-கட்டுரையாளர்:- வி.எஸ்.சிவகரன் –
தேசியம் என்பது இனம், மொழி, பண்பாடு – நாகரிகம், வாழ்வியல் முறைமை, வரலாற்றுத் தொடர்ச்சியை மரபு வழியாக பின்பற்றும் நடைமுறை ஒழுங்கு, அதன் தொன்மம், மரபுரிமையைப் பேணிக் காக்கும் கூட்டுப்பொறுப்பு என பல நிலையியல் இருப்பு செயல்முறை வழித்தோன்றல்கள் யதார்த்த உணர்வுகளுடன் மேலிடை கொள்வதாகும். அதுவே இருப்பியல் நிலையியல் கோட்பாட்டை நிலைநிறுத்தும் மாறலி அற்ற மரபு நிலையாகும். இது அடிப்படைக் கோட்பாட்டுச் சித்தாந்த நகர்வியல் போக்காகும்.
இத்தேசக் கோட்பாட்டை கட்டமைப்பதற்கு மொழி, பண்பாட்டியல் ஒழுங்கு முறைமை, ஒருங்கிணைந்த வரையறுக்கப்பட்ட நிர்ணய எல்லை, நிர்வாக முறைமை, உணர்வியல் கோட்பாடு, மரபுசார் பொருளாதாரம், உற்பத்தியாக்கம், தன்னாட்சி முறைமை, சுயநிர்ணய இருப்பிற்கான சுயமரியாதை கோட்பாடு என நின்று நிலைக்கக்கூடிய, வலுக்குன்றா, நிர்ணய நிலையை வலுவேறாக்கல் கடந்து, எக்காலமும் நிலைபேண்தகு உறுதித் தன்மையை உருக்குலையாமல் வலுக்குன்றாமல் கட்டமைப்பை நிலை தகு ஒழுங்கில் வலிமையோடு வல்லாளுமை இருப்புடையதாக்கி, தொலைநோக்கு சித்தாந்தத் துவத்தை ஒருமுகப்படுத்தி, வல்லாண்மையின் நிலையை நிறையாண்மைக்குட்படுத்துவதே தேசத்து தேசியம்.
இதில் சற்று வலிமையாக, எமது மண்ணில் எம்மை நாமே ஆளும் நிலையை தோற்றுவித்து, தாயகத்து உணர்வில் தமிழ்த்தேசியத்தை புகுத்தி, தன்னாட்சியை நிறுவி சுயநிர்ணய உரிமையை நமக்காக நாமே உருவாக்கிக் கொள்ளும் வலிமையான இரு கருத்து நிலையற்ற செயற்பாட்டு மைய வாதம் கொண்ட சமத்துவ சமநீதி க்குட்பட்ட வாழ்வியல் உணர்வை கட்டமைப்பதே தமிழ் தேசிய அடிப்படை மரபியல்பு நிலைப்பாடாகும். இதையே புலிகளும் பின்பற்றினார்கள். இதில் சில தேசிய பல்வகைமை மாறுபட்ட நிலைகளும் உண்டு.
ஆகவே, தமிழ்த் தேசியம் என்றால் என்ன, புலிகளை ஆதரித்தால் அவர்கள் தமிழ்த் தேசியவாதிகள், மாற்றுக் கருத்துடையோர் துரோகிகள் என்றும் எழுதப்படாத பொது விதி இங்கு உண்டு. அவரவர் இருப்பு நிலையை உணர்ந்தே தமிழ் தேசிய வாத வரைவிலக்கணமும் இருப்பியலாளர்களின் நகர்வுகளை மையப்படுத்தியே கட்டமைக்கப்படுகிறது. இதற்கு எழும் வாழ்வொழுங்கு நடைமுறையும் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன.
இவை மாறுபட்ட காழ்ப்புணர்வு கருத்தியல் தோற்றமும் உண்டு.
இவை காலத்தால் நின்று நிதானமாக நிலைத்து நிமிர்ந்து எழுந்து நிதானிக்க கூடிய ஏது நிலைகளை ஒருமித்த கருத்துடையவர்களை ஒப்புவித்து வெளிப்படுத்தும் ஓர் யுக்தி ஆகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் திடீர் தமிழ்த் தேசியவாதம் என்பது பலரை வியக்க வைத்துள்ளது.
