நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டு கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக் கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, காய்கறி கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. அன்றைய தினம் ரோஜா கண்காட்சியும் தொடங்கி நடைபெற்றது. ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி நிறைவடைந்து விட்டது.
இன்று (மே 24) குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது. இதனையொட்டி பூங்கா முழுவதும், பல்வேறு வகையான பழ வகைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக, பூங்காவின் நுழைவு வாயிலில் கண்காட்சியின் 64-வது ஆண்டை நினைவூட்டும் வகையில் ஆப்பிள், அன்னாசி, மாதுளை, வாழைப்பழம், பலாப்பழம், ஆரஞ்சு உள்பட அனைத்து வகை பழ வகைகளையும் கொண்டு நுழைவு வாயில் அலங்காரம் செய்யப்பட்டது. சிம்ஸ் பூங்கா தொடங்கி 150-வது ஆண்டு ஆவதையொட்டி அதனை கொண்டாடும் விதமாக பூங்காவில் மாதுளை, டிராகன், ஆரஞ்சு பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
சுற்றுலா பயணிகள், குழந்தைகளை கவர்ந்திழுக்கும் வகையில் பழ வகைகளை கொண்டு பல்வேறு வனவிலங்குகளின் உருவங்கள், கார்ட்டூன் பொம்மைகளும் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
சாத்துக்குடி, திராட்சை, ஸ்ட்ராபெரி பழங்களால் டைனோசர் உருவமும், எலுமிச்சம்பழங்களை கொண்டு வாத்து உருவமும் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
இதுதவிர, பேரீச்சம் பழம், ஸ்ட்ராபெரி, முந்திரிப் பழங்களால் நத்தை உருவமும், பூசணிக்காய், மாம்பழங்களை கொண்டு கார்ட்டூன் உருவமும் வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதுமட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்காக பூங்காவில் 3.14 லட்சம் மலர் செடிகள் மலர் மாடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
பழக் கண்காட்சியை கலெக்டர் அருணா தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சி தொடங்கியதை அடுத்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
குழந்தைகள் கார்ட்டூன் பொம்மைகள், வனவிலங்குகளின் உருவங்களை பார்த்ததும் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியடைந்தனர். அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரிய வகை பழங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். பழக் கண்காட்சி வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.
கண்காட்சியை காண வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அ ளவிலான சுற்றுலா பயணிகள் குன்னூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் குன்னூர் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.