எழுத்தில் வடித்ததுபோல் இலகுவாய் இருக்கவில்லை
நினைத்தவுடன் வெளிக்கிட்டுப் போவதற்கு – அன்று
புலிகளின் நிர்வாகம் வலுவாக இருந்ததால் – அவர்கள்
அனுமதி தந்தாலே முடியுமாய் இருந்தது – வெளிப்பயணம்
முன்னர் போயறியா முல்லைத்தீவு அங்குதான் – பெரிய
நிர்வாக அலுவல்கள் எல்லாமே நடந்தன
ஓங்கி உயர்ந்த பெருமரங்கள் வழிநெடுக
பாங்காய் வளர்ந்து வரவேற்க உட்புகுந்தோம் – அங்கே
தென்னோலையால் வேயப்பட்ட குளிர்ந்த நல்ல
தண்மையான கொட்டில்கள் மக்களின் தேவைக்காய்
அதிகாலை ஆனாலும் அதிக சனம்- அங்கிருந்து
கெதியாகத் திருபுவது கடினமெனப் புரிந்தாலும்
பொறுமையுடன் நிற்கவே எங்கள் தவணைவர – அனுமதிக்கு
பொறுப்பானவர் கேட்டுக்கொண்டார் தேவையான தகவல்களை
வீட்டுக்கு ஒருவர் என்பது விவாதப் பொருளாக – வந்து
மாட்டுப்பட்டேனோ என்றதாயும் ஒரு ஏக்கம்
கொஞ்சம் விட்டுக்கொடுக்காத விவாதங்கள் வீறுபெற
அங்கும் வந்துநின்றது நட்புத்தான் தானாக,
பொருளியல் துறையில் சிறப்பான படிப்புக்காய் – ஒரு
குறுகிய காலம் இணைந்தவேளை நல்லஜீவனாய்
மக்றோவும் மாக்றோவும் தெளியவைத்த அச்சீவன் – இது
எத்தகைய சிக்கலென அறிந்து கொண்டு -தன்
பக்கத்தே கூட வந்த நண்பனோடு ஏதோபேச – ஒரு
செக்கண் கூட சிந்திக்காது வைத்தாரவர் கையொப்பம்
பெரிதாக ஒருநாளும் கதைத்ததில்லை ஆனாலும்
சரியான தருணத்தில் அவர்செய்த உதவி
ஒருநாளும் மறப்பதற்கு முடியாத உதவியது
அதனோடு முடிக்கவில்லை அலுவலக நடைமுறைகள் – புகைப்பட
பிரதிகளும் வேணுமென கூறியது அலுவலகம்- மின்சார
வசதிகளே இருக்காத காலமது ஆனாலும்
டைனமோவில் இயங்கச்செய்யும் இயக்கிக்காய் – தம்
உடல் வலுவைக் கொடுத்து மின்வலுவை எடுக்கவும்
உதவியவர் இருவரதும் எதிர்பாரா உதவியால்
ஒருவிதமாய் அனுமதியும் கிடைத்திடவே
பெருமகிழ்வோடு நன்றியினைக் கூறிக்கொண்டு
மறுபடியும் அன்றே திரும்புகிறோம்
விசுவமடு வீடுநோக்கி……..
( தொடரும்)
உமா மோகன்