நடராசா லோகதயாளன்
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த சீன துணை அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான குழு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்பதை நேரடியாக கண்டறியும் நோக்கில் கருத்துக்கணிப்பு ஒன்றையும் இரகசியமான முறையில் செய்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த கருத்துக்கணிப்பின் தரவுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான விசேட சந்திப்பின்போது சீன துணை அமைச்சர் சன் ஹையன் தெரியப்படுத்தியுள்ளார். இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகமும் உறுதிப்படுத்தியது.
இலங்கையின் அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்புகள் அதிகம் என்பன தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள சீன இராஜதந்திர மையம் ஆய்வு அறிக்கைகளை ஏற்கனவே தயார் செய்து அதனை பெய்ஜிங்குக்கு அனுப்பியுள்ளது.
இவ்வாறு அனுப்பப்பட்ட அறிக்கையினை முழுமையாக அவதானத்திற்கு எடுத்துக்கொண்ட பின்னரே சீன துணை அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்தனர். அதன்போது, ஏற்கனவே கொழும்பு சீன இராஜதந்திர மையம் அனுப்பிய ஆய்வு அறிக்கைகளின்
தகவல்களை நேரடியாக உறுதிப்படுத்திக்கொள்வதான திட்டமே இந்த பயணத்தை தீர்மானித்திருந்தனர்.
அதாவது இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்பதனை கண்டறிய, மக்களை நேரடியாக சந்தித்து கருத்துக்கணிப்பொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இத்தகைய நடவடிக்கைகள் பொதுவாக இராஜதந்திர அணுகு முறைகளுக்கு உட்பட்டதல்ல. ஆனாலும் அவ்வாறானதொரு கருத்துக்கணிப்பை மிகவும் இரகசியமாக முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகள் முற்கூட்டியே செய்யப்பட்டிருந்தது.
இதற்காக இலங்கையின் கம்பஹா மாவட்டத்தின் பியகம தேர்தல் தொகுதியை கொழும்பில் உள் சீன இராஜதந்திரிகள் மிகவும் இரகசியமாக தெரிவு செய்திருந்தனர். சீன துணை அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான குழுவினர் இலங்கை விஜயத்தின்போது, முதலாவதாக பியகம தேர்தல் தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து கருத்துக்கணிப்பையும் செய்துள்ளனர். இதன் பின்னரே நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியுடனான இருதரப்பு சந்திப்புக்கு அப்பால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சீன துணை அமைச்சர் சன் ஹையனுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது பியகம தேர்தல் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு தொடர்பில் சீன துணை அமைச்சர் சன் ஹையன், சஜித் பிரேமதாசவிடம் தகவல் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து இரு நாட்டு உறவுகள், இலங்கைக்கான சீன ஒத்துழைப்புகள், சீன வெளிவிவகார கொள்கைகள் மற்றும் தெற்கு ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இருவருக்கும் இடையில் பரந்துபட்ட பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் சுமார் 45 நிமிடங்கள் வரை கலந்துரையாடல் நீடித்ததாகவும் தற்போது தெரிவிக்கக்படுகின்றது.
இவ்வாறு சீனா இரகசிய நகர்வு ஒன்றை மேற்கொண்டதா, இல்லையா என்பது தொடர்பில் இலங்கையின் இராஜதந்திர மட்டத்தில் மட்டுமன்றி அயல் நாடுகளின் புலனாய்வுப் பார்வையும் விரைவு படுத்தப்படுகின்றது. ஏனெனில் சீனா இவை அனைத்தையும் மேற்கொண்டு விட்டதன் பின்னரே கண்டுகொள்ளப்பட்டுள்ளதா அல்லது தெரிந்தும் மௌனம் காக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுவது மட்டுமன்றி இவ்வாறான ஓர் மிகப் பெரும் காராயத்தையும் அரசிற்கே தெரியாது நிறைவேற்றக்கூடிய வல்லமையில் சீனா வளர்ந்து விட்டதனையே இது எடுத்துகாட்டுவது எதிர் காலத்தில் என்ன நிலைமையை தோற்றுவிக்கும் என்ற ஐயம் எழுப்பப்படுகின்றது.