நடராசா லோகதயாளன்
ஒரே நாடு ஒரே சட்டம் என்பது இலங்கையைப் பொறுத்தமட்டில் வெறும் காகிதத்திலேயே உள்ளது என தமிழர்கள் ஆண்டாண்டு காலம் கூறுவதனை அரசின் செயலே நிரூபணம் செய்வதாக வடக்கில் நீண்டகாலம் நிர்வாக சேவையில் உள்ள மூத்த அரச அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார் .
நிர்வாக அதிகாரி தற்போதும் பணியில் இருப்பதனால் தனது பெயரை தவிர்க்குமாறு கோரியதன் பெயரில் பெயர் பதவி நீக்கபட்டுள்ளது.
தமிழர்கள், தமிழர் பிரதேசம் என்றால் எப்பவுமே இரண்டாம் பட்சம் எனக் கூறும்போது அரசு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. இருப்பினும் மீண்டும், மீண்டும் அரசு தமிழர் பிரதேசம் வேற்றுக் கண் கொண்டே பார்க்கப்படுகின்றமை நிரூபணமாகின்றது.
அதாவது இலங்கையின் 25 மாவட்டங்களில் 23 மாவட்டங்களிற்கு நிரந்தர அரச அதிபர்கள் உள்ளனர். ஆனால் வடக்கில் இரு நிர்வாக மாவட்டங்களான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கு மட்டும் மாவட்ட அரச அதிபர்கள் இல்லை,
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதியும் யாழ்ப்பாணம் அரச அதிபர் மார்ச் மாதம் 8 ஆம் திகதியும் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டனர். இதன்போது மாவட்டத்தில் பணியாற்றும் மாவட்டங்களின் மேலதிக அரச அதிபர்கள் தமது பணியுடன் அரச அதிபர் பதவியினையும் மேலதிகமாக நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இருந்தபோதும் இரு மாவட்டங்களிற்கும் நிரந்தர மாவட்ட அரச அதிபர்கள் இன்றுவரை நியமிக்கப்படவில்லை.
நிர்வாக சேவையில் விசேட தரத்தைச் சேர்ந்தவர்களே மாவட்ட அரச அதிபர்களாக நியமிக்கும் நிலையில் ஆளும் கட்சிக்கு விசுவாசமான விசேட தரத்தைச் சேர்ந்தவர்கள் இன்மைதான் இதற்கு காரணமா எனவும் வினாவப்படுகின்றது.
இலங்கையில் விரைவில் தேர்தல் ஒன்று அறிவக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் அதுவரை காலம் கடத்தி தேர்தலின்போதும் பதில் கடமை அரச அதிபர்கள் மூலம் சாதிக்க முடியும் என அரச விசுவாசிகள் கருதுகின்றனரோ என்ற வினாவிற்கு பதில் தேட முடியவில்லை.
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற நிர்வாக சேவை விசேட தரத்திற்கான அதிகாரிகள் தேர்வில் இருந்தும் 41 அதிகாரிகள் விசேட தரத்திற்கு தேர்வாகியுள்ளனர். இவர்களில் ஐவர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகளாக இருக்கும் நிலையிலும் அரச அதிபர் நியமனம் மட்டும் வேண்டும் என்றே காலம் கடத்தப்படுகின்றது. இவ்வாறு காலம் கடத்தப்படுவதற்கு இந்த இரு மாவட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் அமைச்சரே காரணம் என அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் இரு மாவட்டங்களில் தற்போது கடமை நிறைவேற்றும் அரச அதிபர்களாக பணியாற்றுபவர்களில. ஒருவர் அமைச்சர் மட்டுமே செய்வதனால் வேறு அரச அதிபர்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் சட்டத்தின் பிரகாரம் அல்லது சுற்று நிரூபத்திற்கு உட்பட்டதனை மட்டுமே மேற்கொள்வர் என அமைச்சர் கருதுவதனால் நிரந்தர அரச அதிபர் நியமிக்கத் தடையாக இருப்பதாகவே கருதப்படுகின்றது என நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.