ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அண்மையில் அறிவித்துள்ளது. அதற்காக உண்மைக்கு மாறான பல செய்திகளையும் இட்டுக்கட்டி எடுத்துரைத்து தமது தவறான செயலுக்கு நியாயம் கற்பிக்கிறது மோடி அரசு. “2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பிறகும் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. அதற்கான ஆதரவு மற்றும் நிதித்திரட்டல் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது” என்று தடை நீட்டிப்பு ஆணையில் குறிப்பிடுகிற இந்திய ஒன்றிய அரசு, “விடுதலைப்புலிகளின் இயக்கம் தமிழ்நாட்டில் ரகசியமாக செயல்படுகிறது. அனைத்து தமிழர்களுக்குமான தனி நாடு என்ற கோரிக்கையில் இந்தியாவில் தமிழ்நாட்டையும் சேர்த்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு புலிகளின் இயக்கம் எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது” என்ற அபாண்டமான பொய் குற்றச்சாட்டையும் புலிகள் அமைப்பின் மீது சுமத்தியுள்ளது. ஈழத்தமிழ் மக்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, இனப்படுகொலை செய்த அநீதியை எதிர்த்து அறவழியிலும், அமைதி வழியிலும் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ மக்களின் பாதுகாப்பு அரணாகவே செயல்பட்டு வந்தது; வருகிறது.
இந்திய அரசு புலிகள் இயக்கத்தை வன்முறை அமைப்பாக சித்தரித்து தடை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் நான் வழக்காடியபோது, இதுகுறித்து பல்வேறு சான்றுகளுடன் விளக்கியுள்ளேன். இலங்கை அரசு, சீனா முதலான இந்தியாவின் பகை நாடுகளுடன் நெருங்கி உறவாடி, அந்நாடுகளிடம் பொருளாதார உதவி பெற்று, இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான தளங்களை அமைப்பதற்கும் துணையாக செயல்பட்டு வருகிறது என்பதை இந்திய அரசு எண்ணிப் பார்க்கவில்லை. ராஜீவ்காந்தி அவர்களின் கொலையை சுட்டிக்காட்டித்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். ஒரு சிலர் மறைந்துவிட்டார்கள். உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்கு புலனாய்வுக்குழு 20 ஆண்டுகாலமாக எவரையும் கைது செய்யாமல் காலம் கடத்தி இறுதியில் கலைக்கப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும். இந்திய அரசின் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.