(இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்) பகுதி-6
சிவா பரமேஸ்வரன் — மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று மகாகவி பாரதி ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே முழங்கினான்.
அது அறச்ச்சீற்றத்தின் கடுமையான ஒரு வெளிப்பாடு. ஒரு தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த உலகம் எதற்கு அவன் வினவியதில் நியாயம் இருந்தது. அந்த ஒரு வேளை உணவிற்காகவே அனைத்து மக்களும் தமது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் செலவிட்டவர்களுக்கு அந்த உணவு கிடைக்கவில்லை என்றால் இந்த உலகால் என்ன பயன் என்று வினவினான் பாரதி.
இன்று பாரதி இருந்திருந்தால், அந்த அறச்சீற்றம் பன்மடங்கு பெருகியிருக்கும். பேரினவாதத்தை தனது கவிதைகளால் சுட்டெரித்திருப்பான் அந்த முண்டாசு கவிஞர். பாரதி ஒரு பொதுவுடமைவாதி, தேசியவாதி என்றாலும் தமிழ் மீதும் தமிழனத்தின் மீதும் அளவுகடந்த பற்றுகொண்டிருந்தவர்.
பாஞ்சாலிக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்டு சீறியவன். சுற்றுச்சூழல் மீதிருந்த பற்றின் காரணமாகவே “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றான். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று கூறி சமூகப் பிளவுகளுக்கு எதிராக குரல் கொடுத்தான்.
இப்படியெல்லாம் சமூகத்தில் நிலவிய அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்த அந்த மகாகவி இன்று இருந்திருந்தால், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக எப்படியாக தீவிரமாக குரல் கொடுத்திருப்பான் என்ற எண்ண வைக்கிறது.
அவரது ஆருயிர் நண்பர் நீலகண்ட பிரம்மச்சாரி ஆங்கிலேயே ஆட்சியாளர் ஆஷ் துரையை வாஞ்சிநாதன் கொலை செய்த வழக்கில், குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு ஏழரை ஆண்டுகாலம் கடுஞ்சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பிறகு, சாப்பாட்டிற்கு வழியின்றி உதவிகேட்டு பாரதியை காண வருகிறார். நீண்ட காலத்திற்கு பிறகு நண்பன் நீலகண்டனை அடையாளம் கண்டுகொண்ட பாரதி தான் வறிய நிலையில் இருந்தாலும், அவருக்கு உணவளிக்கிறார். அப்போது பாரதியின் மனதில் உதித்தது தான் ”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்”.
மகாகவி பாரதி மறைந்து சுமார் 90 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் பேரவலம் ஒன்று அரங்கேறியது. ஒரு சிறிய நிலத்துண்டுப் பரப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியிருந்தனர் அல்லது திட்டமிட்டு வெளியேற முடியாத வகையில் சிக்கவைக்கப்பட்டனர். “நோ ஃபயர் சோன்” அல்லது யூத்த சூனிய பிரதேசம் என்று அரசால் அறிவிக்கப்பட்ட பகுதியிலேயே அதிகப்படியான தாக்குதல் இடம்பெற்றது. இதை நேரில் கண்ட சாட்சிகளும் பன்னாட்டு அமைப்புகளும் உறுதி செய்துள்ளன. ஒரு சிறிய பிரதேசத்தில் மக்களை சிக்கவைத்து, அல்லது ஓடவோ ஒளியவோ முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தி நிலம், நீர், ஆகாயம் என்று மும்மார்க்கமாகவும் அகோர தாக்குதல் நடைபெற்றது வரலாறு.
சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. அவலமும் அழுகையும் அன்றாட நிகழ்வுகளாயின. மருத்துவமனைகள், பாடசாலைகள், வழிபாட்டு தலங்கள் என்று எந்த இடமும் தப்பவில்லை. யார் எங்கிருந்தாலும் ஒரே நோக்கம் போட்டுத் தள்ளுவது தான் என்றிருந்தது.
திட்டமிட்ட ஒரு கடும் பொருளாதார நெருக்கடிக்குள் தமிழ் மக்கள் தள்ளப்பட்டனர் என்று உள்ளேயும் இருக்க முடியாமல், வெளியேயும் செல்ல முடியாமல் சிக்கித்தவித்த பலர் கூற நான் கேட்டுள்ளேன். முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் இருந்தனர். கடும் போர் நிலவிய பிரதேசமாக இருந்த அங்கு வெளியிலிருந்து எந்த உதவிகளும் சென்றுவிடக் கூடாது என்பதில் ராஜபக்சக்கள் உறுதியாக இருந்தனர். உணவு, மருந்து என்ற இரு முக்கியமான விஷயங்கள் போராயுதங்களாக பயன்படுத்தப்பட்டன.
