ஒட்டாவாவில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தெரிவிப்பு
“எமது ஆளும் லிபரல் அரசாங்கமும் அதன்பிரதமர் அவர்களும் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கிக்கொண்டிருப்பதை கனடிய தமிழர் எவரும் மறந்து விடமாட்டார்கள். எனவே எமது பிரதமர் அவர்களுக்கு கனடா வாழ் தமிழ் மக்கள் எந்த இடத்திலும் தொடர்ச்சியாக நன்றி தெரிவித்து வருகின்றார்கள். எனவே நாம் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி குற்றமிழைத்த இலங்கை அரசிற்கு உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்கவோ அன்றி அவர்களிடமிருந்து ஒரு பொறுப்பு கூறும் அறிக்கையோ பெற்றுவிட விடா முயற்சியோடு செயற்பட வேண்டும்”
இவ்வாறு கடந்த 7ம் திகதி செவ்வாய்க்கிழமை கனடா ஒட்டாவா பாராளுமன்றத்தில் தமிழ் பேசும் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களினாலும் கியுபெக் தமிழ்ச் சன சமூக நிலையத்தின் சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழினப் படுகொலை நினைவு தின வைபவத்தில் சிறப்புரையாற்றிய ஸ்காபுறோ ரூஜ்பார்க் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தெரிவித்தார்.
கியுபெக் தமிழ்ச் சனசமூக நிலையத்தின் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ரொறன்ரோ மாநகரிலிருந்தும் பல அன்பர்கள் கலந்து கொண்டனர்.
அன்றைய தினம் அனைத்து கட்சிகள் சார்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் உருக்கத்தோடு அங்கு கலந்து கொண்டு இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளின் போது உயிரிழந்தவர்களுக்கு தங்கள் அஞ்சலிகளை செலுத்தினர்.
ஆளும் லிபரல் அரசாங்கம் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஏற்றுக்கொண்டு அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனைத்துக் கட்சிகளினது ஆதரவோடு அதை நிறைவேற்றி இரண்டாவது ஆண்டாகின்றது. இதையொட்டி இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கனடிய மத்திய அமைச்சர்களில் ஒருவரும் சர்வதேச வர்த்தக அபிவிருத்தி அமைச்சருமான மேரி இங் மற்றும் கனடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் Melanie Joly ஆகியோரும் கலந்து கொண்டு இனப்படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களுக்கு தங்கள் அஞ்சலியைத் தெரிவித்தனர்.