கனடாவில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி கவலை தெரிவிப்பு
எங்கள் மத்தியில் வாழ்ந்த அல்லது வாழ்ந்து மடிந்த தமிழ் அரசியல்வாதிகளில்அரசியல் நேர்மை மிக்கவராகவும் மூளை முழுவதும் தமிழ் மக்கள் தொடர்பானதும் தமிழ் மொழி தொடர்பானதுமான தகவல்களை நிறைத்து வைத்திருந்த அமரர் ஈழவேந்தன் அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் எமது அடுத்த தலைமுறைக்கு கடத்த நாம் தவறிவிட்டோம்.”
இவ்வாறு கடந்த 4ம் திகதி கனடாவில் நடைபெற்ற அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி கவலைடன் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
“மிகவும் துல்லியமான நினைவாற்றலும் நேர்மையும் கொண்டவராக விளங்கிய அவரை நான் பல தடவைகள் கனடிய அரசியல்வாதிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து அதனால் எனக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இவ்வாறான ஒரு ஆற்றலும் ஆங்கில அறிவும் மிகுந்த அரசியல்வாதி ஒருவர் உங்கள் மத்தியில் வாழ்வது உங்கள் இனத்திற்கு ஒரு பலம் என்று அந்த கனடிய அரசியல்வாதிகள் தெரிவித்தார்கள்.
மறைந்த ஈழவேந்தன் அவர்கள் தனது உடலை விட்டு உயிர்பிரியும் வரையும் தமிழ் மொழிக்காகவும் தமிழினத்திற்காகவுமே வாழ்ந்தார் என்பது உண்மையே”
என்றார் எம்பிபி லோகன் கணபதி அவர்கள்.
அங்கு பலர் உரையாற்றினார்கள். திருமதி (டாக்டர்) லோகன் கணபதி மற்றும் ‘உலகத் தமிழர்’ பத்திரிகையின் ஆசிரியர் கமல் நவரட்ணம் உட்பட பல முக்கிய பிரமுகர்களின் அஞ்சலி உரைகள் அங்கு இடம்பெற்றன.