போர்க்காலத்தில் வன்ன பிரதேசத்தில் , அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த மருத்துவர்கள், மருத்துவ உதவிப் பணியாளர்கள், அவசர மருத்துவ வாகனங்களை ஓட்டியவர்கள் என்று பலரை நேரில் சந்தித்துள்ளேன். அவர்கள் கூறிய விஷயங்களை கேட்பதற்கும், எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் உடலும் உள்ளமும் உறுதியாக இருக்க வேண்டும்.
வன்னிப் பிரதேசம் வளமான பூமி. இலங்கையில் நெல் விளைச்சல் பரந்துபட்ட அளவில் பெரியளவில் செய்யப்பட்ட இடம். நாடு முழுவதற்கும் நெல், அரிசி ஆகியவற்றை தங்குதடையின்றி அனுப்பிய மண். ஆனால், போர் அனைத்தையும் புரட்டிப் போட்டது. வளமான பூமி பயிர் சாகுடியின்றி எறிகணை தாக்குதல், துப்பாக்கிச் சூடு ஆகியவற்றால் வளம் நிறைந்த பூமி வறண்ட பூமியாக மாறியது. இதையடுத்து கடும் உணவுத்தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவானது.
இதை அப்போது ஆட்சியில் இருந்த அரச, அரசியல் தலைவர்களும், இராணுவ தளபதிகளும் சாதமாகப் பயன்படுத்திக்கொண்டனர். போர் பிரதேசத்தில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தி, மக்களை பசி மற்றும் பட்டினியில் தள்ளினால் அவர்கள் தாமாக அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வெளியேறு வருவார்கள், பின்னர் விடுதலைப் புலிகளை சுலபமாக வென்றுவிடலாம் என்று ஒரு கருத்துருவாக்கம் செய்யப்படுகிறது. அதன் முதற்கட்டமாகத்தான் போர் பிரதேசத்திலிருந்து பன்னாட்டு அமைப்புகள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டன. அவர்களின் உயிர்களுக்கு அரசு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறப்பட்டது. இதில் குறிப்பாக உலக உணவுத் திட்டம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க, ஐ நா அலுவலகங்கள் ஆகியவையே இலக்கு வைக்கப்பட்டன என்று அந்த அமைப்புகளில் அப்போது பணியாற்றியவர்கள் என்னிடம் கூறியிருந்தனர்.
அப்படியான ஒரு நெருக்கடியில் தான் திட உணவு கிடைக்காவிட்டாலும், திரவ உணவையாவது பருகி நொந்து, நைந்து நூலாக குற்றுயிரும் குலையுருமாக இருக்கும் உயிரை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற அவலம் உருவானது. பன்னாட்டு அமைப்புகள் தரப்பில் கையிலிருந்த உணவுப் பொருட்களில் ஒரு பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது, மற்ற பகுதி வலிந்து எடுத்துச் செல்லப்பட்டது.
அவ்வகையில் அந்த சொற்ப உணவுப் பொருட்கள் கிடைத்தவர்களுக்கு அன்றைக்கான உணவைவிட நாளைக்கான உணவை சேமிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. நாளொன்றுக்கு மூன்று வேளை உணவு என்பது போய் நீண்டகாலம் ஆன நிலையில் அது இரண்டாகி, பின்னர் அது ஒன்றாகி, அதையடுத்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறையேனும் உணவு என்ற பெயரில் உண்ண ஏதாவது கிடைத்தால் அதுவே இறையருள் என்று கூறப்படும் நிலை தோன்றியது.
இதையடுத்து தான் சோறு சமைப்பதைவிட அந்த அரிசியை கஞ்சியாகக் காய்ச்சி அருந்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். சோறு சமைத்தால் அதனுடன் உண்பதற்கு வேறு சில பதார்த்தங்கள் தேவைப்படும். பாலுக்கே வழியில்லாத நிலையில் பாயாசத்தை எப்படி சிந்திப்பது என்ற நிலை.
மக்களை நிலைகுலையச் செய்ய ஒரு போராயுதமாக உணவு விநியோகத் தடை கையாளப்பட்ட நிலையில், கிடைத்த அரிசியை கஞ்சியாகக் காய்ச்சி அதை ஒரு உயிர் காக்கும் உணவாக போர் பிரதேசத்தில் சிக்குண்டிருந்த தமிழர்கள் உட்கொண்டனர். ஆனாலும், அது அப்போதைக்கு வயிற்றை சற்றேனும் நிரப்பியது போலத் தோன்றினாலும், போதிய ஊட்டச்சத்து இல்லாததன் பாதிப்பு மக்களிடம் தெரிய ஆரம்பித்தது. உடல் ரீதியான வலுவை அவர் சிறுகச்சிறுக இழக்கத் தொடங்கினர். குண்டு வீச்சு மற்றும் துப்பாகிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் என்ற பெயரில் முதலுதவி மட்டுமே செய்ய முடிந்த நிலையில் அவர்கள் மீண்டெழுவதற்கு உடலில் போதிய வலு இருக்கவில்லை.
