தமிழ்ப்பொது வேட்பாளர் தொடர்பான விடயம் தமிழ் மக்களைச் சென்றடைந்ததோ இல்லையோ,அதில் தமிழ் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்களோ இல்லையோ, ஒரு பகுதி பத்திரிகைகளும் பத்திரிகையில் எழுதுபவர்களும் யு டியூப்பர்களும் அரசியல்வாதிகளும் அதைக் கண்டு பதட்டம் அடைவது தெரிகிறது. அதற்கு எதிராக சில பத்திரிகைகள் ஆசிரியர் தலையங்கம் எழுதுகின்றன. சில பத்திரிகைகள் சூழ்ச்சி கோட்பாடுகளை உற்பத்தி செய்கின்றன. சில யு டியுப்பர்கள் வாய்க்கு வந்தபடி கதைக்கிறார்கள்.
இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், முதலாவதாக, தமிழ் பொது வேட்பாளர் விடயம் குறிப்பிட்ட ஒரு பகுதி அரசியல்வாதிகள் மற்றும் அவர்களோடு தொடர்புடைய ஊடகங்கள் யூடியூப்பர்கள் மத்தியிலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஏதோ ஒன்று பறிபோகப் போகிறது என்பதுபோல அவர்கள் பதறுகிறார்கள்.
இரண்டாவதாக, இவர்களில் அநேகர் இதற்கு முன் பொது வேட்பாளர் தொடர்பில் எழுதப்பட்டவற்றயும் கூறப்பட்டவற்றையும் ஆழமாக வாசித்திருக்கவில்லை மட்டுமல்ல, அண்மையில் வெளியிடப்பட்ட சிவில் சமூகங்களின் கூட்டு அறிக்கையையும் வாசித்திருக்கவில்லை, அல்லது விளங்கிக் கொள்ளவில்லை.
ஈழத் தமிழர்கள் மத்தியில் ஒரு விடயத்தை குறித்த ஆழமான வாசிப்போ விளக்கமோ இன்றிக் கருத்து கூறுபவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. பொது வேட்பாளரை எதிர்க்கும் பெரும்பாலானவர்கள் அப்படிப்பட்டவர்கள் தான். அவர்கள் மட்டுமல்ல பொது வேட்பாளரை ஆதரிப்பவர்கள் மத்தியிலும் அப்படிப்பட்டவர்கள் உண்டு. விளக்கமின்றி ஆதரிப்பது.
மூன்றாவது, இவர்கள் இவ்வாறு பதட்டம் அடைவதும் எதிர்ப்பதும் எதைக் காட்டுகின்றது என்றால் பொது வேட்பாளர் என்ற கருத்துருவம் பலமாக மேலெழுந்து வருகிறது என்பதைத்தான்.
சில பத்திரிகைகள் எழுதுகின்றன, தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகிறவர் இலங்கை முழுவதும் உள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர் என்று. ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவை முன்வைப்பவர்கள் அப்படி எங்கேயும் கூறியதாகத் தெரியவில்லை. பொது வேட்பாளர் தமிழ் தேசிய நிலைப்பாட்டின் குறியீடு என்பது அழுத்தமாக ஏற்கனவே கூறப்பட்டு விட்டது.
இரண்டாவதாக,பொது வேட்பாளர் யார் என்பதை குறித்து இதுவரை யாரும் முடிவு எடுக்கவில்லை. சில அரசியல்வாதிகள் அல்லது சில சமயப் பெரியவர்கள் கூறுபவற்றை வைத்து மட்டும் அதைக் குறித்து கருத்துகூற முடியாது.
அதாவது ஒன்றைப் பற்றி எழுதுவதற்கும் விமர்சிப்பதற்கும் முதலில் அதைப் பற்றிய ஆழமான விளக்கமோ வாசிப்போ இல்லை என்பதைத்தான் அண்மைக்கால செய்திகளும் யுடியூப் காணொளிகளும் திரும்பத்திரும்ப நிருபிக்கின்றன.
ஆனால் இந்த விடயத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். யாருடன் எங்கே டீல் செய்வது? தமிழ் வாக்குகளை எப்படி வெற்றுக் காசோலைகளாக ஒரு சிங்கள வேட்பாளரை நோக்கித் திருப்பி விடுவது? அடுத்த தேர்தலில் எந்த டீல் அதிகம் லாபமானது? போன்ற விடயங்களில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள்தான் ஒரு பகுதி ஊடகவியலாளர்களையும் யு டியுப்பர்களையும் இயக்குகிறார்கள் என்ற ஒரு சூழ்ச்சி கோட்பாடும் உண்டு.
