நூல்-; இனியவும் உளவோ
நூலாசிரியர்;- அனலை ஆ. இராசேந்திரம். கனடா
நீண்டகால இடைவெளிக்குப் பின்(2000) “பூவும் புல்லிதழும்” என்ற அனலை ஆ.இராசேந்திரம் அவர்களின் நூலைப் படிக்க முடிந்தது.
திருக்குறள் சார்ந்த இருபத்தாறு கட்டுரைகள் அடங்கிய அந்த நூலில் இரசனைக் கட்டுரைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் அடங்கி இருந்தன.
அது ஒரு சிறந்த நூல். இப்போது படித்துப் பார்க்கும் போதும் கூட பாராட்ட முடிகிறது. சலிப்பின்றி வாசிக்கத் தூண்டுகிறது.அவரது வேறு ஆக்கங்கள் எனக்குக் கிடைக்கவில்லை.
குறிப்பாக, யாப்பிலக்கணம் கற்ற சிறந்த கவிஞராக, யாப்புக்கிணங்கப் பாப் புனையும் இவரது “பூமழை” என்ற கவிதைத் தொகுப்பு எனக்குக் கிட்டவில்லை.
அனலை ஆ.இராசேந்திரம் அவர்கள் ஒரு அற்புதமான இரசிகர்.என்பது முதலில் வியந்து பாராட்டத்தக்கது. அவர் ஒரு சிறந்த ஆய்வாளர் என்பது அடுத்துப் பாராட்டப் படவேண்டியது. இவை எல்லாவற்றையும் விட சிறந்த தமிழ்ப் பற்றாளர் என்பது என்னை அதிகம் கவர்கிறது.
அவரது இந்த “இனியவும் உளவோ” என்ற நூல் அவரது ஆழ்ந்த தமிழ்ப் புலமையையும், இரசனைத் திறத்தையும்,வெளிப்பாட்டு உத்திமுறையையும் மிக உன்னதமாகக் காட்டுகிறது.
“இனியவும் உளவோ” என்ற வார்த்தைகளை “நறியவும் உளவோ” என்ற இறையனாரின் கவி வரிகள் நினைவூட்டுகின்றன.
“குறுந்தொகை” என்ற சங்க இலக்கிய நூலில் இடம்பெற்ற இறையனாரின் “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி – “என்ற அற்புதமான பாடலின் ஈற்றடி “நறியவும் உளவோ நீ அறியும் பூவே.” என முடிகிறது.
இந்தப் பாடல் தான் தருமியிடம் சிவபெருமான் எழுதிக் கொடுத்தபாடல். அவன் அப்பாடலை செண்பகப் பாண்டியனிடம் கொடுத்ததும், நக்கீரர் பிழை பிடித்ததும். சிவபெருமான் புலவர் வடிவில் வந்து வாதாடியதும், “நெற்றிக்கண் திறக்கினும் குற்றம் குற்றமே” என நக்கீரர் விதண்டாவாதம் செய்ததும் விரிவாக ஆராயப் பட்ட விடையங்கள்.
“நறியவும் உளவோ” இங்கு “இனியவும் உளவோ”என்று நூலின் தலைப்பாகி இனிக்கிறது. இந்நூலாசிரியர் எவ்வளவு தன்னம்பிக்கையோடு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார் என்று எண்ணி எண்ணி வியக்கிறேன்.
இன்றைய இளைஞர்களுக்கு மட்டுமல்ல இன்றைய தமிழ்ப் பேராசிரியர்களுக்கே பழந்தமிழ்ப் பரிச்சயம் குறைந்து விட்டது. புனைகதைகளையும், புதுக் கவிதைகளையும் படித்துவிட்டு தமிழறிஞர்கள் என்று தம்மைத்தாமே சொல்லிக்கொள்வோர் பலர் இன்று இருக்கிறார்கள்.
அனலை ஆ..இராசேந்திரம் போன்று தமிழை இரசித்து, ருசித்து அனுபவித்து “நாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் “ என்ற நல் நோக்கோடு எளிய நடையில், இனிய முறையில்,, வாசிக்கத்தூண்டும் வகையில் பழந்தமிழ் இலக்கிய இன்பத்தை அள்ளி வழங்கும் தகுதி படைத்தவர்கள் மிக மிகக் குறைவு என்றே சொல்லலாம்.
ஈழத்தில் வெளிவந்த பழந்தமிழ் இலக்கிய நூல்களைக் கற்கவேண்டும் அவற்றிலுள்ள சிறப்புக்களை வெளிப்படுத்தவேண்டும் என்ற அவரது நோக்கம்,பேரவா அவருக்கு ஈழத்தில் இருக்கும் போது கிடைக்கவில்லை..கனடாவில்தான் கிடைத்தது.
பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்கள் தொகுத்து இலங்கைச் சாகித்திய மண்டலம் வெளியிட்ட “ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” நூல்(1966) மூலம் தனது அவாவைச் சிறிது தணிக்க முயன்றிருக்கிறார் நூலாசிரியர்.
இந்த நூல் விரிவு படுத்தப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுவரைக்கும் உள்ள தமிழ்க் கவிஞர்கள் சிலர் பற்றிய குறிப்புக்களோடு கடந்த ஆண்டில்(2018) வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது என்ற நல்ல செய்தியை இவ்விடத்தில் தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இருபத்தி மூன்று கட்டுரைகளில் சங்க கால ஈழத்துப் புலவரான ஈழத்துப் பூதந்தேவனாரின் அகநானூறு, குறுந்தொகைப் பாடல்கள் நான்கு, நாட்டுப் பற்று என்ற உணர்வின் மூலம் முன்னிலைப் படுத்தப்படுகிறது.
ஈழத்து இலக்கிய வரலாறும் தமிழகத்து இலக்கிய வரலாற்றோடு தோன்றி வளர்ந்தது என்பதைப் பெருமையோடு காட்டுவதற்காகவே இந்த நான்கு அகத்திணைப் பாடல்களையும் இந் நூலாசிரியர் எடுத்து நயந்து வியந்து மகிழ்ந்து நான்கு கட்டுரைகளாக இந்நூலில் எழுதியுள்ளார் என நினைக்கிறேன்.
“கலித்தொகை” என்ற சங்ககால நூலிலிருந்து இரண்டு பாடல்களை எடுத்து இரண்டு கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று “வீதியில் ஒரு பெண் யானை” என்ற தலைப்பிலானது.
சங்கப் புலவர்களில் தலை சிறந்த புலவரான கபிலரால் பாடப்பட்ட ஒரு பாடலை நன்றாக இரசித்து சிறப்பாக எழுதியுள்ளார்.
ஒரு பேரழகி தெருவிலே செல்கிறாள். அவளைப் பார்த்த ஒர் இளைஞன் அவளது அழகிலே ஈடுபட்டு மயங்கித் தன் நிலை இழக்கிறான். அவளின் அழகில் மயங்கித் தன்னைப்போல எத்தனைபேர் தவிப்பார்களோ என்று எண்ணுகிறான்.
அவ்வளவு அழகாக அவள் இருப்பது அவளின் தவறில்லை. அவளை தெருவிலே நடமாட விட்டிருக்கிறார்களே அவர்களது உறவினர்கள் அவர்கள்தான் தவறு செய்தவர்கள் என்று சொல்ல நினைக்கிறான்.ஆனால் அப்படிச் சொல்லவும் மனம் வரவில்லை.
இறுதியாக, அவன் அந்த நாட்டு அரசன் மேல் தான் தவறு என்று கூறுகிறான். எதிரில் செல்பவர்களை அடித்துத் துவம்சம் செய்யும் மதம் பிடித்த யானையை நீராட்டுவதற்காகத் தெருவழியே கொண்டுசெல்ல வேண்டியிருந்தால் பறை அறைந்து, தெருவில் செல்வோரை விலக்கிவிட்டே கொண்டு செல்லவேண்டும் என்று அரசன் சட்டம் போட்டிருக்கிறான்.
இதேபோல இத்தகைய அழகி ஒருத்தி வெளியிலே செல்வதாக இருந்தால் இளைஞர்கள் எவரும் அந்த வீதியிலே வரக்கூடாது என்று பறை அறைந்து செய்தி பரப்பி விட்டுத்தான் செல்லவேண்டும் என்று கட்டளை இட்டிருக்காத அரசனே தவறு செய்தவன்.என்கிறான் இளைஞன்.
நீயும் தவறில்லை, நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட நுமரும் தவறிலர்
நிறையழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப்
பறையறைந் தல்லது செல்லற்க என்னா
இறையே தவறுடை யான்.
“நிறையழி கொல்யானை நீர்க்கு விட்டாங்கு—“என உவமை சொல்லக் கபிலரைப்போல வேறுயாரால் முடியும். இதனை இரசிக்க அனலை ஆ. இராசேந்திரத்தைப்போல வேறு யாரால் முடியும்.
கவியரசர் கண்ணதாசன் இந்தப் பாடலைப் படித்திருக்கக் கூடும். அவரது “கண்படுமே பிறர் கண் படுமே நீ வெளியே வரலாமா.—“என்ற பாடலில் இந்தக் கற்பனை கொஞ்சம் கலந்துள்ளதைக் கண்டுகொள்ளலாம்
ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே—
—–இந்த
மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
தனியே வருவது பாவம்!
கவியரசர் கண்ணதாசனின் “உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை. என்னைச் சொல்லிக் குற்றம் இல்லை. காலம் செய்த கோலமடி. கடவுள் செய்த குற்றமடி.”பாடல் இப்பாடலின் உந்துணர்வால் வந்திருக்கலாம்.
