ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஒத்துடைப்புடன் எமது மாகாண அரசின் உறுப்பினரும் மாகாண போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்களின் முயற்சியினால் மேற்படி சட்ட மூலம் ஒன்றாரியோ பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அனைத்துக் கட்சிகளும் இதற்க ஆதரவு வழங்கியிருந்தன.
இந்த ஆண்டுடன், அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டத்துக்கான ‘சட்டமூலம்-104’ வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் தேதியில் முடிவடையுமாறு ஏழு நாட்களை உள்ளடக்கியதாக ‘தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்’ (மே 12 – 18) கடைப்பிடிக்கப்படுவதை சட்டமூலம்-104 உறுதிசெய்கிறது.
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நடத்தப்பட்டதென்பதைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் சர்வதேச நாடுகளில் முதன்மையானதாக கனடா நாட்டின்
ஒன்ராறியோ மாகாணம் திகழ்கிறது. இச்சட்ட நிறைவேற்றமானது ஒன்ராறியோவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
15 ஆண்டுகளுக்கு முன்பு, மே 2009இல், முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் மறுக்கப்பட்டு, சட்டத்திற்கு புறம்பான கொலைகள், கற்பழிப்புகள், போர் தவிர்ப்பு வலயங்கள் தொடர்பான விதிமீறல்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான இலக்கு வைக்கப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழ் மக்கள் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்ட்னர்.
குறுகிய காலப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் இழந்த 1,46,679 க்கும் அதிகமான உயிர்களை எங்களால் மீட்டெடுக்க முடியாது என்றாலும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் வலியையும் அவர்களது குடும்பம் மற்றும் நண்பர்களின் இழப்பையும் ஒப்புக்கொள்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் சிறு மாற்றத்தையேனும் ஏற்படுத்த முடியும்.
ஒன்ராறியோவிலுள்ள பின்வரும் கல்விச் சபைகள் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அங்கீகரித்துள்ளன:
Toronto District School Board (TDSB)
Toronto Catholic District School Board (TCDSB)
York Region District School Board (YRDSB)
Peel District School Board (PDSB)
Durham District School Board (DDSB)
இந்த மாதம் முழுவதும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள், தலைமுறை தலைமுறையாக தங்கள் இனம் அனுபவித்த வேதனைகளையும் தமக்கு ஏற்பட்ட தாக்கங்கள் பற்றிய கதைகளையும் உணர்வுபூர்வமாகப் பகிர்ந்து கொள்வர். அதிலும் குறிப்பாக, ஒன்ராறியோவின் பல பகுதிகளிலுமுள்ள கல்விச் சபைகளில் கற்கும் மாணவர்கள் தமிழர்கள் எதிர்கொண்டுவரும் இன அழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு பற்றி அறிந்துகொள்வர். அதேவேளை, பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலைகளை அணுகி இச்செயற்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
எனவே, இவ்வாரத்துக்கான செயற்பாடுகளை உற்றுநோக்கும்போது, தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம், தமிழ்ச் சமூகத்தின் காயங்களை ஆற்றும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.