இருந்தாலும் அரசிக் கஞ்சியே பிரதான உணவாக இருந்தது. அந்த அரசிக் கஞ்சி கூட போரின் ஒரு சாட்சியாகவே இருந்தது. காய்ச்சிய கஞ்சியைக் குடிப்பதற்கு கூட பாத்திரங்கள் இருக்கவில்லை. இருந்தாலும் தேங்காய் ஓடுகள் கைகொடுத்தன. போர் வலையத்தில் சிக்கிய மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ கற்றுகொண்டிருந்தனர்.
அந்த எளிய கஞ்சி கூட அன்று அந்த மக்களுக்கு கிடைத்திருக்கவில்லையென்றால், போர் பிரதேசத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த தேங்காய ஓட்டில் குடிக்கப்பட்ட கஞ்சிக்கு இலங்கையில் போர் சரித்திரத்தில் ஒரு இடமுள்ளது என்பதை மறுக்க முடியாது.
ஆனால், இன்று கடந்தகால நினைவுகள், நிகழ்வுகளை அடுத்த தலைமுறையினருக்கு அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துச் சொல்வது என்னவோ தெய்வகுற்றம் அல்லது போர்க்குற்றம் போன்று பார்க்கப்படுகிறது. போரின் காயங்கள் மாறலாம் ஆனால் வடுக்கள் மாறாது என்பது புதிய கதையல்ல. ஒரு கோப்பை கஞ்சியைக் கூட தமது இன மக்களுக்கு தமிழர்களால் சுதந்திரமாக வழங்க முடியாது என்றால் அங்கு ஜனநாயகம் கேள்விக்குறியாகிறது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று தலைநகர் கொழும்பு எங்கும் கிரிபத் (பால் சோறு) வழங்கப்பட்டது. சிங்கள அமைப்புகள் தாமாக முன்வந்து போர் வெற்றியை கொண்டாடும் வகையில் பால் சோறு சமைத்து வீதியில் சென்றவர்களுக்கு எல்லாம் வழங்கினர். அந்த நேரத்தில் இந்த ஒரு கோப்பை கஞ்சிக்கு கூட வழியில்லாமல் பலர் உயிரிழந்தனர் என்பதை அவர் சிந்திக்க மறந்துவிடனர் அல்லது மறுத்துவிட்டனர்.
போர் வெற்றியை கொண்டாடும் வகையில் கிரிபத் வழங்குவதை நியாயப்படுத்த முடியுமென்றால், போரினால் பாதிக்கப்படவர்கள் உயிர் வாழ்வதற்கு அரிசி கஞ்சியே மூலாதாரமாக இருந்தது என்பதை அடுத்த தலைமுறையினருக்கு தெரியபப்டுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்?
இன்று அந்த நினைவுகளை எடுத்துச் செல்வதற்கு கூட ஆங்காங்கே நீதிமன்ற தடை உத்தரவுகள் பெறப்படுகின்றன. இப்படியான செயற்பாடுகள் சமூக நல்லிணக்கத்திற்கு எப்படி உதவும் என்று தென்னிலங்கையில் எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை-ஒரு சிலரைத் தவிர.
நல்லிணக்கம் என்பது ஏட்டுச்சுரக்காயாக இருந்தால் அது உதவாது. அது கறி சமைக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். ”நீத்தர் நினவு கூர்தல்” உலகெங்கும் பண்பாடு மற்றும் கலாச்சார ரீதியாக நிலவுகிறது. பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டு முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் நிகழ்வுகள் இடம்பெற்று அங்கு அரசர் முதல் சாமானியவர் வரை அஞ்சலி செலுத்துவது நடைபெறுகிறது. ஆனால் இலங்கையில் போரில் இறந்தவர்களை நினைவுகூர்வதில் ஏனிந்த தடை. விடுதலைப் புலிகள் முற்றாக அழித்தொழிக்கப்பட்டனர் என்று மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் முழங்கியிருந்தார். பிறகு ஏன் அச்சம்?
பாரதியை ஒதுக்கிவிட்டு சமூக சிந்தனைகளை முன்னெடுக்க முடியாது. குறுகிய காலமே அவன் வாழ்ந்தாலும், அவர் கூறி சென்றவை எக்காலத்திற்கும் பொருத்தமானவை. சமூக அவலங்களை தட்டிக்கேட்டதில் பாரதிக்கு நிகர் யாருமில்லை. இறைவனையே கேள்விக்கு உட்படுத்தியவன் முண்டாசுக் கவிஞன்.
இன்றும் பல நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தினரின் பிரதான உணவாக கஞ்சியே உள்ளது. அந்த கஞ்சியை ஒரு குறியீடாக அளிப்பதற்கு தடை இருக்க முடியாது.