அச்சூழ்ச்சி கோட்பாடு உண்மையாக இருந்தாலும் கூட அதை தவறு என்று கூற முடியாது.ஏனென்றால் அரசியலில் ஒரு கருத்தை முன்வைக்கும் தரப்பு அதை எப்படி மக்கள் மயப்படுத்தலாம் என்று சிந்திக்கும். அதற்கு தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஊடகங்களையும் யூடியூப்பர்களையும் அந்த தரப்பு பயன்படுத்தும். பொது வேட்பாளர் தொடர்பிலும் அதுதான் நடக்கின்றது.
அவ்வாறு பொது வேட்பாளருக்கு எதிராக எழுதுபவர்களும் கதைப்பவர்களும் பின்வரும் விடயங்களை கூறி வருகிறார்கள்.
முதலாவதாக,பொது வேட்பாளர் எனப்படுகின்றவர் ஆபத்தான ஒரு பரிசோதனை.அதில் தோற்றால் அது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியலையே தோற்கடித்து விடும் என்பது. இரண்டாவது பொது வேட்பாளர் சிங்கள மக்களை உசுப்பேத்தி விடுவார் என்றும் இனவாத அலை ஒன்றை அவர் தோற்றுவிப்பார் என்றும் கூறப்படுவது. மூன்றாவது, பொது வேட்பாளர் ரணிலை வெல்ல வைப்பதற்கான ஒரு கருவி என்பது. அதாவது சஜித்துக்கு போகக் கூடிய வாக்குகளை அவர் கவர்ந்து விடுவார். அது அதன் தர்க்கபூர்வ வளர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைத்து விடும் என்பது.
இந்த மூன்று விமர்சனங்களையும் இன்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். முதலாவதாக, பொது வேட்பாளர் தோற்கக்கூடாது என்று கூறுபவர்களின் வாதம். உண்மைதான் தோற்கக் கூடாது அவ்வாறு தோற்கக் கூடாது என்று சொன்னால் அதற்காக தமிழ் மக்கள் கூட்டாக உழைக்க வேண்டும்.அதற்குத் தான் ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. அரசியல் சமூகமும் சிவில் சமூகமும் இணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பொழுது, இரண்டு தரப்பும் ஒன்றை மற்றொன்று பலப்படுத்தி அந்த முயற்சியை முன்னெடுக்கலாம், அதே சமயம் தேர்தல் அரசியல் எனப்படுவது வெற்றியும் தோல்வியும் கலந்ததுதான்.
தோல்வியைக் காட்டிப் பயப்படுத்தும் எல்லாருக்கும் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்ட வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மிகப்பெரிய திருப்பகரமான வெற்றி எதையுமே பெற்றிருக்கவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ் மக்கள் இனிமேல்தான் தோற்க வேண்டும் என்று இல்லை. 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பெற்ற தோல்வியை விட ஒரு பெரிய, கொடுமையான, அவமானகரமான தோல்வி இனி வரப்போவதில்லை. எனவே கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியல் எனப்படுவது வெற்றியின் அரசியல் அல்ல. சிறிய வெற்றிகள் சில குறிப்பிட்ட செல்லக்கூடிய மக்கள் எழுச்சிகள் என்பவற்றிற்கும் அப்பால் தொடர்ச்சியான வெற்றிகள் அல்ல. அதாவது தமிழ் அரசியலை ஒரு புதிய கட்டத்திற்கு திருப்பக்கூடிய வெற்றிகள் அல்ல.எனவே தோல்வியைக் காட்டி பயமுறுத்தும் அரசியல்வாதிகள் தாங்கள் ஏற்கனவே தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை மறைகிறார்களா ?
கடந்த 15 ஆண்டுகால தோல்விகரமான அரசியல் பாதையில் இருந்து தமிழ் அரசியலை திருப்பகரமான விதத்தில் தடம் மாற்ற ஒரு பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. அதில் தோற்கலாம் வெல்லலாம். ஆனால் அது பரிசோதனை. இப்போது இருக்கும் தோல்விகரமான பாதையில் இருந்து தமிழரசியலை திசை மாற்ற முயற்சிக்கும் ஒரு பரிசோதனை. எனவே தோல்வியைக் குறித்து அச்சப்படுவோர் அல்லது தோல்வியை காட்டிப் பயமுறுத்துவோர், தாங்கள் ரகசியமாக டீல் செய்ய முயற்சிக்கும் அரசியல்வாதியின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா? அல்லது தமிழ் மக்களின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா?
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெல்லப் போவதில்லை. அவர் ஜனாதிபதியாக வரப்போவதும் இல்லை. ஆனால் அவர் தென்னிலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவார். அதைவிட முக்கியமாக, தமிழ்ப் பொது நிலைப்பாடு ஒன்றை நோக்கி தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவார். தமிழ் அரசியலை கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்து ஒரு பொதுகட்டமைப்பின் மூலம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு கூர்ப்படைய வைக்கத் தேவையான ஒரு பொதுத் தளத்தை அவர் பலப்படுத்துவார். அதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு களமாக பயன்படுத்தப்படுகின்றது என்பதுதான் இங்கு முக்கியம். தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் தேசிய ஐக்கியத்தை பலப்படுத்தும் ஒரு பரிசோதனை. அதில் எத்தனை முறை தோற்றாலும் அதைவிட வேறு வழி தமிழ் மக்களுக்கு இல்லை.