சிலரை விமர்சிக்க வைத்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக எதையெல்லாம் கேள்விக்கு உட்படுத்தி எதிர் விவாதம் செய்தாரோ அதற்கு நேர்மாறாக தூய தமிழ் தேசியம் பேசும் நிலையை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ தோல்வி கற்றுக் கொடுத்திருக்கிறது.
தமிழ் மக்களின் நாடித்துடிப்பை எண்ணத்து உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பது மிக நீண்ட காலமே.
அரசியல் என்பது காலத்துக்கு காலம் மக்களின் அடிப்படை உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையிலே நகர்வியல் போக்கு கோட்பாட்டு சித்தாந்தத்திற்கு குறை ஏற்படாத வகையில், நின்று நிதானமாக சமயோசிதமான அணுகுமுறையுடன் நகர்த்து வோர்களையே தேர்தல் அரசியல் கடந்தும் இருப்பை நிலை நிறுத்த முடியும் என்பதே வகுக்கப்படாத நடப்பு விதி.
இதை சுமந்திரன் புரிந்து கொள்ளாமல் நகர்ந்ததே தோல்விக்கு அடிப்படை காரணமாக இருக்கலாம். யதார்த்த வெளிப்படைத்தன்மையும் பல சந்தர்ப்பத்தில் எதிராக மாறுவதுண்டு. யாவகராயினும் நா காக்க.
அறிவு, ஆளுமை, ஆற்றல், வல்லமை, மொழிப்புலமை, தர்க்கவியல் நுட்பம், சட்டப் புலமை, இராஜதந்திர – இராஜிக அணுகுமுறை, வெளிப்படைத்தன்மை, பேச்சாற்றல் – இவை எல்லாம் இருந்தும் தமிழ் மக்களின் இதயத்தால் நேசிக்க கூடியவராக இருக்கவில்லை. இன விடுதலைக்குப் போராடிய இனம் தனது வலி சுமந்தவர்களையும் அதை உணர்ந்து புரிந்து கொண்டவர்களையும் தான் தலைவர்களாக அழகு பார்க்கும்.
சுமந்திரனை அரசியலுக்கு அழைத்து வந்த சம்பந்தன் அவர்களும் ஒரு வலிமையான தூய தமிழ்த்தேசியவாதி இல்லை. சுமந்திரனின் அரசியல் அனுபவமின்றிய எல்லை மீறிய வார்த்தைகளை உடனுக்குடன் கட்டுப்படுத்தி, வழிபடுத்தி இருந்தால் சுமந்திரனுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாது, புலிகளையும் மனித உரிமைகள் விவகாரத்தில் விசாரிக்க வேண்டும் எனவும், சர்வதேச விசாரணை முடிந்து விட்டது எனவும், படிப் பறிவில்லாதவர்களும் வேலையில்லாதவர்களும்தான் வடகிழக்கில் போராடினர் என்றும், முஸ்லிம்கள் வெளியேற்றம் என்பது புலிகளின் இனச்சுத்திகரிப்பு என்றும் அவ்வப்போது விளித்து வந்ததன் விளைவே இந்த நிலைமை.
தமிழ் தேசிய நிகழ்வுகளில் பெரிய அக்கறை செலுத்த தவறியவையும் இதில் அடங்கலாம். அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் இருக்கலாம். சந்தர்ப்ப சூழ்நிலைகளும் இருக்கலாம். அது அவரவர் மன பிரதிபலிப்பு.
ஆனால் தமிழ்த் தேசியத்திற்கு சுமந்திரன் மீது கூட்டுக் கோபம் உண்டு. துரோகி பட்டம் என்பது மிக மலிவாக ஏற்புடையது. மக்கள் மனங்களில் பதியக்கூடியது. ‘எப்பொருள் யார்,யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ எனும் வள்ளுவ வாக்கை உணர்வுச் சிந்தனை ஒருபோதும் அறிவார்ந்து நோக்குவதில்லை.
புலிகளின் தியாகத்தை மலினப் படுத்துபவர்களை தமிழ்த்தேசிய அரசியல் ஒருபோதும் இடமளிப்பதில்லை. அதனால்தான் விக்னேஸ்வரன் ஆயுதப் போராட்டம் பற்றி தவறான புரிதலுடன் வடக்கு மாகாண சபை முதல்வராகிய போதும், ஒரு வருட காலத்தில் மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவராக தமிழ்த் தேசிய அரசியலை முதன்மைப்படுத்தி நகரத் தொடங்கினர்.
