தான் பிறந்து வளர்ந்த இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கிராமப் பிரதேசங்களில் கற்றுவரும் மாணவச் செல்வங்களுக்கு தொடர்ச்சியாக கற்றல் தொடர்பான உதவிகளை கனடா வாழ் சமூகப் பணியாளர் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களை கனடாவிலும் தாயகத்திலும் வாழும் கல்விச் சமூகம் சார்ந்த பெரியோர்களும் ஆசிரியப் பெருந்ததைகளும் மாணவச் செல்வங்களும் அவர்தம் பெற்றோர்களும் பாராட்டி மகிழ்கின்றார்கள்.
கனடா நாட்டில் கடந்த 34 வருடங்களாக வாழ்ந்து வரும் சமூகப் பணியாளர் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் தனது சொந்தப் பணத்திலும் சில சமயங்களில் நண்பர்கள் வட்டாரத்திலிருந்து சேகரிக்கப்படும் நிதியின் மூலமாகவும் இந்த உதவிகளை மாணவச் செல்வங்களுக்கு வழங்கி வருகின்றார்.
அண்மையில் தாயகத்திலிருந்து வந்த வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு சின்ன ஊறணி கிராமத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ் பாடசாலை செல்லும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றையும் அவர் வழங்கியுள்ளார். இந்த அன்பளிப்பை தாயகத்தில் வாழும் அவரது சகோதரரும் கனடா ‘உதவும் பொற்கரங்கள் அமைப்பின்’ மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான குணராசா கணபதிப்பிள்ளை மேற்படி மாணவிக்கு துவிச்சக்கர வண்டியை வழங்கி வைத்தார்.
மேலும் அண்மையில், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ‘சேனைக்குடியிருப்பு கணேச மகா வித்தியாலயம் மற்றும் பெரியநீலாவணை விஸ்ணு வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி பயிலும் மாணவச் செல்வங்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் நிதி ஆதாரம் ஆகியவற்றையும் கனடா வாழ் சமூகப் பணியாளர் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை தனது பிரதிநிதிகள் ஊடாக வழங்கினார்.
இங்கே காணப்படும் படங்களில் மேற்படி ‘சேனைக்குடியிருப்பு கணேச மகா வித்தியாலயம் மற்றும் பெரியநீலாவணை விஸ்ணு வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபர் மற்றும் ஆசிரியப் பெருந்தகைகள் ஆகியோர் மாணவச் செல்வங்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதைக் காணலாம்.
–செய்தி; சத்தியன்