“சந்தனப் பாவையர்” என்ற கலித்தொகைப் பாடல் சார்ந்த கட்டுரை முதற் கட்டுரையாக அமைந்துள்ளது. இக் கலித் தொகைப் பாடலில் வரும் பாடல்வரிகளும் கருத்தும் கவியரசர் கண்ணதாசனால் இரண்டு பாடல்களில் கையாளப் பட்டுள்ளன..
“பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என் செய்யும்”
இவை கலித்தொகை வரிகள் “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி” என்ற பாடலில் வரும்
“மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்”
என்று கவியரசர் கண்ணதாசன் எழுதுகிறார்..அத்தோடு
“சிப்பியிலே முத்து— –அது
சிப்பிக் கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர் —–அது
தென்னைக் கென்ன சொந்தம்.
ஓங்கிவரும் முல்லை— –அது
ஒருகொடியின் பிள்ளை
எடுத்துக்கொண்டு போனால் –அது
கொடிக்குச் சொந்தமில்லை.
—“எனவரும் பாடலில் கவியரசர் கண்ணதாசன் மேற்காட்டிய கலித்தொகைப் பாடலை நினைவூட்டுகிறார்.
ஈழத்தில் பாடப்பட்ட திருக்கரசைப் புராணம், திருச்செல்வர் காவியம், தத்தைவிடு தூது, சித்திரவேலாயுதர் காதல், கனகி புராணம், மாவை மும்மணிக் கோவை, பறாளை விநாயகர் பள்ளு,முதலானவற்றிலிருந்து ஏழு கட்டுரைகளை எழுதி அவற்றைப் பற்றிய சிறந்த அறிமுகத்தைச் செய்திருக்கிறார்.
திருகோணமலை.த.சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் இயற்றிய “தத்தைவிடு தூது” நூல் மூலம் பெண்விடுதலைப் பாடல்களை மகாகவி பாரதியாருக்கு முன்பே ஈழத்தவரான இவரே பாடினார் என்பதை “புரட்சித் தூது” என்ற கட்டுரைமூலம் வெளிப்படுத்தி ஈழத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
திருகோணமலை த.சரவணமுத்துப் பிள்ளை அவர்கள் எழுதிய “மோகனாங்கி” என்ற நாவலே தமிழில் முதல் சரித்திர நாவல் என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.
அத்தோடு மகாகவி பாரதியாருக்கு முன்பு தெல்லிப்பளை பாவலர் துரையப்பா பிள்ளை அவர்கள் “பெண் விடுதலைக் கும்மி” என்ற பெயரில் கும்மிப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பதும் நினைவு கூரத்தக்கது.
இன்னும் பல இலக்கியப் படைப்புக்களுக்கு நம் ஈழத்தவர்களே முன்னோடிகள் என்பதையும் விரிவாக ஆராயலாம்.
ஈழத்தின் சிறந்த புலவர்களான நவாலியூர் சோமசுந்தரப் புலவர், பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை, சுவாமி விபுலானந்தர், குருகவி ம.வே. மகாலிங்க சிவம், நீர்வை சிற்சபேசன், வித்துவ சிரோமணி ந..ச.பொன்னம்பலபிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, பேராசிரியர் அழகு சுந்தரம், கவிஞர் கந்தவனம்,முதலானோரின் சிறந்த கவித்துவ வெளிப்பாடுகளைக் காட்டும் ஏழு கட்டுரைகள்,
தமிழ் மொழியிலிருந்து பிறந்ததாகச் சொல்லப்படும் தெலுங்கு மொழியின் இடைக்கால வரிவடிவமான பிராகிருத மொழியில் உள்ள இரண்டு பாடல்களை கைக்கிளை, பெருந்திணை என்ற எமது சங்க இலக்கிய மரபோடு பொருத்தி எழுதப் பட்ட இரண்டு இரசனைக் கட்டுரைகள், “பிஞ்சுப் பழம்” என்ற சைவ சித்தாந்த கருத்தமைந்த கட்டுரையுமாக இருபத்தி மூன்று கட்டுரைக் கற்களைக் கொண்டு இந்தக் கலைக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
கானகத்தில் காந்தர்வத் திருமணம் செய்து கைவிட்டுப் போன துஷ்யந்தனை நாடிச் செல்ல முனைகிறாள் சகுந்தலை. அவளது வளர்ப்புத் தந்தையான கண்ணுவ முனிவர் அவள் செல்லவேண்டிய தூரம் குறுகட்டும் என்று இரக்கத்தோடு சொல்கிறார்
புலவர் ம.வே.மகாலிங்க சிவம் அவர்கள் இதனை “அறு தொடர்க்கண் உகரபோல் உறுக தூரம்” என்று பாடுகிறார். இந்த உவமையை இலக்கணங் கற்றவர்களே இரசிக்க முடியும். விளங்கிக் கொள்ளமுடியும்.
