பொது வேட்பாளர் விடயம் என்பது தமிழ் மக்களுக்கு பயனற்ற விடயம். அதை முன்னெடுப்பது தோல்வியிலேயே முடியும் என மக்கள் வெளிப்படையாக கூறத்தொடங்கியுள்ளதானது தமிழ் மக்கள் தம்மை பீடித்திருந்த போலித் தேசியம் என்ற மாயை அரசியலிலிருந்து படிப்படியாக வெளிச்சத்தக்கு வருவதை உணர்த்துகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடைமுறைச் சாத்தியமான எமது கட்சியின் வழிமுறையுடன் மக்கள் கைகோர்ப்பார்களானால் விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் என்னால் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் தென்மராட்சி பிரதேசத்தை உள்ளடக்கிய கட்சியின் பொறுப்பாளர்கள் வட்டார செயலாளர்கள் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு 11-05-2024 அன்று சாவகச்சேரியில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைமுறைச் சாத்தியமான வழிகள் தொடர்பில் எமது கட்சி மட்டும் தெளிவாக இருக்கின்றது. ஆனால் இவ்விடயத்தில் எமது கட்சி இருப்பதை விட மக்களும் தெளிவாக இருக்க வேண்டும்.
குறிப்பாக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமராச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகிய மூன்று வேட்பாளர்கள் பிரதானமானவர்களாக காணப்படுகின்றார்கள்.
இந்த மூவரில் ஒருவருடன் கலந்துரையாடி எமது வாக்குகளை உங்களுக்குத் தலராம் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற பேரம்பேசலைச் செய்து கலந்துரையாடினால்தான் ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகும் ஆனாலும் தற்போதைய நிலையில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வருவதே சரியானதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
அதனால்தான் எமது கட்சியின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கதான் என்பதை நாம் எற்கனவே வெளிப்படையாக அறிவித்தவிட்டோம். அதுமட்டுமல்லாது தற்போதைய காலச் சூழலில் தென்னிலங்கையில் போட்டியிடும் ஒரு தரப்பினருடன் இணக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆதரவு வழங்கி அதனூடாக பேரம் பேசும் சக்தியாக நாம் உருவாகும் நிலையை உருவாக்குவதே அவசியமாகும்.
கடந்தகாலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தமிழ் தரப்பினர் சரியான முறையில் கையாளாத காரணத்தினால் தான் தமிழ் மக்கள் தற்போதைய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
37 வருடங்களாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம், மாகாணசபை முறைமையை ஆரம்பித்ததனூடாகத்தான் தமிழர்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என நான் சொல்லி வருகின்றேன்.
ஆனாலும் அதனை “செவிடன் காதில் ஊதிய சங்கு” போல் யாரும் புரிந்துகொண்டிருக்கவில்லை. ஆனால் தற்போது அதுபற்றி பலரும் முணு முணுக்கின்றார்கள். இது ஆரோக்கியமானதாக இருந்தாலும். அன்று அதை எதிர்க்கும்போதும், இன்று அதனை ஆதரிக்கும்போதும் உண்மைத் தன்மையுடன் தமழ் தரப்பினர் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. இதேநேரம் இதய சுத்தியுடன் கூடிய உண்மைத்தன்மையாக முன்வருவார்களேயானால் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.
மேலும் புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா என பார்த்தால் கடந்த கால தமிழ் அரசியல்வாதிகள் மருந்துக்குத்தான் வலி என்ற நிலையிலிருந்தே அரசியலை முன்னெடுத்திருந்தனர். அது என்ன நிலமையில் மக்களைக் கொண்டு விட்டுள்ளது என்பதை இன்று உணர முடியும்.
எனவே புண்ணுக்குத்தான் வலி என்பதையும், இதனை தமிழ் மக்களும் சரிவர உணர்ந்து யார் தமது பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கின்றார்களோ அவர்களோடு அணிதிரள்வதுதான் சரியானது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.