முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியும் கொழும்பில் அரச பயங்கரசவாதிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டவருமான மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் புதல்வி பிரவீனா ரவிராஜ் கடந்த 03/05/2024 அன்று கொழும்பு உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார். கொழும்பு பிஷப் பெண்கள் கல்லூரியில் (Bishop’s College) கல்விபயின்ற அவர் உயர் கல்வித்துறையாக சட்டத்த்துறையை தேர்ந்தெடுத்திருந்தார்.
கல்லூரியின் டெனிஸ் அணியில் இடம்பெற்றிருந்த அவர் சிறந்த டெனிஸ் வீராங்கனையாகவும் செயற்றிறன் மிக்க மாணவத் தலைவியாகவும் தன்னை அடையாளப்படுத்தியிருந்தார். இவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதனின் துணைவியாவார்.
மாமனிதர் நடராஜா ரவிராஜ் யாழ் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராவார். மும்மொழிகளிலும் ஆளுமை உள்ள அவர், சிங்கள மக்களுக்கும் உலகுக்கும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை உரக்க சொன்னவர். தமிழ்த் தேசியத்தின் பால் உயர்ந்த பற்று உறுதி கொண்ட அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் தனது சட்டப் புலமையை தமிழ் தேசியத்திற்காகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காகவும், அர்ப்பணிப்போடு பயன்படுத்தியிருந்தார். அவர் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி அரசு படைகளால் தலைநகரில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார். தமிழ் மக்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழமான அன்பையும், தனநலமற்ற உறுதியான செயற்பாடுகளையும் கௌரவிக்கும் வகையில் அவருக்கு தேசிய தலைவர், மாமனிதர் என்ற உயரிய கௌரவத்தை வழங்கியிருந்தார்.
தந்தையைப் போலவே பிரவீனா ரவிராஜும் மும்மொழிகளிலும் ஆளுமை மிக்க ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது