ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்
கனடாவில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் ரொறன்ரோ மாநகரத்தில் அமைந்துள்ள ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் ஸ்காபுறோ வளாகத்தில் எதிர்வரும் யூன் மாதம் 1ம்.2ம், 3ம் திகதிகளில் நடைபெறவுள்ள கோலாகலமாக நடைபெறவுள்ள 15ம் உலகத் தமிழாசிரியர்கள் மாநாட்டில் தமிழ்க் கல்வி சார்ந்ததும் தமிழிசை சார்ந்தும் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என கனடியத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் படிமுறைத் தமிழ் ஒன்றியத்தின் நிறுவனருமான சுப்பிரமணியம் இராசரத்தினம் ரொறன்ரோ விமான நிலையத்தில் தெரிவித்தார்.
மேற்படி 3 நாள் தமிழாசிரியர்கள் மாநாட்டில் விசேட நிகழ்ச்சியாக நடைபெறவுள்ள ‘தமிழோசை’ என்னும் சங்கத் தமிழ் பாடல்கள் மற்றும் தமிழிசைப் பாடல்கள் ஆகியவற்றை இசையோடு பாடும் நிகழ்ச்சியை நடதத தமிழ்ச் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் தமிழ் மொழி மீது பற்றுக் கொண்டவருமான ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் கடந்த புதன்கிழமை ரொறன்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கினார்..
அங்கு திரண்டு வந்து ஜேம்ஸ் வசந்தன் அவர்களை வரவேற்ற தமிழ் அன்பர்கள் இசைஅபிமானிகள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் மத்தியில் அவரை அறிமுகம் செய்து வைத்தார் கனடியத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் படிமுறைத் தமிழ் ஒன்றியத்தின் நிறுவனருமான சுப்பிரமணியம் இராசரத்தினம்.
தொடர்ந்து ஊடகவியலாளர்களுடன் உரையாடிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் ;எனது இ ந்த விஜயம், கனடாவிற்கான முதலாவது விஜயமாக இருந்தாலும் தமிழிசை சார்ந்து சங்கத் தமிழ் பாடல்கள் சார்ந்து உள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்” என்றார்.