(இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்) பகுதி-5
சிவா பரமேஸ்வரன்… மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
எனது ஊடக வாழ்க்கையில் பல பிரபலங்களுடன் ஆழமாக உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அது என்னவோ தெரியவில்லை, இயற்கையாகவே அந்த பிரபலத்தை ஒரு நேர்க்காணலுக்கு இணங்க வைக்கக்கூடிய ஒரு வாய்ஜாலம் எனக்கு உள்ளது என்று என்னை விமர்சனம் செய்பவர்கள் கூட கூறுவார்கள்.
அவ்வகையில் பல பிரபலங்களுடனான உரையாடல் தொழில்முறை ரீதியாக, ஊடகப்பணிக்கென்ற வறையரைக்குள்ள மட்டுமே இருக்கும், சில பேட்டிகள் அதையும் கடந்து தனிப்பட்ட முறையில் ஆத்மதிருபதியும், சந்தோஷத்தையும், என்றும் நிலைத்திருக்கக்கூடிய பசுமையான நினைவுகளையும் அளிக்கும். அதற்கு காரணம் அந்த நபர்களுடைய ஆளுமை, அவர்கள் சொல்லும் செய்தி, அது சமூகம் மற்றும் தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகிவையும் அதற்கு முக்கிய காரணிகளாக இருக்கலாம்.
அப்படியான ஒரு பேட்டி தான் சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க பேராயர் கலாநிதி டெஸ்மண்ட் டூட்டூ அவர்களுடையது,
அவரது ஆளுமை நெல்சன் மண்டேலாவின் ஆளுமைக்கு ஒப்பானது. சிலரோ பேராயரின் ஆளுமை மண்டேலாவின் ஆளுமையைவிட அதிகம் என்றும் கூற நான் கேள்விப்பட்டுள்ளேன். அவர் பொதுவாக ஊடகங்களிடம் பேசுவதிலை, ஏனென்றால் அப்படியான புகழ் வெளிச்சம் அவருக்கு தேவையில்லை. அரிதாக அவர் சில கருத்துக்களை சொல்வார். அவை மிகவும் ஆழம் பொதிந்ததாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.
சரி இந்த பீடிகை எதற்கு. காலஞ்சென்ற பேராயர் டூட்டூவை இப்போது ஏன் இந்த எழுத்தாளர் நினைவுகூர்கிறார் என்ற ஐயப்பாடு தோன்றுவது இயற்கையானது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இலங்கையில் இறுதிகட்டப் போர் உச்சநிலையில் இருந்த போது, போர் நிறுத்தப்பட்டு இருதரப்பும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று குரல்கொடுத்தவர்களில் பேராயரும் ஒருவர்.
உயிர் என்பது இறைவனின் பெருங்கொடை. அதை பறிக்க யாருக்கும் உரிமையில்லை என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர். இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மோசமான வன்செயல்கள், பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து அவர் ஆழ்ந்த கவலை கொண்டிருந்தார். போர் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் அதற்கு தென் ஆப்ரிக்க அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறித்து வந்தார். அதன் காரணமாக தென் ஆப்ரிக்க அரசு இலங்கை விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியது என்று கூட சொல்லலாம்.
அவ்வகையில் இலங்கையில் இரத்தக்களறியுடன் போர் முடிந்த நிலையில், பன்னாட்டளவில் ‘தி எல்டர்ஸ்’ அதாவது மூத்தோர் என்ற அமைப்பின் தலைவராக இருந்த பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ அறிக்கை ஒன்றி வெளியிடுவார் என்ற செய்தி ஒன்று கசிந்தது. அது அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகக் கூடும் என்று கூறப்பட்டது. உடனடியாக மனதிற்குள் இருந்த செய்தி தேடலுக்கான அந்த உந்துதல் விழித்துக்கொண்டது.
நாம் ஏன் அதிகாரபூர்வமாக அந்த அறிக்கை வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும். அப்படி ஒரு அறிக்கை வெளிவந்த பிறகு அதை நாமும் செய்தியாக போடுவதில் என்ன சிறப்பு இருக்கப் போகிறது. நாமே அந்த செய்திக்கான மூலமாக இருக்கக்கூடாது என்ற எண்ணம் எழுந்தது. அதேவேளை வெறும் எண்ணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்ற கவலையும் இருந்தது.
ஆசை இருக்கு ஆட்சி செய்ய ஆனால் அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்ற நினைவும் எனக்குள் வந்து சென்றது.
முதலில் அவரை தொடர்புகொள்ள வேண்டும். அவர் எங்கு இருக்கிறார்-லண்டனிலா அல்லது ஜொஹனஸ்பர்க்கிலா அல்லது உலகின் வேறு ஏதாவது பகுதியிலா? அதை தேடி கண்டுபிடிப்பதற்கே ஒரு நாளாகிவிடும். பிறகு அவரிடம் பேச வேண்டும். பேச வேண்டும் என்றால்-அவர் என்னுடன் பேச வேண்டுமே. சரி, பேராயர் இருக்கும் இடத்தை அறிந்தாலும் அவரிடம் நமது தேவையை எடுத்துச் சொல்லி பேட்டிக்கு நேரம் கேட்க வேண்டும். அவர் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு உரையாட ஒப்புக்கொள்ள வேண்டும். நேரில் வாருங்கள் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது. இப்படி ஒன்று இரண்டல்ல பல கேள்விகள்.