ஆனால் இந்தப் பாடல் அடியின் அடிப்படையில் எழுதப்பட்ட .“குற்றியலுகரத் தூரம்” என்ற கட்டுரையில் ஆசிரியர் முடிந்தவரை இலக்கணம் கற்பித்து வாசகரைத் தன்னோடு பயணிக்கச் செய்து அக்கட்டுரையை இரசிக்கச் செய்கிறார்.
“கனகி புராணம்” அழிந்து போனதற்குக் காரணம் இப்புராண ஆசிரியர் நட்டுவச் சுப்பையனார் பல பிரமுகர்களது பெயர்களைக் கனகியோடு சம்பந்தப் படுத்திப் பாடியதாக இருக்கலாம்.
“பிஞ்சுப் பழம்” என்ற கட்டுரை அளவில் மிகச் சிறியது. ஆனால் கருத்தில் உயர்ந்தது பிறப்பு இறப்பு சம்பந்தமான நுட்பமான கருத்தை மிகச் சிறப்பாக இவர் எழுதியுள்ளார்.
பின்னிணைப்பாக பல தகவல்களையும் சேர்த்திருக்கிறார். தனது தாய்க்கும் தமையனுக்கும் இந் நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
சராசரி வாசகருக்கும், அறிவு தேடும் வாசகருக்கும், பொழுது போக்கும் வாசகருக்கும், மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பும் வாசகருக்கும், பாடசாலை மாணவர்க்கும் என பல தரப் பட்ட வாசகருக்கும் இன் சுவைத் தீனி கிட்டக் கூடிய வகையில் தனது எழுத்து நடையை அமைத்துள்ளன.
கட்டுரைகள் யாவும் சிறப்பாக அமைந்துள்ளன. இவற்றை பாடப் புத்தகங்களில் சேர்த்து அடுத்த தலைமுறையை தமிழ் தெரிந்த தலைமுறையாக, தமிழரின் பெருமை தெரிந்த தலைமுறையாக ,தமிழன் என்று பெருமித உணர்வு கொள்ளக் கூடிய தலைமுறையாக வளர்க்கவேண்டியது தமிழர்கள் அனைவரதும் கடமையாகும்.
எல்லாக் கட்டுரைகளையும் தனித்தனியாக பாராட்டி எழுத இங்கு வாய்ப்பில்லை. பதச் சோறுகளாகச் சிலவற்றையே தொட்டுக் காட்டியுள்ளேன்.
“கபிலன் பாடினன் கொல்லோ—“என்று ஒளவையார் பாடியதுபோல நானும் “பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களே பாராட்டியிருக்கிறார்களே” என சொல்லி விட்டுவிடலாம் என்றே நினைக்கிறேன்.
எழுத்துப் பிழைகளைக் காண்பது மிக அரிது. அவ்வளவு கவனமாக அச்சுப் பதிவு செய்திருக்கிறார்.அதற்குத் தனியான பாராட்டுக்கள். இலக்கண சுத்தமான சீர் பிரிப்புக்களோடு பாடல்கள் அச்சிடப் பெற்றுள்ளதைப் பார்த்து மகிழ்கிறேன். இது இவரது யாப்பிலக்கண அறிவைக் காட்டுகிறது.
அட்டையின் நிறத்திலும், படத்திலும்,பக்க வடிவமைப்பிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். முன்னுரை, அணிந்துரை, முதற் கட்டுரை ஆகியவை இடப்பக்கத்தில் தொடங்குகின்றன. அவற்றை வலப் பக்கத்தில் தொடங்கியிருக்கலாம்.
வெளியீட்டாளர், அல்லது வெளியீட்டு நிறுவனம் பற்றிய தகவல்கள் இல்லை. விலை குறிப்பிடப் படவில்லை. விலைமதிக்கமுடியாத சொத்து என்று கருதினாரோ தெரியாது.
இந்த அரிய நூலை ஆக்கித் தந்த அனலை ஆறு. இராசேந்திரம் அவர்களை எவ்வளவுக்குப் பாராட்டினாலும் தகும். இந்நூலை அனைவரும் படித்துத் தமிழராய்த் தலை நிமிரவேண்டும்.
இன்னும் பல சிறந்த நூல்களை இவர் ஆக்கித்தரவேண்டும். அதற்குரிய உடல் உள நலத்தோடு இவரை எல்லாம் வல்ல இறைவன் வைத்திருக்கவேண்டும் என வேண்டி வாழ்த்தி அமைகின்றேன். நன்றி.
அகளங்கன்
90,திருநாவற் குளம்,
வவுனியா,