தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் தெரிவிப்பு
சிங்கள ஜனநாயகத்தை தமிழர்கள் ஏற்கவில்லை என்பதை உலகிற்கு தெரிவிப்பதற்கு தேர்தலை பகிஷ்கரிப்பது ஒரு சிறந்த முடிவாகும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் நேற்று புதன்கிழமை 8ம் திகதி ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“சிங்கள ஜனநாயகத்தை தமிழர்கள் ஏற்க வில்லை என்பதை உலகிற்கு தெரிவிப்பதற்கு தேர்தலை பகிஷ்கரிப்பது ஒரு சிறந்த முடிவாகும்.
இலங்கையின் ஒற்றை ஆட்சியை ஆதரிக்கின்ற நபர்களை தவிர்த்து, தமிழ் இறையாண்மைக்குரிய பொது வாக்கெடுப்புக்குரிய ஒருவருக்காக அனைவரும் ஒன்றிணைந்து அறிவித்தால் இவ்விடயம் சாதகமாக பரிசீலிப்பது தமிழ் மக்களுக்கும் பிரயோசனமாக இருக்கும்.
மேலும் மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக நினைவேந்துவதற்கு இமாலய துரோகிகளுக்கு உரிமை இல்லை.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டமானது வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, 2635 ஆவது நாளாக தொடர்கிறது.
முழு இறையாண்மையுடன் ஒரு ஜனநாயக தமிழ் தேசத்தில் தமிழ் குழந்தைகளும்,பெற்றோர்களும் சுதந்திரமாக வாழக்கூடிய எதிர்காலத்திற்காக எமது துணிச்சலான உள்ளங்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். இது தான் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு தினமாகும்.
உலக தமிழ் பேரவை, கனடியன் தமிழ் காங்கிரஸ், எலியாஸ் ஜெயராஜா மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்து கண்டியில் உள்ள புத்த பிக்குகளின் கால்களைத் தொட்டு வீழ்ந்து கும்பிட்ட பின்னர், தமிழ் இன படுகொலைகளுக்கு காரணமானவர்களிடம் ராஜபக்ச உட்பட பலருக்கு பணிந்து நடந்து கொண்டனர். இது தாயகத்தில் தமிழர்களை அவமரியாதை செய்யும் செயலாகும்.
மேலும், இந்த நபர்கள் ஒரு ‘இமாலய ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டனர். இது சிங்கள இனவாத குழுக்களுடன் இணைந்து தமிழர் விரோத அமைப்புகளால் தயாரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் நல்லிணக்கத்தில் கவனம் செலுத்துவதாக கூறி, தமிழர்களுக்கு எதிரான சிங்கள ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையை ஊக்குவிக்க உதவும் ஒப்பந்தமாகும்.
அமைதிக்கான வட கரோலினியன் என்ற தமிழ் அமைப்பின் ஊடாக எலியாஸ் ஜெயராஜா அவர்கள் மே 18 நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக புலம்பெயர் தமிழ் தொடர்புகள் எமக்கு தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தமிழ் நபர்கள், ‘இமாலய ஒப்பந்தம்’ பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் எனவும் பலர் எமக்கு கூறியிருந்தனர்.
இந்த தமிழ் உறவுகளை ஜெயராஜா அழைத்து தானும் இறந்த தமிழருக்காக கண்ணீர் காட்டுவதற்காக முள்ளிவாய்க்கால் தினத்தை எம் தொப்பில் கொடி உறவுகளுடன் நினைவு கூற முயல்கிறார்.
தமிழ் தாய்மார்களாகிய நாம், வன்னியிலிருந்து அமைதிக்கான வட கரோலினியர்களை, ஜெயராஜாவை முள்ளியவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் பங்கு பெற அனுமதி கொடுக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
‘தமிழ் இமாலய துரோகிகள்’ என்று குறிப்பிடப்படும் நபர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் செய்வது ‘இமாலய உடன்படிக்கைக்கு’ ஆதரவைப் பெறுவதையும், வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பணம் பெறும் உத்திகளில் ஈடுபடுவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு அரசாங்கங்களிலிருந்து கணிசமான அளவு பணம் ‘இமாலயா ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படும் குழுவுடன் இணைக்கப்பட்ட தனிநபர்களின் கணக்குகளுக்கு அனுப்பப்படுகின்றது என்று ஒரு நிலையான அவதானிப்பு உள்ளது. இந்த நிதிகள் ‘இமாலய ஒப்பந்தத்தை’ ஊக்குவிக்கும் முயற்சிகளை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.
எனவே, தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சக்களை ஆதரிதக்கும் இத்தீவிலும், வெளிநாடுகளிலும் உள்ள தமிழர்கள், இப்போது இனப்படு கொலைக்கான நீதிக்கும் தமிழ் அரசியல் இறையாண்மைக்கும் இடையூறு விளைவிக்கின்றனர்.
இவர்களும் இவர்களின் அமைப்புகளுக்கும் முள்ளியவாய்க்கால் நினைவு நாளை நினைவேந்த எந்த தார்மீக அதிகாரமும் இல்லை.
‘இமாலய துரோகிகள்’ என்று நாம் குறிப்பிடுபவர்களை ஒதுக்கி வைத்து மே 18 நினைவு தினத்தை நடத்தத் திட்டமிடுமாறு தமிழ் அமைப்புகளை நாங்கள் தாழ்மையுடன் வேண்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்.