகரனின் போக்கு தொடர்ந்தால் 2009ஆண்டு முடிவையே எதிர்கொள்ள நேரிடும் என்று தான் 28 ஆண்டுகளுக்கு முன்னர் எரிக்சொல்ஹெய்ம் அவர்களுக்கு கூறியதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நினைவூட்டினார்.
பல்வேறு தாக்கங்களுக்கு முகம்கொடுத்து தமது வாழ்வாதாரத்தை நடத்தும் கடற்றொழிலாளர்களுக்கு நோர்வே அரசின் உதவிகளைப் பெற்றுத்தந்து உதவுமாறும் எரிக்சொல்ஹெய்மிடம் கேட்டுக்கொண்டார்.