இதனிடையே 19 மே 2009 அன்று மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்ற தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த இரண்டு நாட்கள் போலவே அன்று விரைவாக அலுவலகம் சென்றேன். வழக்கம் போன்று “மணியான தலைவர்” உட்பட ’மூத்த செய்தியாளர்கள்’ அந்த சமயத்தில் வந்திருக்கவில்லை. சகோதர சேவையான சிங்கள மொழி ஒலிபரப்பான சந்தேஷ்யவில் தமிழர்கள் மீது பற்றுகொண்டிருந்த தயாரிப்பாளர் வந்திருந்தார். நாங்கள் இருவரும் தேநீர் தயாரித்துக்கொண்டு எமது இருக்கைகளில் வந்து அமர்ந்து, மஹிந்த என்ன பேசுகிறார் என்பதை கவனிக்க ஆரம்பித்தோம்.
”விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் தமிழர்களுக்கு எதிரான யுத்தம் அல்ல. எமது நோக்கமானது தமிழ் மக்களை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதேயாகும். தமிழ் மக்களை பாதுகாக்க வீரதீரமான எமது படைகள் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களை பாதுகாப்பு எனது பொறுப்பாகும். அது எனது கடமையும் கூட. இந்த நாட்டிலுள்ள அனைவரும் பாதுகாப்பாக அச்சம் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி வாழ வேண்டும். அனைவரும் சமமான உரிமைகளுடன் வாழ வேண்டும். அதுவே எனது இலட்சியம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்”.
மஹிந்த தனது நாடாளுமன்ற உரையின் முதல் பத்தியை வாசித்து முடித்த பிறகு நானும் சந்தேஷ்யவிலிருந்து எனது நண்பரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இருவர் மனதிலும் ஒரே மாதிரியான எண்ணம் எழுந்தது.
“மச்சான் என்ன ஆச்சு மஹிந்தவிற்கு. தமிழர்கள் மீது திடீரென்று பற்றும் பாசமும்”?
தமிழ் மக்கள் மீது அவருக்கு இந்தளவிற்கு பற்றும் பாசமும் இருந்தால், ஒரு கட்டத்தில் போரை நிறுத்தி, உயிரிழப்புகளை தடுத்திருக்கலாமே, சம உரிமை பற்றும் பேசும் அவர் அதை அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தால் கூட போர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பித்து ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கலாமே, போர் முடிந்த பிறகு முதலைக் கண்ணீர் வடிக்கிறாரே என்று நான் கேட்க, எதிர் மேசையில் இருந்த நண்பரோ, “மச்சான் இது சும்மா சரவ்தேச சமூகத்திற்கு பேக்காட்டுவதற்கான ஆடும் நாடகம்” என்று கூறியதோடு மட்டுமில்லாமால், “மச்சான் நீ சும்மா மஹிந்தவுக்கு ஒரு அழைப்பெடுத்து பேசு” என்று என்னை கிண்டல் செய்துவிட்டு மேலும் அவர் பேசுவதை அவதானிப்பதை தொடர்ந்தோம்.
”நீங்கள் அனைவரும் அறிந்துள்ளபடி எமது தாய் நாடு பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது. இப்போது முதல் இந்த நாட்டில் இறையாண்மை கொண்ட நாடாளுமன்றம் இயற்றும் சட்டம் மட்டுமே நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நடைமுறையில் இருக்கும்” என்று முழங்கினார்.
அத்தோடு நிறுத்தாமல் “இந்த நாட்டில் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகளாக, இன, மத, சாதி பாகுபாடின்றி வாழ வேண்டும். நமது நாட்டின் விடுதலையே அனைத்திலும் முக்கியமானது. நான் ஒரு போதும் பிரிவினை வாதத்தை அனுமதிக்கமாட்டேன், நாட்டில் ஜனநாயகத்தை அழிக்க ஒருவரையும் அனுமதிக்க மாட்டேன். அனைத்து இன, மத அடையாளங்களை நான் மதிப்பேன், யார் மீதும் பலப்பிரயோகம் செய்யப்போவதில்லை, அனைவரையும் உள்ளடக்கி ஒரு புதிய சமுதாயத்தை கட்டியெழுப்பி அனைவரின் சமூக உரிமைகளையும் பாதுகாப்பேன், அதுவே எனது மஹிந்த சிந்தனையின் நோக்கமாகும்”
“மச்சான் எப்படி மஹிந்த நடிப்பு. எங்கட மஹிந்த முன்னால் உங்கட சிவாஜி எல்லாம் ஒன்றும் இல்லை” என்று சந்தேஷ்ய நண்பர் கூறிவிட்டு, தமிழர்களும் மஹிந்தவும் ஒரே மாதிரியே சந்திக்கின்றனர் என்றார்.
