தமிழ் இனப்படுகொலையின் உச்சக் கட்டமான 2009இல் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இன அழிப்பின் 15ஆவது நினைவு ஆண்டு. இனப்படுகொலை என்பது ஒரு சில குறிப்பிட்ட நிகழ்வுகளால் மட்டும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. ஒரு குழுவை அல்லது இனத்தை அகற்றுவதற்கும் அழிப்பதற்கும் குறிப்பிட்ட தரப்பினால் திட்டமிட்டு, தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும் செயல்முறை. சுதந்திரம் அடைந்ததிலிருந்து இலங்கை அரசானது இனப்படுகொலையின் பாதையிலேயே திட்டமிட்டுப் பயணித்துக் கொண்டிருக்கிறது. முதலில் இலங்கை அரசு திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் உரிமையை மறுக்க ஆரம்பித்தது; பின்னர் படிப்படியாக தமிழ் மக்களை வகைதொகையின்றிக் கொலை செய்து இன அழிப்புச் செய்யும் தொடர் நிகழ்வுகளை ஆரம்பித்தது.
15 ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்கா அரசு வேண்டுமென்றே பொதுமக்களைக் குறிவைத்து, கடுமையான எறிகணை வீச்சுகள், கொத்துக்குண்டுகள் போன்ற கொடிய தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட ‘போர் தவிர்ப்பு’ பாதுகாப்பு வலயங்களில் தஞ்சமடைந்த மக்களைத் தாக்கிக் கொன்றது. மே 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடந்த காலப் பகுதியில் மட்டும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற் போயுள்ளனர். அதேபோல், 1980களின் பிற்பகுதியிலிருந்து உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் சிறிலங்கா இரண்டாவதாக நாடாக உள்ளது. தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது எண்ணற்ற உறவுகளின் கொடூரமான இழப்பையும் துயரையும் அனுபவித்திருக்கிறார்கள்.
சட்டமூலம் 104: தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்
தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக, பின்வரும் கல்விச் சபைகள் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரத்தை அங்கீகரித்துத் தங்கள் மாணவர்களுக்குத் தொடர்ந்து கற்பித்து வருகின்றன:
ரொறன்ரோ பிரதேச கல்விச் சபை
ரொறன்ரோ கத்தோலிக்க கல்விச் சபை
யோர்க் பிராந்திய கல்விச் சபை
பீல் பிரதேச கல்விச் சபை
டுரம் பிராந்திய கல்விச் சபை ஆகியன அவற்றில் அடங்கும்.
பல ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பாடசாலைகளில் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரத்தை நினைவுகூரும் வகையில் தங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல், பயிலரங்குகள் மற்றும் நினைவேந்தல்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு முன், ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய மாகாண போக்குவரத்து துணைஅமைச்சாராக விளங்குபவருமான விஜய் தணிகாசலம் அவர்கள், தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டமூலம் 104இனை வெற்றிகரமாக நிறைவேற்றினார். ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று முடிவடையும் ஏழு நாட்களை தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரமாக (மே 12 – 18) சட்டமூலம் 104 பிரகடனப்படுத்துகிறது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தமிழின அழிப்பினை அங்கீகரிக்கும் சர்வதேச நாடுகளில் முதலாவது பிராந்தியமாக ஒன்ராறியோ மாகாணம் விளங்குகிறது. ஒன்ராறியோவில் வாழும் தமிழ் மக்களுக்கு இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு அம்சமாகும்.
தமிழின அழிப்பு நினைவு நாள், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களை நினைவூட்டுவதாகவும், அத்தகைய செயல்களை என்றும் மறக்காமல் இருப்பதை உறுதிசெய்வது எம் அனைவரினதும் கடமையாகும். நாம் வாழும் அந்தந்த நாடுகளில் நாம் எமது இன அழிப்பின் வலிகளை நினைவுகூர்வதுபோல், உலகெங்குமுள்ள தமிழ் மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து வருகிறோம்.
எம் தேசத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு காரணமான குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதும், தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதும், இவ்வாறான அட்டூழியங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதும் நம் அனைவரதும் பொறுப்பாகும். தமிழின அழிப்பைப் பாடமாகக் கற்று, அதனை அனைவருக்கும் பயிற்றுவித்து, அதன்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அடுத்த தலைமுறைக்கு விழிப்பூட்டி, அவர்களின் தலைமுறையினரின் வரலாற்றினைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களும் இந்த வரலாற்றின் ஒரு பகுதி என்பதை அங்கீகரிக்கவும் வலுவூட்டுவோம்.
எனவே, நாம் ஒன்றுகூடி உரக்கச் சொல்வோம், இத்துயரம் இனி ஒருபோதும் நடக்காதென்று.