இரண்டாவது, பொது வேட்பாளர் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத அலையைத் தோற்றுவிப்பார் என்பது. அப்படியென்றால் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத அரசியல் இப்பொழுது இல்லையா? ஆயின் மயிலத்த மடுவில் மேச்சல் தரையை பறிப்பது யார்? குருந்தூர் மலையில், வெடுக்கு நாறி மலையில் தமிழ் மரபுரிமைச் சின்னங்களைக் கைப்பற்ற முயல்வது யார்? இன ஒடுக்குமுறை இப்பொழுது இல்லை என்று கூறும் அனைவருமே அந்த ஒடுக்குமுறையை மறைமுகமாக நியாயப்படுத்துகிறார்கள்.
மூன்றாவது காரணம், தமிழ்ப் பொது வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்காவின் கருவி என்பது. ஏனென்றால் அவர் சஜித் பிரேமதாசாவுக்கு சில தமிழ் அரசியல்வாதிகளால் திருப்பப்படும் தமிழ் வாக்குகளை அவர் தடுப்பார். அதனால் சஜித்தின் வெற்றி வாய்ப்புக்கள் மேலும் குறையும். அது ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்று ஓர் அச்சம். அதாவது, ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு செல்லக்கூடிய வாக்குகளை தமிழ் வேட்பாளர் கவர்வதன் மூலம் மற்றொரு சிங்கள வேட்பாளர் வெல்வதற்கு மறைமுகமாக உதவுவார் என்று ஒரு சந்தேகம் முன்வைக்கப்படுகிறது.
அவ்வாறு சந்தேகிப்பவர்களுக்கு ஒரு பதில் உண்டு. தென்னிலங்கையில் உள்ள வேட்பாளர்கள் யாரோடும் பொது வேட்பாளர் பேச்சுவார்த்தைக்கு போகத் தயார் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு தெனிலங்கை வேட்பாளர்கள் இனப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதனை பகிரங்கமாக முதலில் கூற வேண்டும். அதன்பின் அதனை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களாக இருந்தால்,அது தொடர்பான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை மூன்றாவது தரப்பின் கண்காணிப்பின் கீழ் செய்யப்பட வேண்டும். அதற்குத் தயாரான தென்னிலங்கை வேட்பாளரோடு தமிழ்ப்பொது வேட்பாளர் பேச்சுவார்த்தை நடத்தலாம். அதாவது தமிழ்ப் பொது வேட்பாளரின் வருகையால் தோற்கப் போகிறேன் என்று அஞ்சும் அரசியல்வாதிகள் தமிழ் மக்களோடு உடன்பாட்டுக்கு வரத் தயாரா? அதுவும் மூன்றாவது தரப்பின் கண்காணிப்போடு? அந்த அரசியல் வாதிக்குத் தமிழ் வாக்குகளைத் திருப்பிவிட முயல்பவர்கள் அந்த அரசியல்வாதியிடம் இதுபற்றி எடுத்துரைப்பார்களா?
இல்லை. யாருமே தயாரில்லை. சில அரசியல் தலைவர்களோடு தனிப்பட்ட டீலுக்கு போகத்தான் சிலர் தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்களோடு உடன்பாட்டுக்கு வரும் ஒருவர் தமிழ் மக்களின் ஒரு தொகுதி வாக்கைப் பெறலாம். ஆனால் சிங்கள பௌத்த வாக்குகளை இழந்து விடுவார் என்பதுதான் இலங்கைத்தீவின் இன யதார்த்தம். இனவாதம் இனிமேல்தான் தூண்டி விடப்படப் போகிறது என்று கூறுபவர்களுக்கு இது சமர்ப்பணம்.
தேசியவாத அரசியல் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை ஆகப்பெரிய திரளாகக் கூட்டிக் கட்டுவதுதான். தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கூட்டிக் கட்டுவதை; தமிழ்த் தேசிய ஐக்கியத்தைப் பலப்படுத்துவதை; தென்னிலங்கை வேட்பாளர்களுக்குவெற்றுக் காசோலையாகப் போகும் தமிழ் வாக்குகளை அவற்றின் கேந்திர முக்கியத்துவத்துவதையுணர்ந்து, புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதை எதிர்க்கும் ஒவ்வொருவரும், தமிழ்மக்கள் சிதறிப்போவதை ஆதரிக்கிறார்கள். அல்லது தமிழ்மக்கள் தொடர்ந்தும் தோற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களா?