”உனக்கு என்ன விசர் பிடித்திருக்கா?” என்று நான் கூற அவரோ அமைதியாக
“பொறு மச்சான். மஹிந்த என்ன சொல்கிறார். நாட்டின் விடுதலையே அனைத்திலும் முக்கியமானது. அதைத் தானே தமிழ் மக்களும் சொல்கிறார்கள்” என்றார்.
இதனிடையே அன்று மதியம் மற்றும் மாலை நேர பிபிசியின் உலக தொலைக்காட்சி ஒலிபரப்பில் பங்கேற்க மத்திய செய்தியறையிலிருந்து அழைப்பும் வந்தது. போர் முடிந்துவிட்டதாக மஹிந்த நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அடுத்து நாட்டில் என்ன, இந்தியா இந்த விடயத்தை எப்படிப் பார்க்கும், உலகெங்கும் பரந்துவிரிந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் எண்ணம் என்ன? மஹிந்த இன்றைய உரையில் கூறியதை நடைமுறைபடுத்துவாரா போன்ற பல விஷயங்களை விவாதிக்கலாம் என்று கூறினர். சரி என்று கூறிவிட்டு மற்ற செய்திகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம்.
இதனிடையே வன்னியில் தொடர்ந்து ஆங்காங்கே குண்டுச் சத்தம் கேட்பதாகவும் தகவல் வந்தது. போரின் கொடூரம் காரணமாகவும், வகைதொகையின்றி நிலம் மற்றும் வான்வழி தாக்குதலில் காயமடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் வட்டுவாகல் பாலத்தை கடந்து வந்தவண்ணம் இருந்தனர். சிறு பிள்ளைகளை இடுப்பிலும், கைகளிலும், தலையிலும் அமர வைத்துக்கொண்டு, மாற்று உடுப்புக்கூட வழியில்லாமல் ஒரு சிறு பையில் இருந்ததை அள்ளிப்போட்டுக்கொண்டு, இளைஞர்கள், யுவதிகள், வயதானவர்கள், தள்ளாடியேனும் நடக்க முடிந்தவர்கள், கணவரையும் மகனையும் பறிகொடுத்த மூதாட்டிகள் என மக்கள் வன்னி பெருநிலப்பரப்பை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் பேசுவதற்கு கூட மனது இடம்கொடுக்கவில்லை.
நாடு முழுவதும் விடுவிக்கப்பட்டுவிட்டது என்று மஹிந்த நாடாளுமன்றத்தில் முழங்கினாலும், தமிழ் மக்களுக்கு அந்த விடுதலை என்பது சிந்தனையிலும் இல்லை. அவர்கள் நடைபிணமாக அடுத்து என்ன என்பது தெரியாமல் இலக்கற்ற பயணம் ஒன்றை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்.
அவர்களின் சுமை தாங்காமல் வட்டுவாகல் பாலம் திணறிக் கொண்டிருந்தது. ஷெல் தாக்குதல், துப்பாக்கிச் சூடு, எறிகணை வீச்சு, கொத்தணி குண்டுகள் ஆகியவற்றிலிருந்து தப்பித்தவர்கள் அல்லது குற்றுயிரும் கொலையுருமாக இருந்தவர்கள் அந்த பாலத்தின் மீது நடந்து வரும் போது, பாலம் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்து அந்த மக்களும் நந்திக்கடல் ஏரியில் விழுந்துவிடுவார்களோ என்ன அச்சமும் மேலோங்கிக் கொண்டிருந்தது.
இதனிடையே ஓரிருவருடன் பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்ததாக எமது வடக்கு இலங்கைச் செய்தியாளர் மாணிக்கவாசகம் கூறினார். அவர் கூறிய பல விஷயங்கள் நெஞ்சை உலுக்குவதாகவும், கேட்டாலே மரண பயத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருந்தன.
“ஐயா, இந்த மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே செத்திருக்கலாம். அதில் அவர்களுக்கு ஒரு நிம்மதியாவது இருந்திருக்கும். இறந்த தமது உறவினர்கள், உடமைகள், ரத்தம் தோய்ந்த நினைவுகள் ஆகியவற்றை பின்னுக்கு விட்டு, உடலில் உயிரின்றி இந்தப் பகுதிக்கு வருகிறார்கள். சிலர் அங்கிருந்து ரத்தம் தோய்ந்த ஒரு பிடி மண்ணை தமது பைகளில் எடுத்து வருகிறார்கள்”
சிவந்த மண்ணாகிப் போன முள்ளிவாய்க்காலை விட்டு, இலக்கற்ற ஒரு பயணத்தை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
சரி பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ என்ன சொன்னார்………. அடுத்த வாரம்…….
தொடரும்….