அதனால்தான் விமர்சனங்கள் கடந்தும், சிங்கள சம்பந்தி நிலையை மறந்தும், தமிழ் மக்கள் மிகப்பெரிய ஆதரவு வழங்கினார்கள். அதை அவர் தக்க வைக்க முடியாமல் தடுமாற வைத்து விட்டார்.
புலிகளுக்கு எதிராக இருந்து, பல்வேறு விதமான காட்டிக்கொடுப்பு, கூட்டிக்கொடுப்பு, கடத்தல் என ஒட்டுக் குழுக்கள் பல. புலிகளின் துரோகிகள் பட்டியலில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகளை புலிகள் ஏற்றுக் கொண்டதன் ஊடாக எருசலேம் நகரத்து புனித நீரும் காசியின் புண்ணிய தீர்த்தமும் தெளித்து துரோகி பட்டியலில் இருந்து தியாகி நிலைக்கு பாவம் விமோசனம் கொடுத்து உயர்த்தப்பட்டமை போல் உணர்ந்து கொண்டனர் .
அதனால்தான் இன்னும் அவர்கள் அரசியல் நகர்கிறது. இவர்களது கடந்த காலம் இலகுவில் எவரும் மறந்துவிட முடியாத கறை படிந்தவை. யுத்தத்தை நிறுத்தினால் புலிகளுக்கு ஒட்சிசன் கொடுத்த மாதிரி என்ற சித்தார்த்தன் கூட்டமைப்பில் சேர்ந்ததால் அவரும் தியாகி ஆகிவிட்டார்.
ஆகவே சுமந்திரன் தனது கடந்த கால தவறுகளை உணர்ந்து இதில் இருந்து தெளிந்து எழுந்தால் தமிழ் தேசியம் தனதாக்கிக் கொள்ளும் நிலை ஏற்படலாம்.இதில் பட்டறிவு அனுபவத்தால் வருகின்ற உணர்வுத்தெளிவு, அரசியல் கடந்து, இலட்சிய இருப்பிற்கான செல்நெறியை தீர்மானிக்க வல்லதாக அமைய வேண்டும்.
தனது இன்றைய சக பாடிகளையும் விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களினுடைய உணர்வுகளை நன்கு புரிந்து கொண்டு அவர்களின் மீள் வாழ்வுக்கும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவும் முள்ளிவாய்க்கால் திட்டமிட்ட இனப்படுகொலை என சான்று படுத்தவும் தனது சட்ட புலமையை உபயோகப்படுத்த வேண்டும்.
வடக்கு – கிழக்கு எங்கும் பல்வேறு வழக்குகள் கட்டணம் பெறாமல் நீதிமன்றங்களில் முன்னிலை யாகுவது போல் தமிழர்களின் இலட்சிய வேட்கையான தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை – இக்கோட்பாட்டை நடைமுறை சாத்தியமாக்க இதய சுத்தியோடு உளப்பூர்வமாக பணியாற்ற வேண்டும் என்பதே சுமந்திரனை எதிர்ப்பவர்கள் கூட எதிர்பார்க்கும் விடயமாகும்.
அவ்வாறு தமிழ் தேசிய எழுச்சி நிலையில் தொடர்ந்தால் இன்றைய வாக்கு வணிகர்களின் தமிழ் தேசியவாத இருப்பு என்பது கேள்விக்குறியாக மாறக்கூடிய நிலை தோன்றலாம். ஆகவே சுமந்திரன் தன்னை ஒரு தூய தமிழ் தேசியவாதியாக நிலை நிறுத்த வேண்டிய கால நிர்பந்தத்துக்கு நிர்கதியாக்கப்பட்டுள்ளார் .என உணர முடிகிறது.
ஆகவே நிலை தடுமாறாமல் இப்பயணத்தில் அவர் தொடர்ந்து பயணிக்க வேண்டும். அப்போதுதான் காலத்தால் உள்ளீர்த்துக் கொள்ளும் நிலை ஏற்படலாம்.
காலம் எந்த இடை வெளியையும் இதுவரை நிரப்பாமல் விட்டதில்லை. எனவே சுமந்திரனின் செயலே முடிவுறுத்தும் காலத்தால் கரை யேற்றமா ? அல்லது கறி வேப்பிலையா?? என்பதை.
தொகுப்பு:-எஸ்.ஆர்.லெம்பேட்